சென்னை : "மகா சிவராத்திரியை இம்மாதம் கொண்டாடுவதா, அடுத்த மாதம் கொண்டாடுவதா என்ற சர்ச்சை தேவையில்லை; அந்தந்த கோவில்களின் ஆகம விதிப்படி, மகா சிவராத்திரியை கொண்டாடுவதே சாலச் சிறந்தது' என, இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
சிவபெருமானுக்கு மிகவும் உகந்த விழாக்களில் ஒன்றான, மகா சிவராத்திரி விழா, ஆண்டு தோறும் மாசி மாதம் அமாவாசைக்கு முன் வரும், சதுர்த்தசி திதியன்று கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மகா சிவராத்திரி, ஒரு மாதம் முன்னதாக, தை மாதம் சதுர்த்தசி திதியன்றே கொண்டாடப்படுகிறது. இது, சிவாச்சாரியர்கள், சிவ பக்தர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "சிவராத்திரி என்பது திதிக்கு முக்கியத்துவம் அளித்து கொண்டாடப்படுவது. அதன்படி, மாசி அமாவாசைக்கு முன் வரும் சதுர்த்தசி திதியில் தான் சிவராத்திரி கொண்டாடப்பட வேண்டும். "திருதினஸ் பிருக் ஸ்மிருதி'படி, மகா சிவாரத்திரி, தை மாதம் 30ம் தேதி அதாவது பிப்., 12ம் தேதி கொண்டாடப்படுவது தான் சரி' என்கின்றனர், ஆகம வல்லுனர்களின் ஒருசாரார். இதை பின்பற்றி பெரும்பாலான சிவன் கோவில்களில் வரும் 12ம் தேதி, சிவராத்திரி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மற்றொரு தரப்பினர், "மாசி மகம், மகா சிவராத்திரி என சிவனுக்கு உகந்த இந்த வைபவங்கள் இரண்டும், மாசி மாதத்தை மையப்படுத்தியே நடக்க வேண்டும். மாசி முதல் தேதியன்றே அமாவாசை திதி வந்தாலும், அடுத்த அமாவாசை, பங்குனி 1ம் தேதி வந்தாலும், அதற்கு முன்னதான சதுர்த்தசி திதி, மாசி 30ம் தேதியே வருகிறது. "ஆகம சவுரமான' விதிப்படி, மகாசிவராத்திரி மார்ச் 13ம் தேதி தான் வருகிறது. அதனால், அன்று தான் மகாசிவராத்திரி கொண்டாடப்பட வேண்டும்' என்று சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். இதையும் ஒரு தரப்பினர் ஏற்று, அன்றே சிவராத்திரி கொண்டாட முடிவு செய்துள்ளனர். இது சிவ பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் கருத்தை கேட்ட போது, இணை ஆணையர் ஜெயராமன் கூறியதாவது: மகா சிவராத்திரி, சிவனுக்கு உகந்த வைபவம். இந்த விழா கொண்டாட்டம் குறித்து ஆகம விதிப்படி, அந்தந்த கோவில் சிவாச்சாரியர்களும், பொதுமக்களும் ஏற்கனவே முடிவு செய்து, அதன்படி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஊருக்கும், இடத்திற்கும் ஏற்ப சம்பந்தப்பட்ட கோவில்களின் ஆகம விதிப்படி இம் மாதமோ, அடுத்த மாதமோ, மகா சிவராத்திரி விழா நடைபெறலாம். ஊருக்கு தகுந்த விதிப்படியே விழா கொண்டாடப்பட வேண்டும்; அதில் சர்ச்சை ஏற்படுத்துவது தேவையற்றது; சர்ச்சையை தவிர்க்க, மகா சிவராத்திரியை இரண்டு முறை கூட கொண்டாடலாம். இவ்வாறு ஜெயராமன் கூறினார்.
| வாசகர் கருத்து |
''''திருந்தினஸ் பிருக் ஸ்மிருதி'''' என்று ஒரு ஸ்ம்ருதியும் இல்லை. 28-நெ வாக்கிய (பாம்பு) பஞ்சாஞ்கத்தில் ''''திருதினஸ்பிருக், ஸ்மிருதிபடி சாந்திர மஹாசிவராத்திரி'''' என்று உள்ளதைதில் கால் புள்ளியை (comma-வை) விட்டுவிட்டு, வார்த்தைகளைத் தவறாகப் பிரித்துத் தவறாக கூறி உள்ளீர்கள். ஃபெப்ரவரி 12-ம் தேதி சதுர்த்தஸியானது சூர்யோதயம் முன்னும், மறுநாள் உதயம் பின்னும் இருப்பதால் அது ''''திருதினஸ்பிருக் (த்ரி-தின-ஸ்பிருக்)'''', அதாவது ''''மூன்று நாட்களுக்கு தொடப்பட்ட'''', என்று போடப்பட்டுள்ளது. மேலும், சூர்யோதயமும் அஸ்தமனமும் ஊருக்கூர் மாறுமாதலால் தஞ்சைக்குள்ளதை, உதாரணமாக, சென்னைக்குத் திருதினஸ்பிருக் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. ஸ்மார்த்தர்களுக்கு ஸ்ம்ருதி தான் முக்கியம். ஆகையால் அவர்களுக்கு ஃபெப்ரவரி 12-ம் தேதி தான் சிவராத்ரீ என்று அநதப் பஞ்சாஞ்கத்தில் போட்டுள்ளது. ஸ்ம்ருதிகள்படி, மாகமாஸம், அதாவது சாந்திரமான மாஸம், தான் சிவராத்ரீ. ஃபெப்ரவரி 13-ம் தேதி ஸௌரமான மாதமான மாசி பிறந்து விடுகிறது.
|
by T Riki,chennai,India 10-02-2010 10:50:26 IST |
மாசி மாத சிவராத்திரி சரிதான் ..... மாத முதல் எழுத்து மா , சிவராத்திரி முதல் எழுத்து சி.......ஆகையால் மாசி தான் சரி
|
by s shanmugs,banaglore,India 10-02-2010 10:44:46 IST |