புதுடில்லி : தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றுள்ளது. திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை தோல்வியை தழுவியுள்ளது.
பார்லிமென்ட் கூட்டத்தொடரில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் உரைக்கு பதிலளிக்கும் விதமாக ராஜ்யசபாவில் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, தேசிய பயங்கரவாத தடுப்புமையம் நாட்டின் நலனிற்கு மிகவும் முக்கியமானது.பயங்கரவாதத்தினால் சர்வதேச நாடுகள் தங்களது பாதுகாப்பை பலப்படுத்தி வரும் நிலையில், இந்தியாவும் தனது பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை மாநிலங்களில் அமைக்க திட்டமிட்டது. இது, மாநிலங்களின் அதிகாரங்களில் தலையிடும் விசயமாக சில மாநிலங்கள் கருதுகின்றன. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றிலும் வேரறுக்க வேண்டுமெனில், அது தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தின் மூலம் மட்டுமே முடியும். எனவே அனைத்து மாநிலங்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமாய் அவர் கேட்டுக்கொண்டார்.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை : முதல்வர்களின் மாநாட்டிற்கு பிறகே, தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்ற உறுதியை பிரதமர் அளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
திருத்தம் வேண்டும் - பா.ஜ., : தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்த மத்திய அரசின் முடிவு குறித்து ராஜ்யசபாவில் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டெடுப்பு : தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் விவகாரத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு எதிராக 99 ஒட்டுகளும், ஆதரவாக 77 ஓட்டுகள் பதிவாயின
கட்சிகள் திடீர் ஆதரவு : காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, இந்த ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
தமிழர் நலன் முக்கியம் : இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனுக்காக, இந்திய அரசு பல்வேறு வகை உதவிகளை செய்துள்ளது மேலும் செய்துகொண்டும் வருகிறது. தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில், இலங்கை அரசு இனி ஈடுபடாது என்று எதிர்பார்ப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்/
அ.தி.மு.க. அதிருப்தி : இலங்கை தமிழர் விவகாரம் குறித்து பிரதமரின் பதில் தங்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்று மைத்ரேயன் தலைமையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் முழக்கத்தில் ஈடுபட்டதால், அவையில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.