மஞ்சு விரட்டு இன்றி வெறிச்சோடிய கிராமங்கள் : களை இழந்த மாட்டு பொங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மஞ்சு விரட்டு இன்றி வெறிச்சோடிய கிராமங்கள் : களை இழந்த மாட்டு பொங்கல்

Added : ஜன 17, 2011
Advertisement

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு பகுதியில் மஞ்சு விரட்டு இல்லாததால், பல கிராமங்கள் வெறிச்சோடி கிடந்தன. நெடுங்குளம் கிராமத்தில் மாடுகளை கட்ட அமைக்கப்பட்ட வாடிவாசலை போலீசாரே அப்புறப்படுத்தினர். கிராமங்களில் மாட்டு பொங்கல் உற்சாகமில்லாமல் நடந்தது. வத்திராயிருப்பு பகுதியில் கூமாப்பட்டி, கான்சாபுரம், மகாராஜபுரம், சேதுநாராயணபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில், மாட்டு பொங்கலன்று ஜல்லிக்கட்டு நடக்கும். சில ஆண்டுகளாக கோர்ட் உத்தரவு காரணமாக அனைத்து இடங்களிலும் தடை செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டு "மஞ்சுவிரட்டு' என்ற பெயரில் காளைமாடுகள், மலைஜாதி மாடுகள் ஓரிடத்தில் அடைத்து வைக்கப்பட்டு, அலங்காரம் செய்து பூஜை செய்யப்படும். பூஜையின் முடிவில் அனைத்து மாடுகளுக்கும் மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டு கயிறுகளை அவிழ்த்து வரிசையாக மாடுகளை தெருக்களில் ஓட விடுவார்கள். கோர்ட் உத்தரவுக்குப்பின், கடந்த ஆண்டுவரை இது நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு அதற்கும் போலீசார் தடை விதித்தனர். மாடுகளை அலங்கரிக்கலாம், வழிபடலாம், பூஜைகள் செய்யலாம். ஆனால், வாடிவாசல் போன்று மரத்தடிகளால் வேலிகள் போட்டு மாடுகளை அடைத்துவைக்கக் கூடாது என்றனர். கான்சாபுரம், நெடுங்குளம், கூமாப்பட்டி ஊர்களில் விழா ஏற்பாட்டாளர்கள் இதற்கு ஒப்புக்கொண்டனர். ஆனாலும், வேலி போடாமல் அவ்வளவு மாடுகளையும் ஓரிடத்தில் அடைத்து வைப்பதற்கு சாத்தியமில்லை என்பதால் ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் கைவிட்டனர். நெடுங்குளம் கிராமத்தில், வாடிவாசல் போன்று மரத்தடிகளால் வேலி அமைத்தனர். இதையறிந்த கூமாப்பட்டி போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று அந்த வேலிகளை அப்புறப்படுத்தினர். அனைத்து கிராமங்களும் மாட்டுப்பொங்கலுக்கான அறிகுறியே இன்றி உற்சாகமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X