புதுடில்லி: தற்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா பற்றி, முன்னாள் கமிஷனர் கோபாலசாமி, ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் நகலை தர வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, மத்திய தகவல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது.
தலைமை தேர்தல் கமிஷனராக கோபாலசாமி இருந்த போது, தேர்தல் கமிஷனராக இருந்த நவீன் சாவ்லா பற்றி, ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், நவீன் சாவ்லா பாரபட்சமாக செயல்படுவதாகக் கூறியதோடு, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்தக் கடிதத்தின் நகலை தர வேண்டும் எனக்கோரி, அகர்வால் என்பவர் விண்ணப்பித்தார். ஆனால், அவரின் மனுவை, ஜனாதிபதியின் செயலகம் மறுத்தது.
அந்தக் கடிதத்தை வெளியிடுவது ஒருவரின் அந்தரங்கத்தில் தலையிடுவது போன்றது என்றும் கூறியது. ஆனால், கடிதத்தின் நகலை கோரிய அகர்வாலோ, "கடிதத்தில் உள்ள விவரங்கள் ஏற்கனவே மீடியாக்களில் வெளியாகி விட்டன. எனவே, இந்த விஷயத்தில் அந்தரங்க விவகாரத்தில் தலையிடுவது என்ற கேள்விக்கே இடமில்லை' என, தெரிவித்தார். இதையடுத்து, அகர்வால் மனு மீது முடிவு எடுப்பதை மத்திய தகவல் ஆணையர் வஜாகத் அபிபுல்லா நிறுத்தி வைத்துள்ளார்.
| வாசகர் கருத்து |