இலங்கைக்கு கேபிள் மூலம் மின்சாரம் : இரண்டாம் கட்ட ஆய்வு முடிவு| Dinamalar
இலங்கைக்கு கேபிள் மூலம் மின்சாரம் : இரண்டாம் கட்ட ஆய்வு முடிவு
Advertisement

ராமேஸ்வரம் : தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்வதற்காக, ராமேஸ்வரம் கடல் பகுதியில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட ஆய்வு முடிந்தது. தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்வதற்காக பாக். ஜலசந்தி கடல் பகுதியில் தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தால் கடந்த சில மாதங்களாக ராமேஸ்வரம், கடல் பகுதியில் நடத்தப்பட்டு வரும் இந்த ஆய்வின் இரண்டாம் கட்ட பணி, இந்திய கடல் எல்லைப்பகுதியில் நடந்து வந்தது. மத்திய அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சி கழக விஞ்ஞானி ரவீந்திரன் தலைமையில் 10 விஞ்ஞானிகள் உள்ளிட்ட குழுவினர் கடலுக்குள் நடத்திய ஆய்வுப்பணி நேற்று முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து கடலின் நிலத்தடி மட்டத்தில் சேகரிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மண் மாதிரிகள், கடல் நீர் உள்ளிட்ட பொருட்களுடன் படகில் நேற்று மாலை ராமேஸ்வரம் திரும்பியவர்கள் இவற்றை வேனில் ஏற்றிசென்றனர். இதை தொடர்ந்து மூன்றாவது கட்டமாகவும் கடலுக்குள் ஆய்வு நடத்தப்பட்டு, அதன் அறிக்கைக்கு பின், கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படும்.


Advertisementமேலும் செய்திகள்