திருப்பம்! ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சிக்குகிறது காங்., Dinamalar
பதிவு செய்த நாள் :
திருப்பம்,ஹெலிகாப்டர்,ஊழல்,சிக்குகிறது,காங்.,இடைத்தரகர்,உண்மை வெளிவரும்,பிரதமர்,மோடி,உறுதி

புதுடில்லி : வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட இடைத்தரகர், கிறிஸ்டியன் மைக்கேலை, ஐந்து நாள் விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த ஊழலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் சிக்குவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ''நான்கு தலைமுறையாக ஊழல் செய்து வரும் காங்கிரசின் உண்மை முகம் வெளிப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட, வி.வி.ஐ.பி.,க்கள் பயன்படுத்துவதற்காக, 12 ஹெலிகாப்டர்கள் வாங்க திட்டமிடப்பட்டது.

ரூ.36 ஆயிரம் கோடி :


இதற்காக, இத்தாலியைச் சேர்ந்த, 'பின்மெக்கானிகா' நிறுவனத்தின் துணை நிறுவனமான, பிரிட்டனைச் சேர்ந்த, 'அகஸ்டா வெஸ்ட்லேண்ட்' நிறுவனத்துடன் பேச்சு நடந்தது. அதன்படி, 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம், 2010ல், கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனம் தரப்பில், 423 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறி, இந்த ஒப்பந்தம், 2014ல், ரத்து செய்யப்பட்டது. இந்த ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன.

துபாய் நீதிமன்றம் :


அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கு, ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை அளிப்பதற்காக, பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல், குய்டோ ஹஸ்கே, கார்லோ ஜெரோசா ஆகியோர் இடைத் தரகர்களாக செயல்பட்டதாக, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., குற்றஞ்சாட்டின. இதற்கிடையே, வளைகுடா நாடான, ஐக்கிய அரசு எமிரேட்சின், துபாயில் பதுங்கியிருந்த கிறிஸ்டியன் மைக்கேலை, நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளில், இந்த அமைப்புகள் ஈடுபட்டன.

மைக்கேலை நாடு கடத்துவதற்கு, துபாய் நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட மைக்கேலை, நேற்று முன்தினம் இரவு, டில்லி விமான நிலையத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடந்தது. அதைத் தொடர்ந்து, டில்லி

பட்டியாலா வளாகத்தில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று காலையில் அவர் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை, 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சி.பி.ஐ., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், ஐந்து நாட்கள் மட்டும் விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதற்கிடையே, ஜாமின் கோரி, மைக்கேல் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில், 423 கோடி ரூபாய் மதிப்புக்கு நடந்துள்ள ஊழலில், முக்கிய குற்றவாளியான, இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் கைது செய்யப்பட்டுள்ளது, அரசியல் ரீதியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய விமானப் படையின் முன்னாள் தலைவர், எஸ்.பி. தியாகி உள்ளிட்டோர் மீது ஏற்கனவே வழக்கு நடந்து வருகிறது.

இதற்கிடையில், ராஜஸ்தானில் நடந்த சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய,

பிரதமர் நரேந்திர மோடி, ''நான்கு தலைமுறைகளாக ஊழல் செய்து வந்த காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகம், இனி தெரியவரும்,'' என, கூறியுள்ளார்.

சி.பி.ஐ., விசாரணையின்போது, மைக்கேல் வாக்குமூலம் அளிக்கும்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் சிக்குவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இது தேசிய அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழல்வாதிகளுக்கு சிறை!

சட்டசபை தேர்தல் நடக்கும் ராஜஸ்தானில் நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக, இடைத் தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து நாடு கடத்தப்பட்டு, இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இதற்கு, பா.ஜ., அரசின் இடைவிடா முயற்சிகளே காரணம். அரசியல்வாதிகளுக்காக வேலை செய்து வந்த அவர், நம் அதிகாரிகள் பிடியில் தற்போது சிக்கியுள்ளார். விசாரணையின் போது, ஊழல் செய்தோர் பெயர்களை வெளியிடுவார். இந்த விஷயத்தில், நாம் பொறுத்திருந்து பார்ப்போம். ஊழல் என்பது, காங்., தலைவர்களின் வாழ்க்கை முறை. காங்., ஆட்சியில் இருந்தபோது ஊழல் செய்து தப்பிய தலைவர்களை சும்மா விட மாட்டோம். நான்கு தலைமுறைகளாக, ஊழலில் திளைத்தவர்களாக இருப்பதால், அவர்கள், ஊழலை எதிர்த்து போராட மாட்டர்கள். ஊழலை அடியோடு ஒழிக்க, பா.ஜ.,வால் மட்டுமே முடியும். தற்போது, ஊழல்வாதிகள் சிறையில் தள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.



Advertisement

வாசகர் கருத்து (42+ 104)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siddique - Hyderabad,இந்தியா
06-டிச-201818:53:01 IST Report Abuse

Siddiqueவழக்கம் போல ஒரு கும்பல் காங்கிரெஸ்ஸை குறை சொல்லி ஒட்டு கேக்குறாருன்னு பொலம்பிட்டு போவும். மோடியை சாட காங்கிரசுக்கு வக்காலத்து வாங்கும். வேற என்ன?

Rate this:
Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
06-டிச-201816:16:41 IST Report Abuse

Muthukumaranராகுல் அவசரமாக இத்தாலி பயணம். 6 மாசம் எங்கே இருப்பார் என்று யாருக்குமே தெரியாது. இந்த ஊழல் சத்தம் அடங்கிய பிறகு வெளியே தலை காட்டுவார்.

Rate this:
Narayanan.S - Chennai,இந்தியா
06-டிச-201814:04:07 IST Report Abuse

Narayanan.Sகிறிஸ்டியன் மைக்கேலை - சிறுபான்மையினர் மீது குற்றம் சாட்டுகின்றனர் என கூறி இவருக்கு ஆதரவாக ஒரு கூட்டம் இன்னும் கிளம்பவில்லையே?

Rate this:
மேலும் 39 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X