"மதுரைக்கு எதற்கு போறீங்க' - டீ குடிக்க குடும்பத்தோடு போறோம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

"மதுரைக்கு எதற்கு போறீங்க' - டீ குடிக்க குடும்பத்தோடு போறோம்

Added : மார் 20, 2011 | கருத்துகள் (6)
Advertisement

தர்மபுரி: தர்மபுரியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்தும் சோதனையில் டென்ஷனாகி வருகின்றனர். நேற்று முன்தினம் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது, "மதுரைக்கு எதற்கு போறீங்க' என, போலீஸார் கேட்க, காரில் வந்தவர்கள், "டீ' குடிக்கத்தான் குடும்பத்தோடு செல்கிறோம் என பதில் அளித்தனர். சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், இலவச பொருட்கள் விநியோகத்தை தடுக்க செக்போஸ்ட்கள் அமைத்து தேர்தல் பறக்கும் படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக பணம் எடுத்து செல்வோரிடம் இருந்து பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில், 69 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


தர்மபுரி மாவட்டத்தின் வழியாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதாலும், தொழில், வர்த்தக பரிமாற்றங்களுக்கு பெங்களூருக்கு வியாபாரிகள் அதிகம் பேர் செல்வதால், எல்லை மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேர்தல் கண்காணிப்பு படையினர் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனையின் போதும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸார் பல்வேறு கேள்விகளை கேட்டு பயணிகளை டென்ஷன் ஆக்கி வருகின்றனர். வாகனங்களில் பணம் மற்றும் பொருட்கள் இல்லாத போது, விசாரணை என்ற பெயரில் பல்வேறு கேள்வி கேட்கின்றனர். நேற்று முன்தினம் தர்மபுரியை அடுத்த தொப்பூர் செக்போஸ்ட்டில் பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் எதுவும் இல்லை.


மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸார், "பெங்களூருவில் இருந்து எங்கே போறீங்க' என, கேட்டனர். காரில் வந்தவர்கள் "மதுரைக்கு செல்வதாக' கூறினர். அடுத்தடுத்து தேவையில்லாத கேள்வி பட்டியல் நீண்டது. "மதுரைக்கு எதற்காக போறீங்க' என, மீண்டும் கேள்வி எழுப்ப, காரில் வந்த நபர் கடுப்பாகி, "டீ குடிக்க போறாம்' என, பதில் அளிக்க, மீண்டும், "குடும்பத்தோடு போறீங்களே' என, போலீஸார் கேட்க, "ஆமாம் அங்கு டீ நல்லா இருக்கும் அதனால், குடும்பத்தோடு போறோம்' என, பதில் அளிக்க இரு தரப்புக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. வாகன சோதனை என்ற பெயரில் அடுக்கடுக்கான தேவையில்லாத கேள்விகள் எழுவதால், செக்போஸ்ட்களில் வாகனங்களில் செல்வோருக்கும், போலீஸாருக்கு வாக்குவாதம் நடப்பதை அப்பகுதி மக்கள் பொழுதுபோக்குக்காக தினமும் வேடிக்கை பார்த்து ரசிக்க துவங்கியுள்ளனர்.

Advertisement