| கடன் தான் தமிழகத்தை வாழ வைக்கிறது: நிதியமைச்சர் பெருமிதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கடன் தான் தமிழகத்தை வாழ வைக்கிறது: நிதியமைச்சர் பெருமிதம்

Updated : பிப் 11, 2011 | Added : பிப் 09, 2011 | கருத்துகள் (151)
Advertisement

சென்னை : ""கடன் தான் தமிழகத்தை வாழ வைக்கிறது. மேலும் கடன் வாங்கப்படும்,'' என, நிதியமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

பட்ஜெட் மீது சட்டசபையில் நடந்த விவாதம்:


* சிவபுண்ணியம் - இந்திய கம்யூனிஸ்ட்: நிதிப் பற்றாக்குறை, கடன் சுமையில் தமிழக அரசு உள்ளது. 13வது நிதிக்கு வரையறைக்கு உட்பட்டதாக கடன் சுமை உள்ளதாக அரசு கூறுகிறது. கடன் சுமை அதிகரிப்பதற்கு தீர்வு என்ன? திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. அதே நேரத்தில் கடன் சுமை ஏறுகிறது. இந்த கடன் சுமையை யார் தலையில் சுமத்தப் போகிறீர்கள்.


* நிதியமைச்சர் அன்பழகன்: ஒரு அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற கடன் வாங்குகிறது. கடன் வாங்கி தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும். இலவச திட்டங்களுக்கு கடன் வாங்குவதில்லை. வாங்கிய கடன் அனைத்தும், மூலதனச் செலவுக்காக தான். கட்டுமானம் அல்லது வேறு தொழில்களுக்காக இந்த கடன் பயன்படுத்தப்படுகிறது. இந்த கடன் தான் தமிழகத்தை வாழ வைக்கிறது.


* சிவபுண்ணியம்: புதிய விளக்கத்தை அமைச்சர் தந்துள்ளார். கடன் தான் வாழ வைக்கிறது என்றால், அந்த கடன் அழிவை ஏற்படுத்தி மூழ்கிவிடும்.


* நிதியமைச்சர்: கடன் வாங்குவது வளர்ச்சியின் அடையாளம். அதற்காக மேலும் கடன் வாங்கப்படும். பெற்ற கடனை திருப்பி தரும் வல்லமை நமக்கு இருக்கிறது.


* பீட்டர் அல்போன்ஸ்: உலகிலேயே மிகப்பெரிய பணக்கார நாடான அமெரிக்கா தான் அதிகளவு கடன் வாங்கியுள்ளது. வளர்ந்த ஐரோப்பிய நாடுகள், சீனா, ஜப்பான் நாடுகள் அனைத்தும் கடன்கள் மூலம் தான் உலகில் வெற்றி சரித்திரத்தை பதித்துள்ளன. ஆசிய வளர்ச்சி வங்கி போன்றவையே, இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க தான் அமைக்கப்பட்டுள்ளன. கடனை திரும்ப கட்டக் கூடிய சக்தியை பெற்றிருப்பது தான் அரசின் வெற்றி. எனவே, கடன் சுமை அதிகரித்துள்ளது என்ற உண்மைக்கு மாறான பிரசாரத்தை திரும்ப பெற வேண்டும்.


* அமைச்சர் துரைமுருகன்: எவனும் கேட்டவுடன் கடனை தூக்கி கொடுத்து விட மாட்டான். திருப்பி செலுத்தும் சக்தி இருக்கிறதா என்று பார்த்து தான் கொடுப்பான்.


* சிவபுண்ணியம்: மத்திய அரசின் உலகமயமாக்கல் கொள்கை தான் இதற்கு காரணம். இந்த கொள்கையால் தான் மாநில அரசும் பாதிக்கப்பட்டு, விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. கடன் பெற்றது பற்றி எனக்கு தெளிவுபடும் வகையில் விளக்கம் அளிக்கவில்லை. ஐந்து ஆண்டுகளில் திருப்பி செலுத்தியிருந்தால் எப்படி ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடன் வந்திருக்கும். எப்போது இந்த கடனை திருப்பி செலுத்த போகிறீர்கள். இது பற்றி எல்லாம் விளக்க அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இலவச திட்டங்களுக்கு கடன் வாங்கவில்லை என்று கூறுகிறீர்கள். ஒரு தொகை, ஒரு நிதி ஒதுக்காமல் எப்படி இலவச திட்டம் செயல்படுத்த முடியும். ஆறு மாதங்களில் ஏழு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விலை உயரும் போது, காய்கறி போன்றவற்றின் விலை உயருகிறது. இதற்கு எல்லாம் தெளிவான கொள்கை இல்லாதது தான் காரணம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை எடுத்து கொண்டால், கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து தொடருகிறது. இதற்கு மையமாக இருக்கும் காரணங்களை அரசு ஆராய வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் குற்றவாளிகள் எப்படி தைரியமாக வெளியில் உள்ளனர். அரசியல் பின்னணி இல்லாமல் இதுபோன்ற காரியங்களை அவர்களால் செய்ய முடியாது. குற்றங்களை தடுத்து, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட தெளிவான பார்வை அரசிடம் இல்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.


Advertisement