முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே ஒருவரை மர்ம நபர்கள் தாக்கியதால் மீண்டும் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சில தினங்களுக்கு முன்பு ஆடு மேய்த்த இளஞ்செம்பூரை சேர்ந்த ஒருவரை வீரம்பலை சேர்ந்த சிலர் வெட்டி கொலை செய்தனர். இதனால் இப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு சமரச பேச்சுவார்த்தைக்கு பின் அமைதி திரும்பியது.
இதை தொடர்ந்து இரண்டு கிராமங்களிலும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று வீரம்பலை சேர்ந்த முத்துக்குமார்(38) மோட்டார் சைக்கிளில் வந்தபோது மர்ம நபர்கள் சிலர் மாரந்தை விலக்கு அருகே வைத்து தாக்கியதாதில் அவர் காயமடைந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முத்துக்குமாரை இளஞ்செம்பூரை சேர்ந்தவர்கள் தாக்கியிருக்கலாம் என பரவிய தகவலால் வீரம்பலை சேர்ந்தவர்கள் தகராறில் ஈடுபடலாம் என நினைத்து அங்கு காவலில் இருந்த ஆறு போலீசார் பாதுகாப்பு கருதி அங்குள்ள சர்ச்சில் தஞ்சம் புகுந்தனர்.
இதனால் நேற்று மாலை நான்கு மணியிலிருந்து ராமநாதபுரம் சிக்கல் வழியாக முது குளத்தூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இளஞ்செம்பூர் மற்றும் வீரம்பல் கிராமத் தினருக்கிடையே மோதல் ஏற்படலாம் என கருதி ராமநாதபுரம் எஸ்.பி., செந்தில் வேலன் சம்பவ இடம் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார். முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை, தேரிருவேலி முக்கு ரோடு, கடலாடி விலக்கு, முனியன் கோயில் விலக்கு, இளஞ்செம்பூர், வீரம்பல் உள்ளிட்ட பல பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
| வாசகர் கருத்து |