கோல்கட்டா : மத்திய பாதுகாப்பு படையின் துணையுடன் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காக்க முடிவு செய்துள்ள மே.வங்க முதல்வர் மம்தா, அமைச்சர்களின் செயல்பாடுகள் அனைத்தையும் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார். அமைச்சர்கள் ஒவ்வொருவரும் மாத இறுதியில் தாங்கள் செய்த பணிகள் குறித்த விவரங்களை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதனால், புதிய அமைச்சர்கள் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர்.
விளையாட்டுத்துறை அமைச்சர் மதன்மித்ரா குறிப்பிடுகையில், "ஒவ்வொரு மாத இறுதியிலும் எங்களது திறமை பரிசோதிக்கப்படுவதால், அப்போது நாங்கள் கொஞ்சம் பதட்டமாக தான் இருப்போம்' என்றார்.
கவுதம் தேவ் என்ற அமைச்சர் குறிப்பிடுகையில், "இடதுசாரிகளின் ஆட்சியில் 34 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பணிகளை நாங்கள் எடுத்து செய்ய வேண்டியுள்ளதால் கூடுதலாக உழைக்க வேண்டும். எனவே, நாங்கள் பெரிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம்' என்றார்.
பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் உபென் பிஸ்வாஸ் குறிப்பிடுகையில், "சாதாரணமாக தொழில் நிறுவனங்களில் இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவது வழக்கம். இந்த நடைமுறையை முதல்வர் எங்கள் விஷயத்திலும் புதியதாக செயல்படுத்தியுள்ளார்' என்றார்.
பத்து துறைகளை தன் வசம் வைத்துள்ள மம்தா இதுவரை ஒரு நாளைக்கு 10 மணி நேர வேலையும், வாரத்தில் ஒரு நாள் ஓய்வு எடுக்கும் வழக்கத்தை கொண்டிருந்தார். தற்போது அவரும் கூடுதலாக உழைக்க துவங்கியுள்ளார். அலங்கோலமாக கிடந்த பழைய முதல்வர் அறையை விசாலமாகவும், அழகுபடுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். தொழிலதிபர்களும், உயரதிகாரிகளும் தன்னுடைய அறையில் உரையாடும் போது அவர்களுக்கு அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.புதிய மெருகு பெறும் மேற்கு வங்க தலைமைச் செயலகத்தில் ஊழியர்கள் திறமையுடனும், கூடுதல் பணியுடன் செயலாற்ற வேண்டும் என்பதில் , முதல்வர் மம்தா உறுதியாக உள்ளார்.