நரிக்குறவர்கள் பேசும் "வாக்ரி' மொழிக்கு அகராதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நரிக்குறவர்கள் பேசும் "வாக்ரி' மொழிக்கு அகராதி

Added : ஜூலை 06, 2010 | கருத்துகள் (1)

சென்னை:நரிக்குறவர்கள் பேசும், "வாக்ரி' மொழிக்கு, பேராசிரியர் சீனிவாசன் வர்மா அகராதியை உருவாக்கியுள்ளார். இந்த அகராதி அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது.நாடு முழுவதும் பேச்சு வழக்கில் மட்டுமே இருக்கும் பல மொழிகள் நாளடைவில் மறைந்து போகும் நிலையில் உள்ளன. இவற்றில் பாரம்பரிய சமூகத்தைச் சேர்ந்தவர்களான, நரிக்குறவர்வர்கள் பேசும் மொழி வாக்ரியும் ஒன்று. தமிழகம், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நரிக்குறவர்கள் நிலையான இருப்பிடமின்றி நாடோடிகளாக வாழ்ந்து வருகின்றனர்.


அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மொழியியல் பேராசிரியர், சீனிவாசன் வர்மா, நரிக்குறவர்கள் பேசும் வாக்ரி மொழிக்கு, அகராதியை உருவாக்கியுள்ளார். தேசிய நாட்டார் வழக்காற்றியல் மையத்துடன் இணைந்து இந்த அகராதி உருவாக்கப்படுகிறது. வாக்ரி வார்த்தை ஆங்கிலத்தில் மாற்றப்பட்டு, வாக்ரி, குஜராத்தி, இந்தி உச்சரிப்புகள் இடம்பெறும். இதற்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொருள், விளக்கம் இடம்பெறும். அகராதியில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்ரி வார்த்தைகள் இடம் பெறும். இந்த அகராதி அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது.


இதுகுறித்து பேராசிரியர் கூறும்போது, ""இந்தோ ஆரிய மொழியான வாக்ரி, இந்த நாடோடி சமூகத்தினர் வழியாகத் தான் பல ஆண்டுகளை கடந்து வந்துள்ளது. வாக்ரி மொழி பேசும் மக்கள், தற்போது குறைந்தளவு மட்டுமே உள்ளனர். முன்பு போல் இல்லாமல், நரிக்குறவர் சமூகத்தினர் தற்போது ஓரிடத்தில் வசிக்கத் துவங்கி உள்ளனர். அவை அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றுவது மட்டுமின்றி, அவர்களின் வாக்ரி மொழியையும் பாதித்துள்ளது. மற்ற நாடோடிகளின் மொழிகள் சமூக மாற்றத்தில் அழிந்து விட்டன. அதுபோல் ஏற்படாமல், வாக்ரி மொழியை பாதுகாப்பது அவசியம். தென்தமிழகத்தில் திராவிட பாரம்பரியத்தைக் கொண்ட மேலும் சில நாடோடிகளின் மொழிகள் பற்றி அதிக அளவில் ஆய்வுகள் செய்யப்படவில்லை,'' என்றார். சீனிவாசன் வர்மாவின், நரிக்குறவர் சமூகம் பற்றிய ஆய்வு ஏற்கனவே ஜெர்மன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X