
திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. தி.மு.க., சார்பில் பிரசாரம் செய்து வந்த அமைச்சர் ஸ்டாலின் மற்றும் மு.க. அழகிரி ஆகியோர் மாலை 3.30 மணிக்கு தங்கள் பிரசாரத்தை திருமங்கலத்தில் முடித்தனர். அ.தி.மு.க., அணி சார்பில் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட வைகோ தனது பிரசாரத்தை மாலை 4.47 மணிக்கும், தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேம லதா ஆகியோர் மாலை 4.55 மணிக்கும் திருமங்கலம் நகரில் தங்கள் பிரசாரத்தை முடித்துக் கொண்டனர். சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் சரத்குமார் மாலை 5 மணிக்கு நிலையூரில் தனது பிரசாரத்தை முடித்தார்.
மகிழ்ச்சியில் மக்கள் திணறல்: "காஸ்ட்லி' தேர்தல்: வாக்காளர்களுக்கு இரு கட்சிகளும் போட்டி போட்டு பணத்தை வாரி இறைத்ததால் மக்களின் கைகளில் பணப்புழக்கம் அமோகமாக இருந்தது. பலர், வேலைக்குக் கூட செல்லாமல் கிடைத்த பணத்தை குஷியாக செலவழித்தனர். தமிழகத்தில் இதுவரை நடந்ததிலேயே "காஸ்ட்லி' தேர்தலாகவும் இது அமைகிறது.பணம் "விளையாடிய' மகிழ்ச்சியில் மக்கள் திக்குமுக்காடி இருப்பதால் எந்தக் கட்சிக்கு ஓட்டளிப்பர் என்ற குழப்பம் அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. பணத்துடன் பல ஊர்களில் அல்வா, கேக் தரப்பட்டது. மிக்சி போன்ற பரிசுகளும் தரப்பட்டதால் குழப்பம் மேலும் அதிகரித்தது. அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக முன்பு இருந்த திருமங்கலம் இனிமேல் எப்படி இருக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுந்து விட்டது. இருகட்சிகளும் நன்றாகவே பிரசாரம் செய்தன. மக்கள் மீது காட்டிய "அன்பு' தங்களுக்கு ஓட்டுக்களை அள்ளித்தரும் என்று தி.மு.க., திட்டமிடுகிறது.
ஸ்டாலின், மு.க.அழகிரி : ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய், இலவச "டிவி', இலவச நிலம், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, பெண்கள் திருமண நிதி போன்ற திட்டங்களும் சாதகமாக இருக்கும் என்று தி.மு.க., கணக்கு போடுகிறது. முதல்வர் கருணாநிதி பொதுக்கூட்டத்தில் பேசினார். அமைச்சர் ஸ்டாலின், மு.க.அழகிரி தொகுதி முழுவதும் சுற்றிவந்து சாதனைகளை சொல்லி ஓட்டுக் கேட்டு வருகின்றனர். இக்காரணங்களால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தி.மு.க.,வினர் நினைக்கின்றனர். முன்பு கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்டுகள், இப்போது இல்லை என்றாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. தொகுதியில் பலம்பெறாத பா.ம.க., நடுநிலை வகிப்பதும் பாதிப்பை ஏற்படுத்தாது. அ.தி.மு.க.,வினரோ, மின் வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளையே முன்னிறுத்தி பிரசாரம் செய்தனர்.
"தலைவலியே' இக்கட்சி தான். : இவையெல்லாம் தங்களுக்கு ஓட்டுக்களை பெற்றுத்தரும் என்று இக்கட்சியினர் நினைக்கின்றனர். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, மூன்று நாட்கள் முகாமிட்டு தொகுதியின் மூலைமுடுக்கெல்லாம் சுற்றினார். பொதுக்கூட்டத்திலும் பேசினார். அதற்கு முன்னதாகவே, அ.தி.மு.க., நிர்வாகி போன்றே செயல்பட்டு பம்பரமாக சுழன்று பணி பார்த்தார் வைகோ. இவை வெற்றி வாய்ப்பை தரும் என்று அ.தி.மு.க., நினைக்கிறது.தேர்தல் "ஓட்டப் பந்தயத்தில்' இக்கட்சிகளுடன் சேர்ந்து தே.மு.தி.க.,வும் ஓடுகிறது. தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் "தலைவலியே' இக்கட்சி தான். இக்கட்சியினரால் வாக்காளர்களை "கவனிக்க' முடியாவிட்டாலும், நிறைய இளைஞர்கள் ஆர்வத்துடன் பிரசாரம் செய்தனர்.
விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா "இரட்டைக் குழல்' துப்பாக்கியாக தொகுதி முழுக்க தொடர்ந்து வலம் வந்தனர். இவர்கள் யார் ஓட்டுக்களை அள்ளுகின்றனர் என்பது விடை தெரியாத கேள்வி. சரத்குமாரும் தன் பங்கிற்கு ஓட்டுக்களை கவர்வார். வாக்காளர்கள் எல்லாவற்றையும் சிந்தித்து, "கூட்டிக் கழித்துப்' பார்த்து தான் ஓட்டளிக்கப் போகின்றனர். ஒவ்வொரு கட்சியும் போடும் கணக்கு சரியாக வருமா என்பதை "திருவாளர் திருமங்கலம்' தீர்மானிப்பார்.
-நமது நிருபர் குழு-