"கம்ப்யூட்டர் தமிழ்' கட்டுரை உருவாக்க தமிழ் இணைய மாநாட்டில் வலியுறுத்தல்| Dinamalar

தமிழ்நாடு

"கம்ப்யூட்டர் தமிழ்' கட்டுரை உருவாக்க தமிழ் இணைய மாநாட்டில் வலியுறுத்தல்

Added : ஜூன் 28, 2010
Advertisement

கோவை: ""உயர்கல்வி மாணவர்கள், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் "கம்ப்யூட்டர் தமிழ்' தொடர்பான கட்டுரைகளை உருவாக்க வேண்டும்,'' என, தமிழ் இணைய மாநாட்டுக்குழு தலைவர் அனந்தகிருஷ்ணன் பேசினார்.தமிழ் இணைய மாநாடு முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, கொடிசியா வளாகத்தில் நடந்தது. துணைமுதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கினார். தமிழ் இணைய மாநாடு குழுத்தலைவர் அனந்தகிருஷ்ணன் பேசியதாவது:சீனா மற்றும் கொரியா நாடுகளில் விற்பனை செய்யப்படும் கம்ப்யூட்டர்கள் அனைத்திலும், அந்நாட்டு மொழியில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. சீன, கொரிய மொழி சாப்ட்வேர் இல்லாத கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்ய அந்நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்திலும் தமிழ் சாப்ட்வேர் உள்ள கம்ப்யூட்டர்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.செயல்முறை கல்வி கற்பிப்பதில், தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கும் போதே, சமூக சேவை மீதான ஆர்வத்தையும் கம்ப்யூட்டர் வாயிலாக ஏற்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் ஒரு லட்சம் ஆய்வுக்கட்டுரைகளை உருவாக்கும் உயர்கல்வி மாணவர்கள், குறைந்தது 10 ஆயிரம் கட்டுரைகளையாவது "கம்ப்யூட்டர் தமிழ்' தொடர்பாக உருவாக்கி தமிழ் முன்னேற்றத்துக்காக பாடுபடவேண்டும். சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உருவாக்கப்படும் புதிய செம்மொழி உயராய்வு அலுவலகத்தில், இணைய தமிழுக்கான முழுநேர செயலகமும் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு, அனந்தகிருஷ்ணன் பேசினார்.தமிழ் இணைய மாநாடு முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான தனி நபர் தூரிகை வரைவுப் போட்டியில், காஞ்சிபுரம் எஸ்.ஆர்.கே.எம்.வி., பள்ளி மாணவர் நந்தகுமார் முதல் பரிசும், பள்ளி மாணவர்களுக்கான குழு வரைகலை போட்டியில், புதுக்கோட்டை செயின்ட் மேரிஸ் பள்ளி மாணவர்கள் மணிகண்டன், பாலசுப்பிரமணி குழு முதல்பரிசும், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கான கட்டுரைப்போட்டியில் கலை அறிவியல் பிரிவில், சென்னை இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் யோகேஷ் முதல் பரிசும், தொழில்நுட்பப்பிரிவில் சென்னை அண்ணா பல்கலையின் நவீன்குமார் முதல் பரிசும், உயிரியல் பிரிவில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் ராஜ பிரியங்கா முதல்பரிசும் பெற்றனர். இவர்களுடன் ஒவ்வொரு பிரிவிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கும் துணைமுதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கி பாராட்டினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை