
புதுடில்லி: "நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் மற்றும் சென்னையில் பயிற்சி பெற்ற கமாண்டோ படை அமைப்பை நிறுவ, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் வாசித்த முதல்வர் கருணாநிதியின் உரை:
மும்பையில் நடந்த தாக்குதல், நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சவால்களின் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. பிரிவினைவாத சக்திகளாலும், எல்லைக்கு வெளியே உள்ள ஏஜென்சிகளாலும் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த சவால்களை, மத்திய, மாநில அரசுகள் இடையே வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம்தான் சமாளிக்க முடியும்.தமிழகம் எவ்வித மிகப்பெரிய பிரச்னைகளும் இல்லாமல் உள்ளது. இந்த நிலையை தக்க வைக்க, மத்திய அரசு, தமிழகத்துக்கு தொழில்நுட்ப ரீதியாகவும், நிதியுதவி மூலமாகவும் தொடர்ந்து உதவ வேண்டும். தமிழகத்தில், "கியூ' பிரிவு சி.ஐ.டி., சிறப்பு அதிரடிப்படை, தேசிய பாதுகாப்புப் படை பயிற்சி அளித்த கமாண்டோ படை உட்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன.தமிழக கமாண்டோ பள்ளியில், நவீன ஆயுதங்களைக் கையாள போலீசாருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அமைப்பு ரீதியான குற்றப் புலனாய்வுப் பிரிவை துவக்குவதற்கும் அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.முக்கிய நிறுவனங்கள், தலங்கள், சிலைகள் போன்றவற்றைக் கண்டறிந்து, அவற்றுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, சேலம் மற்றும் சென்னையில் பயிற்சி பெற்ற கமாண்டோ படை அமைப்பை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது. முக்கிய இடங்கள், நிறுவனங்களில் சிறிய அளவிலான கமாண்டோக்களை நிறுத்துவதற்குப் பதிலாக, இந்த நகரங்களில் இப்படையினரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
எவ்வித சவால்களையும், பிரச்னைகளையும் சந்திக்கத் தயாரான நிலையில், தமிழக போலீசாருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், நாட்டின் இதர பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் காரணமாக, உள்நாட்டுப் பாதுகாப்பில் தனது வியூகங்களை மாற்றிய அமைக்க வேண்டிய கட்டாயம் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ளது.மேலும், மிகவும் நீளமான சர்வதேச கடல் எல்லை இருப்பதாலும், இலங்கையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதாலும், இது அவசியமாகிறது. மத்திய, மாநில உளவுப் பிரிவுகளுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்தி, தகவல்களைப் பரிமாறிக் கொள்வது அவசியமாகிறது. தீவிரவாத தடுப்பு நிபுணர்களை நியமித்து, அவர்களுக்கு வெளிநாட்டு மையங்களில் பயிற்சி அளிப்பது மிகவும் உதவியாக இருக்கும்.
இதுதவிர, கறுப்புப் பண பரிமாற்றம், போதைப் பொருள் கடத்தல் தொடர்புகளை ஒடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு அவசியமாகிறது. போலீஸ் படையை நவீனப்படுத்த மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி போதுமானதல்ல. நவீன கருவிகளை மத்திய அரசு சப்ளை செய்ய வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி தன் உரையில் கூறியுள்ளார்.