ஆமதாபாத்:குஜராத் மாநிலத்தில் சிவராத்திரியையொட்டி, 13 லட்சம் ருத்ராட்சங்களால் 25 அடி உயர சிவலிங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது.குஜராத், வல்சாத் மாவட்டத்தில் உள்ள கர்வல் கிராமத்தில் 25 அடி உயரமும், 13 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கம் ருத்ராட்சங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரம்பூரை சேர்ந்த வர்த்தகர் பதுக் வியாஸ் இந்த சிவலிங்கத்தை வடிவமைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த சிவலிங்கத்தை வடிவமைத்து அதற்கு ருத்ராட்சம் தேடி உருவாக்கும் வேலைகள் நடந்து வந்தன. இந்த முயற்சி, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து, பதுக் வியாஸ் குறிப்பிடுகையில், "கடந்த ஆண்டு 21 அடி சிவலிங்கத்தை வடிவமைத்திருந்தோம். தற்போது 25 அடி உயரமாக கூட்டியுள்ளோம். இந்த சிவலிங்கத்தை பார்க்க இரண்டு லட்சம் பேர் வருவர், என எதிர்பார்க்கிறோம். 15 நாட்கள் இந்த லிங்கம் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். பத்தொன்பது ஆண்டுகளாக ருத்ராட்சத்தின் மகிமை குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். தெய்வ சக்தி மிக்க இதன் புனிதத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளேன். ருத்ராட்சத்தின் மகிமை பற்றி இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளேன்.இவ்வாறு வியாஸ் கூறினார்.
| வாசகர் கருத்து |