திருநெல்வேலி: நெல்லை பல்கலையில் இறந்த ஊழியரின் உடலுடன் வந்து, குடும்பத்தினர் துணைவேந்தரிடம் முறையிட்டனர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் காவலராக பணியாற்றுபவர் பிச்சாண்டி(58).
இவர், 58 வயதை அடைந்து விட்டதால், ஓய்வு பெற்றதாகக் கூறி, கடந்த 31ம் தேதி பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். பல்கலை பணியில் காவலர், துப்புரவு தொழிலாளி போன்றோருக்கு 60 வயதில் தான் ஓய்வு அளிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால், பிச்சாண்டி திடீரென பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதால் மனமுடைந்தார். நேற்று முன்தினம், நெல்லை பல்கலை அதிகாரிகளை சந்தித்து குறையை தெரிவித்துள்ளார். இருப்பினும், எந்த முடிவும் தெரியாததால் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு நேற்று இறந்தார்.
அவரது உடலை எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்துடன், உறவினர்கள் நேராக பல்கலை வளாகத்திற்குள் சென்றனர். அவரது மனைவி சங்கரம்மாள், மகன் முருகானந்தம்(25) மகள் பிரியா(20) மற்றும் உறவினர்கள், துணைவேந்தர் சபாபதி மோகனை சந்தித்து, மூத்த மகனுக்கு பல்கலையில் வேலை தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பல்கலைக்குள் ஊழியரின் பிரேதத்துடன் வந்து உறவினர்கள் துணைவேந்தருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
| வாசகர் கருத்து |