மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்... " இது எல்லோரும் கேட்கற பாட்டு! " கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்...'' இது உஷா தாமோதரனுக்கு கேட்கற பாட்டு! கேட்காத பின்னே.. வேலை முடிச்சு வீட்டுக்கு வர்ற மனைவிக்கு ஸ்டப்டு சப்பாத்தி.. சேமியா பிரியாணி, பான்சி ரவை கிச்சடின்னு சுடச்சுட சூப்பரா சமைச்சு வைச்சு கணவன் காத்திருந்தா.. அந்த வாழ்க்கை வரம்தானே "" வாழ்க்கை ரூசிக்க காரணமா இருக்கறவங்களுக்கு, வாய்க்கு ருசியா ருசிச்சு சாப்பிடதை ரசிக்கறப்போ.. எனக்குள்ள இருக்கற தாய்மை உணர்வை என்னால உணரமுடியுது. ஒரே ஒரு வருத்தம்.. என் பொண்ணு அக்ஷயா திருமணமாகி இங்கிலாந்துக்கு போயிட்டதால, அவளுக்கு என்னால சமைச்சு போட முடியலை. மத்தபடி. திருப்தியான வாழ்க்கை கொடுத்த ஆண்டவனுக்கு அடிக்கடி நன்றி சொல்லிட்டு ஆனந்தமா இருக்கறேன்! உடல் முழுக்க நிறைந்திருக்கும் சந்தோஷத்தினால், உருண்டு திரண்டிருக்கும் சமையற்கலை நிபுணர் தாமோதரனின் ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வளவு ருசி........
தாமுவின் ஆசைகள்?
அலைகள் பாதங்களை நலம் விசாரிக்கிறதுக்கு வசதியா கடற்கரையில் உட்கார்ந்து கடல் ரசிக்கணும். உடம்பு பெருசா இருக்கறை பத்தி துளிகூட கவலைப்படாம, கடல்ல நீச்சல் அடிக்கணும். மலை மாதிரி சாதத்தை குவிச்சு, வைச்சு, குழிவெட்டி சாப்பிடணும், அரைடியாயர், டிசர்ட் சகிதமா சென்னை தெருக்கள்ல சுதந்திரமா ஓடணும் எனக்கு பிடித்த பேட்டரி கார்ல சென்னையை சுத்தி வரணும், மனமுருக சமயபுரம் மாரியம்மன் பாதங்களை தொட்டு கும்பிடணும், காலம் மாறலாம்.. நம் காதல் மாறுமா..!ன்னு பாடிகிட்டே, என் மனைவியோட இந்த உலகம் முழுக்க சுத்தி பார்க்கணும். இப்படி நிறைய இருக்கு! "55 வயசெல்லாம் ஒரு வயசா! ன்னு மனசு நினைக்கறதால தினமும் ஒரு ஆசை பிறக்குது! என்ன செய்ய?
நாக்குக்கு மனுஷன் அடிமையாகக் கூடாது! ன்னு சொல்றதுல உங்களுக்கு உடன்பாடா?
நிச்சம் உடன்பாடியில்லை. பழைய சோறு சாப்பிடறவனுக்கு கூட தொட்டுக்க பச்சை மிளகாயும், சின்ன வெங்காயமும் தேவைப்படுது. உணவு.. வயிறு நிறைக்கற விஷயம் இல்லீங்க! மனசு நிறைக்கற விஷயம், உணவு ருசியோட இருந்தா மட்டும்தான் சாப்பிடறவன் மனசு நிறையும். அதே நேரம், ருசியா இருக்கறதனால அளவுக்கு மீறியும் சாப்பிடக்கூடாது! போதும்ன்னு மனசுக்கு சொல்லத் தெரியணும் இல்லேண்ணா உடம்புக்கு சிரமமாயிடும் நாக்குக்கு மனுஷன் அடிமையாகக்கூõடது!ன்னு சொல்றது. இந்த விஷயத்துலதான்னா ஏத்துக்கலாம். மத்தபடி என்னால பட்டினியா கூட இருந்துட முடியும்! ஆனா ருசியில்லாத உணவை மட்டும் சாப்பிட முடியாது.
கடந்துபோன இளமை ஒரே ஒரு நாள் திரும்ப கிடைக்குதுன்னா, என்னவெல்லாம் செய்வீங்க?
நீங்க சொல்ற அந்த ஒரு நாள் என் வாழ்க்கையில வந்துச்சுன்னா அன்னைக்கு நான் ரொம்ப.. ரொம்ப... சந்தோஷமா இருப்பேன், ஏன்ன...அன்னைக்கு ஒல்லியா இருப்பேன்! (அறை அதிர சிரிக்கிறார்) என் நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, விஜயராஜ், திமயா, மேரி, புஷ்பநாதன் எல்லாரும் ஒண்ணு கூடுவோம். எங்களுக்கு ரொம்ப பிடிச்ச எங்கமாமா, காதலிக்க நேரமில்லை, படங்களை பார்ப்போம், சென்னையை சுந்தோஷமா சுத்தி வருவோம். கடற்கரைக்கு போவோம். கரை வரைக்கும் ஓடிவர்ற அலைகள், எங்க மலரும் நினைவுகளுக்க காது கொடுக்கிற அளவுக்கு சந்தோஷமா பேசிக்குவோம். என்ன ஒண்ணு.. சாயங்காலம் இளமை "டாட்டா' சொல்றப்பபோ, நண்பர்களை பிரியறப்பா மனசுக்கு வருத்தமா இருக்கும். பரவாயில்ல.. பிரிவு இல்லேன்னா சந்தோஷத்தோட வீரியம் தெரியாமலே போயிடும், இல்லையா?
மரண தண்டனை அவசியமா? சரியா?
மன்னிப்புதான் தவறுகள் செய்ய தூண்டுது. தவறுகள் குறையணும்னா, நிச்சயம் தண்டனை வேணும்.மனித தர்மத்தை மீறி உயிர் எடுக்கறவனை, சட்டத்தை பயன்படுத்தி அவன் செஞ்சு தப்புன்னா, இப்பா நாம செய்றதும் தப்புதானேன்னு நீங்க நினைக்கலாம். நம்மளை கடிச்ச விஷபாம்பு நம்ம கண்ணுல சிக்குச்சுன்னா, உயிர்வாழ விடுவேமா? இல்ல... மன்னிச்சு வீட்டுக்குள்ள நடமாட அனுமதிப்போமா? மாட்டோம் இல்லையா! அப்போ மரண தண்டனையும் தப்பில்லை. ஆனா காலம் தாழ்த்தாம இதை நிறைவேத்தணும், இல்லேண்ணா. குற்றவாளிக்கு செஞ்ச தப்பு மறந்துவிடும் பாதிப்பை பார்த்தவங்களுக்கு மனசுல வலி குறைஞ்சுடும்.
வரலாறு:
சைதாபேட்டையில் பிறந்து, கோடம்பாக்கத்தில் வளர்ந்தவர் தாமோதரன்.1977ல் சமையல் துறைக்கு வந்த இவர் தற்போது வரை 22 புத்தகங்களை எழுதியுள்ளார், 3720 விதமான உணவுகளை உருவாக்கியுள்ளார் சமீபத்தில் 617 விதமான உணவு வகைகளை 24 மணி நேரம் 30 நிமிடம் 12 நொடிகளில் சமைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
மின்னல் கேள்விகள்...? மின்னும் பதில்கள்...!
சமையல் கலையில் சிறந்தவர்கள் ஆண்களா? பெண்களா?
மிக பொறுமையாக ஈடுபட வேண்டிய கலை சமையல்கலை, சீரியல் பார்ப்பதில் மட்டுமே பொறுமையை கடைபிடிக்கும் பெண்களை விட, ஆண்களே இக்கலையில் சிறந்தவர்கள்.
"இது படம்!' இப்படி ஒரு உணர்வை உங்களுக்குள் ஏற்படுத்திய படம்?
என் மகளுடன் நான் பார்த்த "அபியும் நானும்' படத்தின் இறுதி காட்சியில் ""அப்பாவை பார்த்துக்கம்மா! என அபி சொல்ல.. என் மகள் என்னை திரும்பி பார்த்த அந்த தருணம் என்று என் நினைவில் நிற்கும். " அது படம்!"
தேர்தலில் நிற்கும் வாய்ப்பு வந்தால் என்ன சொல்லி வாக்கு சேகரிப்பீர்கள்?
ரசாயன வாடை இல்லாத விளைச்சலுக்கும், மூன்று வேளை சுவையான உணவுக்கும் உத்தரவாதம் தருகிறேன் மக்களே என்னை தேர்தெடுத்தால் "புஷ்டி' யான வாழ்க்கை உங்களுக்கு நிச்சயம்!
எந்த தருணத்தில் பெண் அழகு?
மோட்டார் சைக்களில் ஏறிய சில நிமிடங்களுக்கெல்லாம், என் வயிற்றில் சாய்ந்து தூங்கிவிடும் என் மகளின் அழகை மனதால் பார்த்து ரசித்திருக்கிறேன். 5 வயது பெண்குழந்தை அழகின் அழகு.
வாழ்வு ருசிக்க வழி?
நம்மை நேசிக்கும் உயிர்களை அடையாளம் கண்டு, அவர்கள் செய்யும் சின்ன, சின்ன தவறுகளோடு அவர்களை ஏற்றுக்கொண்டு உண்மையாக நேசித்தால் மட்டுமே வாழ்வு ருசிக்கும்.
- துரை கோபால்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.