Current Happenings, Latest Incidents, Occurrence, Confrontation News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
சம்பவம்
இன்னமும் தொடர்கிறது ஜெய்ப்பூர் தீ : மக்கள் பாதிப்பு, கட்டடங்கள் சேதம்
நவம்பர் 03,2009,00:00  IST

Important incidents and happenings in and around the world

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், சீதாபுரத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன எண்ணெய் சேமிப்பு கிடங்கில் பிடித்த தீ, இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. மொத்தமுள்ள 11 டேங்குகளில் ஒன்பது டேங்குகளின் தீ அணைந்து விட்டாலும், இரண்டில் மட்டும் எரிந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், இந்த தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.



கடந்த வியாழக்கிழமை பிடித்த தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதால், தீப்பிடித்த பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் வசிப்பவர்களில் பலருக்கு, அரிப்பு, கண் எரிச்சல், மூச்சுத் திணறல் மற்றும் தோல் நோய் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



தீ விபத்து தொடர்பாக தலைமை தீயணைப்பு அதிகாரி ஈஸ்வர்லால் ஜாட் கூறுகையில், ""இரண்டு எரிபொருள் டேங்குகளில் மட்டும் இன்னும் தீ எரிந்து கொண்டிருக்கிறது. தீயின் வேகம் கணிசமாகக் குறைந்து விட்டாலும், முழுமையாக அது அணைய மேலும் ஒரு நாளாகும். ""நேற்று முன்தினம், தீ விபத்து நடந்த இடத்தில் பயங்கர சத்தம் ஒன்று கேட்டது. தீயின் வெப்பம் தாளாமல் டேங்குகள் உடைந்து விழுந்ததே அதற்கு காரணம். தீ அணைந்த பகுதிகளில் வேறு ஏதாவது உடல்கள் கிடக்கின்றனவா என, தீயணைப்புப் படையினர் தேடி வருகின்றனர்,'' என்றார்.



இந்தியன் ஆயில் நிறுவன சேமிப்பு கிடங்கில் தீப்பிடித்த அன்று, பயங்கர தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் டிரைவர் நேற்று முன்தினம் இறந்தார். அதே நேரத்தில், இந்த தீ விபத்தில் ஜீனஸ் ஓவர்சீஸ் என்ற தனியார் நிறுவனமும் பாதிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டிருந்த போது, கிஷன் சிங் தாகர் என்பவரின் உடல் மீட்கப்பட்டது. இதன் மூலம் இந்த தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்து நடந்த இடத்தில் ஏராளமான பறவைகளும் இறந்து கிடந்தன.



ஜெய்ப்பூர் கலெக்டர் குல்தீப் ரங்கா கூறியதாவது:



தீ விபத்தால் ஏற்பட்ட சேதத்தைக் கண்டறிய, தொழில்நுட்ப நிபுணர்கள் குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. தீ விபத்து நடந்த பகுதியில் ரயில் மற்றும் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அவை எல்லாம் மாற்று வழிகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.தீ விபத்து நடந்த இடத்தருகே பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த பாலத்தை பயன்படுத்த முடியுமா என்பதை ஜெய்ப்பூர் மேம் பாட்டு ஆணையத்தின் நிபுணர்கள் ஆய்வு செய்வர். அதன் பின்னரே அது போக்குவரத்துக்கு திறந்து விடப்படும். விபத்துக்கு உள்ளான நிறுவனத்தைச் சுற்றியுள்ள இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அங்குள்ள கட்டடங்கள் பாதிப்படையவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே, அவற்றை திறக்க அனுமதி வழங்கப்படும்.தற்போதைக்கு சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள கடைகள் மற்றும் அலுவலகங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு கலெக்டர் கூறினார்.



வரிகள் ரத்து அரசு சலுகை:



ஜெய்ப்பூர் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு சேவை வரி மற்றும் தீயணைப்பு சேவை வரி போன்றவற்றை செலுத்த வேண்டாம் என, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சீதாபுரம் பொருளாதார மண்டலத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கான மதிப்பு கூட்டு வரியும், மார்ச் 2010 வரை ரத்து செய்யப் பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் கடன் வாங்கியிருந்தால், அவற்றை செலுத்துவதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப் பட்டுள்ளது. அத்துடன் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கவும் ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கடன் கோரும் நிறுவனங்கள், அடுத்த ஏழு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் சம்பவம் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்