சபரிமலை: சபரிமலையில், மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் துவங்குவதற்கு முன்பே, 25 லட்சம் கன்டெய்னர்களில் அரவணை பாயச பிரசாதம் தயாராக வைக்க, பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும், சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு உற்சவ காலங்களில், அங்கு செல்லும் கோடிக்கணக்கான பக்தர்களில், பலருக்கும் அரவணை பாயசம், அப்பம் போன்ற பிரசாதங்கள் வாங்க இயலாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதைக் களைய, இவ்வாண்டு, அரவணை பாயச பிரசாதம் தானியங்கி இயந்திரங்கள் மூலம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. எளிதில் கெட்டு போகாத வகையில், சுத்தமாக கன்டெய்னர்களில் இவை அடைக்கப்படும்.
அனைவருக்கும் கிடைக்கும் வகையில், 25 லட்சம் கன்டெய்னர்களில் அரவணை பாயசப் பிரசாதம் தயார் நிலையில் வைக்க, தேவஸ்வம் போர்டு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அவற்றை தயாரிக்க தேவையான அனைத்துப் பொருட்களும் தயார் நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது, 7 லட்சத்து 30 ஆயிரம் கன்டெய்னர்களில் இப்பிரசாதம் அடைக்கப்பட்டு விட்டது. இத்தகவல்களை அய்யப்பன் கோவில் செயல் அதிகாரி ஜெயகுமார் தெரிவித்தார்.
| வாசகர் கருத்து |