உ.பி., யில் அமையும் "ஆங்கில தேவி' கோவில்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உ.பி., யில் அமையும் "ஆங்கில தேவி' கோவில்

Added : நவ 22, 2010

லக்னோ : உத்திரப்பிரதேச மாநிலத்தில், "ஆங்கில தேவி'க்கு கோவில் அமைக்கப்பட்டு வருவதால், பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம், லட்சுமிபூர் கெரி மாவட்டத்தில் உள்ள பகதூர்கஞ்ச் என்ற கிராமத்தில், தலித் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், "ஆங்கில தேவி'க்கு கோவில் அமைக்கப்பட்டு வருகிறது. 800 சதுர அடி நிலத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த கோவிலில், 3 அடி உயரத்தில், ஆங்கில தேவிக்குச் சிலையும் அமைக்கப்பட உள்ளது. அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையை போன்ற தோற்றத்தில், ஒரு கையில் பேனாவை உயர்த்திப் பிடித்தபடியும், மறு கையில், இந்திய சட்ட புத்தகத்தை பிடித்தபடியும் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. தலித் மக்களிடையே, ஆங்கிலம் மற்றும் நவீன கல்விக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்த கோவில் கட்டப்பட்டு வருவதாக தலித் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அங்கு வசிக்கும் மேல்சாதியினர், இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தும் விதமாக இந்த கோவில் கட்டப்பட்டுவருவதாகவும், தலித்துகளை இந்து மதத்திலிருந்து, கிறிஸ்தவமதத்திற்கு மதமாற்றம் செய்யும் முயற்சியே இது என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இது உணர்வு ரீதியான பிரச்னை என்பதால், இந்த விவகாரம், ஆளும் மாயாவதி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து, தலித் விவகாரங்கள் குறித்து, பத்திரிகைகளில் எழுதிவரும் எழுத்தாளர் சந்திராபன் பிரசாத் கூறியதாவது: தலித் மக்களுக்கு அடிப்படை ஆங்கிலக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் போராடி வருகிறோம். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த புதியக் கடவுளை ஏற்படுத்தியுள்ளோம். இதில், எந்த மதமாற்ற விவகாரங்களும் இல்லை. நாங்கள் சட்டமேதை அம்பேத்கர் வழியில் பணியாற்றி வருகிறோம். கட்டுமானப் பணிகள் முடியும் நிலையில் உள்ள கோவில், இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது. இந்த கோவில் தொடர்பாக, மதப்பிரச்னைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க, தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக, அம்மாநிலப் போலீசாரும், அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X