திருச்சி: திருச்சியில், இளம் வயது தாயும், மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையும், தீயில் கருகி, பூட்டிய வீட்டில் இறந்து கிடந்தனர். கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (35). கம்பி கட்டும் தொழிலாளி. இவரது மனைவி குணசுந்தரி (28). இவர்களது மகள் பார்கவி. பார்கவி வீட்டின் அருகேயுள்ள ஆர்.சி., பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த திங்கட்கிழமை, கம்பி கட்டும் பணிக்காக, வேணுகோபால் மதுரை சென்றார். நேற்று முன்தினம் காலை முதல், குணசுந்தரி சோகமாக இருந்துள்ளார். இதுகுறித்து, அக்கம் பக்கத்தார் கேட்டதற்கு, உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார்.
நேற்று காலை, நீண்ட நேரமாகியும் குணசுந்தரி வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தார், ஜன்னல் வழியாக வீட்டினுள் பார்த்தபோது, குணசுந்தரி எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து, அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, முதல் அறையில் குணசுந்தரி, பாயின் மேல் தீயில் கருகி இறந்து கிடந்தார். குளியலறையில், அவரது மகள் பார்கவி, உடல் முழுவதும் பலத்த தீக்காயத்துடன் இறந்து கிடந்தார்.
பிணங்களை கைப்பற்றிய போலீசார், அவற்றை பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து, குணசுந்தரி கணவர் வேணுகோபால் மற்றும் பாலக்கரையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு நேரங்களில், தூக்கம் வராமல் அவதிப்பட்டு வந்த குணசுந்தரி, மனதளவில் சிறிது பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், தன் மகளை தீயிட்டு கொளுத்திவிட்டு, குணசுந்தரியும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று, போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.
| வாசகர் கருத்து |