சென்னை புறநகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் குடியிருப்புகளும், மக்கள் தொகையும் பல மடங்கு அதிகரித்துள்ளன. புறநகரில் சட்டம் ஒழுங்கை நெறிப்படுத்தி, குற்றங்களை தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம், சென்னை புறநகர் கமிஷனர் அலுவலகம் உருவாக்கப்பட்டது.
அதன் முதல் கமிஷனராக ஜாங்கிட் பொறுப்பேற்றார். சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் ஒன்று, பெண் வரவேற்பாளர் திட்டம். புகார் கொடுக்க செல்லும் பொதுமக்களிடம் கனிவுடன் பேசி புகார் பெறும் வகையில் உருவாக்கப்பட்டது. மேலும், அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தலா இரண்டு "அவுட் போஸ்டு'கள் திறக்கப்பட்டன. பொதுமக்களின் சேவைக்காக விரைவில் பாஸ்போர்ட் பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. முன்பு "வெரிபிகேஷன்' செய்து பாஸ்போர்ட் கிடைக்க ஒரு மாதத்திற்கு மேலாகும்.
இத்திட்டத்தின் மூலம் மிக விரைவில் "பாஸ்போர்ட்' கிடைக்கும் வகையில் கம்ப்யூட்டர் உதவியுடன் "வெரிபிகேஷன்' செய்யப்படுகிறது. சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் நேரடியாக மக்களிடம் குறைகளைக் கேட்டு பிரச்னைகளை தீர்த்து வைக்கிறார். இது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. போலீஸ் மற்றும் குடும்பத் தாரை தத்தெடுக்கும் மருத்துவ திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டது. அதன் படி, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனையும், டாக்டர் ஒருவர் தத்தெடுப்பார். அவர், போலீசாருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் மருத்துவ அறிவுரை, பரிசோதனை, சிகிச்சை அளிப்பார்.
சென்னை புறநகர் கமிஷனர் அலுவலகம் 17.3 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அது, கடந்த ஓராண் டில் புதுப் பொலிவு பெற்றுள்ளது. விளையாட்டுத் துறையில் போலீசார் சிறந்து விளங்குவதற்காகவும், பயிற்சிகள் மேற்கொள்ளவும் அனைத்து விளையாட்டு மைதானங்களும் சீர் செய்து மின்னொளி வசதியுடன் அமைக்கப் பட்டுள்ளன. மேலும், ஓய்வு அறைகள், உணவகம், உடற்பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் போலீசாரின் குழந்தைகள் விளையாட, அனைத்து வசதிகளும் கொண்ட பூங்கா ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது. மொத்தத்தில் சென்னை புறநகரில் கமிஷனர் அலுவலகம் உருவாக்கப்பட்டதால் பொதுமக்களும், போலீசாரும் பலனடைந்து, வரவேற்றுள்ளனர்.
சென்னை புறநகர் கமிஷனர் அலுவலகம் உருவாக்கப்பட்ட பின் கடந்த ஆண்டு 379 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், ஒரு கோடியே 73 லட்சத்து 71 ஆயிரத்து 636 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது. அவற்றில் 366 (97 சதவீதம்) வழக்குகள் கண்டறியப் பட்டு, ஒரு கோடியே 55 லட்சத்து 57 ஆயிரத்து 964 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. இந்த ஆண்டு 803 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இரண்டு கோடியே 31 லட்சத்து 76 ஆயிரத்து 348 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது. அவற்றில் 747 (81 சதவீதம்) வழக்குகள் கண்டறியப்பட்டு, ஒரு கோடியே 79 லட்சத்து 99 ஆயிரத்து 830 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன.
சென்னை புறநகர் கமிஷனர் அலுவலகம் உருவாக்கப்பட்ட பின் நடந்த 80 கொலை வழக்குகளில் 79 வழக்குகள் துப்புதுலக் கப்பட்டன. இது குறித்து சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் கூறுகையில், "முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட சென்னை புறநகர் கமிஷனரகத்தில் பல திட்டங்களும், பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. "புறநகர் கமிஷனர் அலுவலகத்தில் உருவாக்கப்பட்ட மைதானங்கள், கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகள் அனைத் தும் ஓய்வு நேரத்தில் போலீசாரால் உருவாக்கப்பட்டவை. கடந்த ஓராண்டில் சென்னை புறநகரைப் பொறுத்தவரை குற்றங்களின் எண்ணிக்கை, போக்குவரத்து, விபத்து, உயிரிழப்புகளும் வெகுவாக குறைக்கப் பட்டுள்ளன. 90 சதவீத குற்றங்களும் கண்டறியப்பட்டுள்ளன' என்றார்.
| வாசகர் கருத்து |