உயிரியல் பூங்காவில் மின்வெட்டு:தண்ணீருக்கு தவிக்கும் விலங்குகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உயிரியல் பூங்காவில் மின்வெட்டு:தண்ணீருக்கு தவிக்கும் விலங்குகள்

Added : ஏப் 21, 2011

சேலம்: சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் தொடர் மின்தடையால், பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியாமல் ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சேலம் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சேலம் குரும்பப்பட்டியில் வன உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இப்பூங்காவை சேலம் வனத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் பராமரித்து வருகின்றனர். செவ்வாய்க்கிழமை தவிர மற்ற வேலை நாட்களில் பூங்கா காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது. இப்பூங்காவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதத்தில், நட்சத்திர ஆமைகள், குரங்கு, விதவிதமான கிளிகள், புறாக்கள், முதலைகள், மான்கள், வெள்ளை மயில்கள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. தற்போது, சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை 9 மணி முதலே பொதுமக்கள் பலரும் தனது குழந்தை, உறவினர்களுடன் பூங்காவில் குவிய தொடங்கி விடுகின்றனர். பூங்காவில் உள்ள முதலைகள், ஆமைகள், வெளிநாட்டு பறவைகள், குரங்குகள் ஆகியவை தண்ணீருக்குள் நீந்தி விளையாடுவது பெரும்பாலான குழந்தைகளையும், பெரியவர்களையும் கவர்ந்து வந்தது. தற்போது, பூங்காவில் தொடர்ந்து பல மணி நேரம் அறிவிக்கப்படாமல் மின்சாரம் நிறுத்தப்படுவதால், பூங்காவில் உள்ள முதலை, ஆமை, வெளிநாட்டு பறவைகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய முடியாமல் வன ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கோடை வெயிலில் தண்ணீர் இல்லாமல், வன விலங்குகள் தவித்து வருகின்றன. பெரும் சிரமத்துக்கிடையில் பக்கெட், குடம் ஆகியவற்றில் தண்ணீரை பிடித்து, பூங்காவில் உள்ள விலங்குகளின் தாகத்தை வன ஊழியர்கள் தீர்த்து வருகின்றனர். அப்போதும் விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் தேவையை அவர்களால் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.இது குறித்து வன அதிகாரிகள் கூறியதாவது:பல மாதங்களாக பூங்காவில் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது. பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களுக்கு நுழைவு சீட்டினை வழங்குவதில் தடை ஏற்படுகிறது. மோட்டார் மூலமே, பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பல மணி நேரம் மின் தடை ஏற்படுவதால், விலங்குகளுக்கு போதுமான அளவுக்கு தண்ணீரை விநியோகிக்க முடிவதில்லை. கோரிமேடு மின்அலுவலகத்தில் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர் மின்தடையை தடுக்க, மின் ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விலங்குகளுக்கு தடையில்லாத தண்ணீரை விநியோகிக்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X