கவுகாத்தி: அசாமில், மனிதர்கள் பழிவாங்கும் நடவடிக்கையாக, விஷம் கொடுத்து அல்லது மின்சாரம் மூலம் யானைகளை கொல்வது அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதம் வரை ஏழு யானைகள் கொல் லப்பட்டுள்ளன. இவைகளை விஷம் வைத்து அல்லது மின்சாரம் பாய்ச்சி கொல்கின்றனர்.
அதே போன்று ஒரு பெண் உட்பட நான்கு பேர் வரை யானைகள் தாக்குதலில் பலியாகி உள்ளனர். கடந்த வாரம் இந்தோ-பூட்டான் எல்லையில் அமைந்துள்ள உதல்குரி மாவட்டம் ஒரங்ஜுலி டீ எஸ்டேட்டில், ஒரு யானை இறந்து கிடந்தது. அது விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஒரு பெரிய யானைக்கு தினமும், பல கிலோ கணக்கிலான உணவு தேவை. இந்தோ-பூட்டான் எல்லையில், யானைகள் செல்லும் பாதையில் அமைந்துள்ள டீ எஸ்டேட்கள், யானைகள் தாக்குதலால் அதிகளவு பாதிக்கப்படுகின்றன.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மனிதர்கள் மற்றும் யானைகள் இடையேயான முரண்பாடுகள் அதிகரித்ததற்கு, காடுகள் அழிப்பு காரணமாக,யானைகள் வசிக்கும் பகுதிகள் சுருங்கியது மற்றும் மக்கள் வனப்பகுதியை ஆக்கிரமிக்க தொடங்கியது ஆகியவையே ஆகும். வடபகுதி வனப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவு வருகிறது. இதில், 16 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவு யானைகளால் பயன்படுத்தப்படுவதாக கருதப்படுகிறது.
இவற்றில் கணிசமான பரப்பளவு இடத்தை மக்கள் ஆக்கிரமித்துள்ளனர். எனவே, மக்கள் மற்றும் யானைகள் இடையேயான முரண்பாடுகளை குறைக்க மக்களுக்கு இந்த சூழ்நிலையை பற்றி எடுத்து கூறி, இதை எளிதில் சமாளிக்கும் வகயில் தயார்படுத்த உள்ளோம். கடந்த சில ஆண்டுகளாக, மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஊடுருவும் யானைகளை விரட்ட, வனத்துறை மற்றும் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயலாற்றி வருகின்றன. யானைகளை விரட்ட பயிற்சி அளிக்கப் பட்ட கும்கி யானைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அதிகாரி கூறினார்.
| வாசகர் கருத்து |