| தீபாவளிக்கு "சரக்கு' விற்பனைக்கு அரசு இலக்கு: அதிக ஸ்டாக் வைக்க டாஸ்மாக் கடைகளில் ஏற்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளிக்கு "சரக்கு' விற்பனைக்கு அரசு இலக்கு: அதிக ஸ்டாக் வைக்க டாஸ்மாக் கடைகளில் ஏற்பாடு

Updated : அக் 25, 2010 | Added : அக் 23, 2010 | கருத்துகள் (87)
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக "டாஸ்மாக்' கடைகளில் தட்டுப்பாடு இன்றி சரக்கு விற்பனை செய்யும் வகையில், 10 நாள் சரக்கு இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான சரக்கு சப்ளை பணி, அக்டோபர் 29ம் தேதி முதல் துவங்குகிறது. கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் நிர்ணயம் செய்த இலக்கை விட, 50 கோடி ரூபாய் கூடுதல் விற்பனை நடந்ததால், நடப்பாண்டுக்கான, "டாஸ்மாக்' சரக்கு விற்பனை இலக்கு 300 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


கடந்த 2003 நவம்பர் மாதத்தில் இருந்து தமிழகத்தில், "டாஸ்மாக்' மூலம் மது விற்பனையை அரசு துவக்கியது. மது விற்பனை துவக்கப்பட்ட ஓர் ஆண்டில் 7,000 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த மது விற்பனை, தற்போது 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. அதுவும் நடப்பாண்டு சாரசரி மது விற்பனை, 18 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனையின் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாயில் 25 சதவீதம் உயர்ந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 7,434 கடைகள் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்து வருகிறது.


தமிழகத்தில் மொத்தம் உள்ள, "டாஸ்மாக்' கடைகள் ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை, சேலம், திருச்சி, மதுரை மற்றும் சென்னையில் இரு மண்டலங்கள் என செயல்பட்டு வருகிறது.ஒரு மண்டலத்திற்கு விற்பனை அடிப்படையில், சராசரியாக ஐந்து முதல் ஆறு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து, "டாஸ்மாக்' கடைகளிலும் அக்டோபர் 29 முதல் மூன்று நாள் சரக்கு இருப்பு வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 1 முதல் 10 நாட்களுக்கு தேவையான சரக்குகளை இருப்பு வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழக, "டாஸ்மாக்' கடைகளுக்கு வழக்கமாக தினந்தோறும் சப்ளை செய்யப்படும் 50 லட்சம் பாட்டில் சரக்குகள் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டு, ஒரு கோடியே 50 லட்சம் பாட்டில் சரக்குகளை அக்டோபர் 28 முதல் கடைகளின் விற்பனைக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 தீபாவளி பண்டிகைக்கு தேவையான சரக்குகள் குறித்து நேற்று முதல் (இன்டன்) வாங்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்தந்த மாவட்ட, "டாஸ்மாக்' கடைகளுக்கு பிராந்தி, விஸ்கி, பீர், ஒயின் என தேவைக்கு தக்கபடி சரக்குகள் அனுப்பப்பட்டு வருகிறது.கடைகளில் தட்டுப்பாடின்றி மதுபானங்கள் கிடைக்கும் வகையில், விற்பனையை பொருத்து, கடைகளுக்கு சரக்கு கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி நாளில் சரக்கு தட்டுப்பாட்டை போக்கும் வகையில், மாவட்டத்துக்கு, 10 லாரிகளில் சரக்குளை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவற்றுக்கு எல்லாம் மேலாக நவம்பர் 1 முதல் நவம்பர் 7ம் தேதி வரை, அனைத்து பணியாளர்களும் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சரக்கு விலை ஏற்றம் செய்து விற்பனை செய்யும் விற்பனையாளர்களை கண்காணிக்க, பறக்கும் படை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


 "டாஸ்மாக்' அதிகாரி கூறியதாவது:கடந்த ஆண்டு தீபாவளி நாளில் 200 கோடிக்கு சரக்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்து இருந்தோம். ஆனால், 250 கோடி ரூபாய்க்கு சரக்குகள் விற்பனை ஆனது. இலக்கை விட அதிகளவில் சரக்கு விற்பனை செய்யப்பட்டதால், நடப்பாண்டு சரக்கு விற்பனையின் இலக்கு 300 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இலக்கு உயர்வுக்கு ஏற்றபடி சரக்குகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடைகளுக்கு தேவையான சரக்குகளில் வேகமாக விற்பனையாகும் சரக்கு, முடங்கி கிடக்கும் சரக்கு, விலை உயர்ந்த சரக்கு, புதிய அறிமுக சரக்கு என, பிரித்து சப்ளை செய்யப்படுகிறது. இதில் வேகமாக விற்பனையாகும் சரக்குகளின் சப்ளை 75 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு தீபாவளி நாளில் பல கடைகளில் சரக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் சரக்குகள் அதிக விலைக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், நடப்பு ஆண்டு இத்தகைய பிரச்னைகளை தவிர்க்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக, தமிழகம் முழுவதும் உள்ள "டாஸ்மாக்' கடைகளுக்கு சப்ளை செய்யவதற்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் அந்தந்த மாவட்ட குடோனுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சரக்குகளை கடைகளுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.இந்த ஆண்டு தீபாவளி தினத்தில், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு "டாஸ்மாக்' அதிகாரி கூறினார்.


- நமது சிறப்பு நிருபர் - 


Advertisement