சென்னை : ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மருமகன், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். சென்னை தி.நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன் மகள் டாக்டர் வினோதினி ராஜேஸ்வரி(33). இவருக்கும், தி.நகர் நடேசன் சாலையைச் சேர்ந்த இன்ஜினியர் அரவிந்த்(37) என்பவருக்கும் 1997ம் ஆண்டு திருமணம் நடந்தது. 200 சவரன், நான்கு லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளிப் பொருட்களுடன் சீர் வரிசைகள் செய்து திருமணத்தை கற்பூர சுந்தரபாண்டியன் நடத்தினார்.
திருமணம் முடிந்ததில் இருந்தே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. அவர்களுக்கு ஏழு வயதில் பெண் குழந்தை உள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வாழ்கிறார் வினோதினி ராஜேஸ்வரி. அசோக் நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் வினோதினி ராஜேஸ்வரி, "திருமணத்திற்கு பிறகு எனது கணவர் புது கார், அபார்ட்மென்ட் வீடு கேட்டார். திருமணத்திற்கு அதிகளவில் செலவானதால் அவர்கள் கேட்டதை எனது தந்தையால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. நள்ளிரவில் வீட்டிற்கு வரும் எனது கணவர், உடன் நண்பர்களை அழைத்து வந்தார். குடித்துவிட்டு அடித்து உதைத்தார். அவரை பிரிந்துச் சென்ற பின்பும் எனக்கு கொலை மிரட்டல்கள் வரத் துவங்கின' என, புகார் கொடுத்தார்.
அசோக் நகர் உதவி கமிஷனர் சேது தலைமையிலான போலீசார், இன்ஜினியர் அரவிந்திடம் விசாரணை நடத்தினர். கணவன், மனைவி இருவரையும் நேரில் அழைத்து தொண்டு நிறுவன பெண் சாந்தி என்பவர் கவுன்சிலிங் கொடுத்தார். "குழந்தையின் நலன் கருதி மனைவியுடன் சேர்ந்து வாழ்கிறேன்' என, அரவிந்த் கூறினார். "என்னுடன் சேர்ந்து வாழ்வதாக பொய் சொல்லும் அரவிந்த் அவரது பெண் தோழிகளுடன் நெருக்கமாக பழகுகிறார். கணவருடன் சேர்ந்து வாழ மாட்டேன்' என வினோதினி ராஜேஸ்வரி கூறினார்.
கணவன் மீது சுமத்திய குற்றச்சாட்டில் வினோதினி ராஜேஸ்வரி உறுதியாக இருந்ததால், அரவிந்த் மீது பெண் கொடுமை தடுப்பு, வரதட்சணை தடுப்பு சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்ட அரவிந்த், சிறையில் அடைக்கப்பட்டார். அரவிந்த் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர் ஹரி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
| வாசகர் கருத்து |