புதுடில்லி : "லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய எடுக்கப்பட்டுள்ள ஐ.மு., கூட்டணி அரசின் முடிவு நாட்டின் நலனைப் பாதிக்கும்' என, மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது, விலைவாசி உயர்வு, பொருளாதார மந்த நிலையால் பெருமளவில் வேலை இழப்பு உட்பட பலவற்றிற்கும் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், அடுத்த மாதம் 16ம் தேதி, பார்லிமென்ட் முன், பெரியளவில் தர்ணா போராட்டம் நடத்த ஏற்கனவே முடிவாகியிருக்கிறது.
லாபத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களின், 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாகவும், அதற்கான கொள்கைகள் உருவாக்கப் பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் என, இடதுசாரி கட்சிகள் நேற்று கோரிக்கை விடுத்தன. "பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து, கிடைக்கும் நிதியை சமூக துறைகளுக்கு பயன்படுத்த உள்ளதாக கூறப்படுவது கண்துடைப்பு' என, இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூ., - இந்திய கம்யூ., -ஆர்.எஸ்.பி., மற்றும் பார்வர்டு பிளாக் ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
சி.ஐ.டி.யு., தலைவர் எம்.கே.பாண்டே கூறுகையில், "இடதுசாரி கட்சிகளின் நெருக்கடியால், பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது என்ற தீர்மானத்தை மத்திய அரசு முன்பு எடுக்காமல் இருந்தது. பங்குகள் விற்பனையின் மூலம் திரட்டப்படும் 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதியானது, சமூக துறைகளுக்கான மூலதனமாக பயன்படுத்தப்படும் என தவறான எண்ணத்தை அரசு தோற்றுவிக்கிறது. இது, நாட்டு நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு இல்லை' என்றார். இதுகுறித்து ஏ.ஐ.டி.யு.சி., தேசிய செயலர் டி.எல்.சச்தேவ் கூறுகையில்,"சமூக உள்கட்டமைப்பு துறைகளுக்கான மூலதனங்களுக்கு பட்ஜெட் மூலம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இது சரியான வழி அல்ல' என்றார்.
இதுகுறித்து பாரதிய மஸ்தூர் சங்கத் தலைவர் என்.எம்.சுகுமாரன் கூறியதாவது: சமூக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதியை திரட்ட மாற்று வழி இல்லை என அரசு தெரிவித்துள்ளது. நாட்டில், பெரியளவில் வரி ஏய்ப்பு செய்பவர்களிடம் வரிபாக்கியை வசூலிப்பது, வங்கி வராக்கடன் வசூல் ஆகியவற்றின் மூலம் இரண்டு லட்சம் கோடி ரூபாயை அரசு திரட்டலாம் என்று நாங்கள் பிரதமரிடம் முன்பே கூறியிருக்கிறோம். தற்போது, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதாக அரசு அறிவித்துள்ளது, நாட்டின் சொத்தை வெளிநாட்டவர் கையில் ஒப்படைப்பதற்கான வழி இது. இவ்வாறு சுகுமாரன் கூறினார்.
| வாசகர் கருத்து |