மதுரை குகைகளை சமண முனிவர்கள் தேர்ந்தெடுத்தது ஏன்? பாரம்பரிய நடைபயணத்தில் தகவல்| Dinamalar

தமிழ்நாடு

மதுரை குகைகளை சமண முனிவர்கள் தேர்ந்தெடுத்தது ஏன்? பாரம்பரிய நடைபயணத்தில் தகவல்

Added : நவ 15, 2010

மதுரை:இந்திய தொழில் கூட்டமைப்பு மதுரை சுற்றுலா பிரிவு சார்பில், நேற்று யானைமலை மற்றும் அரிட்டாபட்டி மலைக்கு பாரம்பரிய நடைபயணம் நடந்தது. பாலம் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள ஜெயின் வித்யாலயா பள்ளியில், மதுரை காமராஜ் பல்கலை ஓய்வு பெற்ற கலை வரலாற்று துறை பேராசிரியர் வெங்கட்ராமன் துவக்கி வைத்தார். பின், அரிட்டாபட்டி, யானைமலையில் உள்ள சமணர் குகைகளின் சிறப்புகள் குறித்து அவர் விளக்கியதாவது : மனிதனை மையப்படுத்தி, மறுபிறவி கொள்கைகளை வலியுறுத்தி, பீகாரில் ஆரம்பத்து, கர்நாடகா வழியாக சமணர்கள் தமிழகம் வந்தனர். சங்க காலம் முதலே தமிழகத்தில் சமண, பவுத்தம் தொடர்பு இருந்தது. திகம்பர்களான இவர்கள் ஆடை அணியாத காரணத்தால், தங்குவதற்கு அதிக மலைகளை உடைய மதுரையை தேர்ந்தெடுத்தனர். யானைமலை, திருப்பரங்குன்றம், கீழக்குயில்குடி உட்பட 13 மலைகளில் தங்கினர். குகை அமைத்து கொடுத்தவர்கள், உதவி செய்தவர்களின் விபரங்களை பிராமி எழுத்துகளில் கல்வெட்டுகளாக பொறித்தனர்.


கி.பி.9ம் நூற்றாண்டில் சிற்பங்கள் செதுக்கினர். தமிழகத்தில் முதன் முதலாக சொல்லப்பட்ட சித்தர்கள் இவர்கள்தான் என்றார்.கல்வெட்டு ஆராய்ச்சியாளர் வேதாச்சலம் கூறியதாவது :மதுரையை சுற்றியுள்ள மலைகளில், மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே வடநாட்டில் இருந்து சமணர்கள் வந்துவிட்டதற்கு சான்றுகள் இருக்கின்றன. மாங்குளம் கல்வெட்டில், சமணர்களுக்கு பாண்டியன் நெடுஞ்செழியன் உறைவிடம் அமைத்து கொடுத்தது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பினையன் மலை என்றழைக்கப்பட்ட அரிட்டாபட்டியில், நெல்வேலி சிலிவன் ஆதினன் ஒளியன், இமையன் என்பவர்கள் குகையை உருவாக்கி கொடுத்துள்ளனர். இதன் அருகே உள்ள தீர்த்தங்கரர் சிற்பத்தை செதுக்கியவர் அச்சநந்தி முனிவர். மலையில் பொறிக்கப்பட்டுள்ள வட்டெழுத்தை செக்கியவரும் இவர்தான் என்றார். நடைபயணத்தில், மதுரை சுற்றுலா பிரிவுத் தலைவர் உமா, இந்திய தொழில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜெயின் சமூகத்தினர் பங்கேற்றனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X