புதுக்கோட்டை : துக்கம் விசாரிக்கச் சென்ற, புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ., முத்துக்குமரன் சென்ற பொலிரோ ஜீப், அன்னவாசல் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், தலையில் பலத்த காயமடைந்த எம்.எல்.ஏ., சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் இறந்ததையடுத்து, துக்கம் விசாரிப்பதற்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ., முத்துக்குமரன், தனது பொலிரோ ஜீப்பில் அன்னவாசல் சென்று கொண்டிருந்தார். அவருடன் புதுக்கோட்டை ஒன்றியச் செயலர் முருகானந்தம் சென்றார். ஜீப்பை எம்.எல்.ஏ., உறவினர் நெடுவாசலைச் சேர்ந்த மணிகண்டன், 28, ஓட்டினார். புதுக்கோட்டையிலிருந்து நேற்று காலை 9.50 மணிக்கு புறப்பட்டுள்ளனர்.
அவர்கள் சென்ற ஜீப், ஆரியூர் அடுத்த சொக்கனாதப்பட்டி அருகே சென்றபோது, ஜீப்பின் முன்புறம் உள்ள இடது பக்க டயர் திடீரென்று வெடித்துள்ளது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த ஜீப், ரோட்டோரம் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஜீப்பின் முன்பக்கம் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ., முத்துக்குமரன் இடிபாடுகளில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்ததால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவருடன் சென்ற முருகானந்தம் மற்றும் டிரைவர் மணிகண்டன் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
இன்று உடல் அடக்கம்
விபத்து குறித்து தகவலறிந்ததும், புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் எஸ்.பி., தமிழ்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். எம்.எல்.ஏ., முத்துகுமரனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் வேன் மூலம், புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. உறவினர்களிடம் கையெழுத்து பெற்ற பின், எம்.எல்.ஏ., உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின், பகல் 12.30 மணிக்கு, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக, புதுக்கோட்டை நகராட்சிக்குச் சொந்தமான நகர்மன்ற அரங்கில், அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் இறந்த எம்.எல்.ஏ., முத்துக்குமரன் உடல், இன்று மதியம் அவரது சொந்த ஊரான நெடுவாசலுக்கு எடுத்து செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்படுகிறது.
அரசியல் பயணம்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அடுத்த நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் - முல்லையம்மாள் தம்பதியினரின் மகன் முத்துக்குமரன். இவருக்கு சுசீலா, 35, என்ற மனைவியும், நர்மதா, 15, நரேஷ்குமார், 12, என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மனைவி சுசீலா, விழுப்புரம் நீதிமன்றத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகிறார். மகள் நர்மதா, புதுக்கோட்டை தூய இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., படித்து வருகிறார். மகன் நரேஷ்குமார் பேராவூரணியில் உள்ள மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், கல்லூரி பருவம் முதலே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டார். கட்சியில் கிளைச் செயலர், ஒன்றியச் செயலர், மாவட்டக்குழு உறுப்பினர், மாவட்டச் செயலர் என, பல பதவிகள் வகித்துள்ளார். விவசாயிகள் நலனில் அதிக அக்கறை கொண்டு அவர்களுடைய கோரிக்கைகளுக்காக போராடி, பலமுறை ஜெயிலுக்கும் சென்றுள்ளார்.
கடந்த சட்டசபை (2011) பொதுத்தேர்தலில், புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
டிரைவரின் அஜாக்கிரதை
புதுகை எம்.எல்.ஏ., முத்துக்குமரன் சென்ற பொலிரோ ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதற்கு, டிரைவரின் கவனக்குறைவும், அசுர வேகமும்தான் காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எம்.எல்.ஏ., ஜீப் புறப்பட்ட புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டுக்கும், விபத்து நடந்த சொக்கனாதப்பட்டிக்கும் கிட்டத்தட்ட 16 கி.மீ., தூரம் உள்ளது. வளைவுகள் நிறைந்த குறுகலான இந்த சாலையில், அசுர வேகத்தில் சென்றால்தான், 16 கி.மீ., தூரத்தை 20 நிமிடங்களில் கடக்க முடிந்தது.
விபத்து நடந்துள்ள விதத்தை பார்க்கும்போது, அசுரவேகத்தில் ஜீப் சென்று கொண்டிருந்த நிலையில், முன்பக்க டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரம் கவிழ்ந்துள்ளது. வேகத்தைக் குறைத்து நிதானமாக சென்றிருந்தால், விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என, போலீசார் தெரிவித்தனர்.
எம்.எல்.ஏ., முத்துக்குமரனின் பொலிரோ வாகனத்தை, அவரது டிரைவர் சண்முகம் தான் ஓட்டுவது வழக்கம். அவர், 15 நாட்களாக விடுப்பில் சென்றுள்ளதால், உறவினர் மணிகண்டனிடம் வாகனத்தை ஒப்படைத்துள்ளார். விவசாயப் பணிகளுக்கு டிராக்டர் ஓட்டி பழக்கமுடைய மணிகண்டனுக்கு, பொலிரோ ஜீப் ஓட்ட போதிய அனுபவம் இல்லை என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்திய கம்யூ., பலம் 8 ஆக குறைந்தது
சட்டசபையில், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் எண்ணிக்கை, 8 ஆக குறைந்தது. சட்டசபைத் தேர்தலின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, அ.தி.மு.க., கூட்டணியில் பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், ஒன்பது தொகுதிகளில், இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றது.
தற்போது, இக்கட்சியின் உறுப்பினர் முத்துக்குமரன் இறந்துள்ளதால், சட்டசபையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எண்ணிக்கை, 8 ஆக குறைந்தது.
மீண்டும், இக்கட்சிக்கே இடைத்தேர்தலில் விட்டுக் கொடுத்தால், இந்திய கம்யூனிஸ்ட் இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது.
சட்டசபையில் கடைசியாக உரையாற்றிய முத்துக்குமரன்
கடந்த வெள்ளிக்கிழமை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்துக்குமரன் சட்டசபையில் பேசினார். இவரது மறைவால், புதுக்கோட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது.
எப்போதும் சிவப்பு நிற துண்டு போட்டிருப்பதால், முத்துக்குமரன் சட்டசபையில், "பளிச்' எனத் தெரிவார். கடந்த வெள்ளிக்கிழமை சட்டசபையில் பேசிய முத்துக்குமரன், "புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா கொடுக்க வேண்டும்' என்று கோரினார். மேலும், "ஆசிரியர் நியமனத்துக்கு இரண்டு தேர்வு, மூன்று தேர்வு என்று கூறுகின்றனர். உண்மையில் எத்தனை தேர்வு தான் நடத்தப்படும்' என்ற கேள்வியை எழுப்பினார்.
இதற்கு குறுக்கிட்டு அமைச்சர் சிவபதி பேசிய போது தான், ஆசிரியர் நியமனத்துக்கு இனி ஒரே தேர்வு தான் என்ற அறிவிப்பை வெளியிட்டார். ஞாயிறன்று காலை சாலை விபத்தில், முத்துக்குமரன் மரணமடைந்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக போட்டியிட்ட முத்துக்குமரன், மொத்தம் பதிவான 1 லட்சத்து 77 ஆயிரத்து 344 ஓட்டுகளில், 65 ஆயிரத்து 466 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட, தி.மு.க., வேட்பாளர் பெரியண்ணன் அரசு, 62 ஆயிரத்து 365 ஓட்டுகளை பெற்றார். வித்தியாசம் 3,101 ஓட்டுகள் தான். இத்தொகுதியில், இந்திய ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட சீனிவாசன், 4,098 ஓட்டுகளை வாங்கியுள்ளார்.
இவரது மறைவு காரணமாக, புதுக்கோட்டை தொகுதிக்கு அடுத்த ஆறு மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அந்த தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே போட்டியிட அ.தி.மு.க., வாய்ப்பு அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆளுங்கட்சியாக இருப்பதால், அ.தி.மு.க.,வே வேட்பாளரை களமிறக்கும் என்கின்றனர் அ.தி.மு.க.,வினர்.
முத்துக்குமரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சபை ஒத்தி வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
சட்டசபையில் இன்று இரங்கல்
இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., முத்துக்குமரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சபை ஒத்தி வைக்கப்படுகிறது.
சட்டசபையில், பட்ஜெட் மீது இன்று பொது விவாதம் தொடருவதாக இருந்தது. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., முத்துக்குமரன், நேற்று விபத்தில் இறந்துள்ளார். எனவே, இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சட்டசபையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு, அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும். அத்துடன் சட்டசபை ஒத்தி வைக்கப்படும். நாளை மீண்டும் சபை கூடும் போது, பட்ஜெட் மீதான பொது விவாதத்தில், கட்சித் தலைவர்கள் பேச உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நல்ல மனிதர். எளிமையானவர் , எல்லா மக்களுக்கும் உதவும் குணம் உள்ளவர் . gov related jobs ( பட்டா மாற்றுதல், மின்சாரம் வாங்கி தருவது, ஏழை மாணவர்களுக்கு loan வாங்கிதருதல், etc.) போன்ற வேலைகளை எப்பொழுதும் முன்னின்று செய்து தருபவர். அவர் இழப்பு புதுக்கோட்டை மக்களுக்கும் பேரிழப்பு. அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிறர்ர்த்திபோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.