மதுரை தமுக்கம் மைதானம் வாடகை இரட்டிப்பானால் போதுமா?| Dinamalar

மதுரை தமுக்கம் மைதானம் வாடகை இரட்டிப்பானால் போதுமா?

Added : ஜன 28, 2011
Advertisement

மதுரை:மதுரை தமுக்கம் மைதானத்தின் வாடகையை இரு மடங்காக உயர்த்திய மாநகராட்சி, அங்கு வசதி களையும் மேம்படுத்த வேண்டும்.மாநகராட்சியின் வருவாயை அதிகப்படுத்தும் நோக்கத்தில் தமுக்கம் மைதா னத்தின் கட்டணங்கள் இரு மடங்காக இந்த மாதம் முதல் உயர்த்தப்பட்டுள்ளது. டெபாசிட் தொகை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும், பொருட்காட்சிக்கான வாடகை, ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாயாகவும், இதர நிகழ்ச்சிக்கு கலையரங்கத்திற்கு ஒரு நாள் வாடகை 9 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாகவும்,கலையரங்கத்திற்கான டெபாசிட் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டன.ஆனால் வாடகையை இவ்வளவு உயர்த்தியதற்கு தகுந்த வசதிகள் தமுக்கம் மைதானத்தில் இருக்கின்றனவா என்பது கேள்விக்குறி.சாதாரணமாக, பொருட்காட்சி என்றாலே ஒரு நாளைக்கு பல ஆயிரம் பேர் அங்கு கூடுவர். இவர்களுக்கு ஏற்ற எண்ணிக்கையில் கழிப்பறைகள் இல்லை. தற்போதைக்கு இரண்டு இடங்களில் மட்டுமே கழிப்பறை இருக்கிறது. இதிலும் சரியாக தண்ணீர் வருவதில்லை. மைதானத்தில் இருக்கும் குடிநீர் குழாய் இணைப்பில் குழாயே இல்லை. மைதானம் முழுவதும், மேடு பள்ளங் களுடன் காணப்படு கிறது. ஆங்காங்கே மணல் குவிந்து கிடக்கிறது.கலையரங்கம்: கலையரங்கத்தின் நிலைமை தான் ரொம்ப "கவலைக்கிடம்'. கலையரங்கத்தின் வாசல்களில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பிரிங் கேட்கள், சரியாக வேலை செய்வதில்லை. பல மின் விசிறிகளை காணவில்லை. வெறும் இரும்பு கம்பி மட்டுமே தொங்குகிறது. மின் விளக்கு களின் எண்ணிக்கையும் குறைவுபெரிய நிகழ்ச்சிகளை நடத்துவோர், போதிய அளவு மின் சப்ளை இங்கு இல்லாத தால், தற்காலிக மூன்று "பேஸ்' மின் இணைப்புக்காக விண்ணப்பிக்க வேண்டி உள்ளது. இதற்காக மட்டும், மின் வாரியத்திற்கு, திரும்ப பெற முடியாத, ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செலுத்த வேண்டும். தமுக்கத்தில் போதிய திறனுள்ள மின் இணைப்பு இருந்தால், இந்த தொகையாவது நிகழ்ச்சிகளை நடத்துவோருக்கு மிச்சமாகும். இதற்கும் மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும்.இந்த வசதிகளை செய்து கொடுக்காவிட்டால், வாடகையை உயர்த்தியதன் பலன், பொதுமக்களுக்கு கிடைக்காது.


Advertisement