ஆந்திர மாநிலம், வரதய்யபாளையம் அருகே, தெலுங்கு கங்கை கால்வாய் அருகில் கட்டப்பட்ட உப்பலமடுகு மதகை சீரமைப்பதில், அம்மாநில அரசு அலட்சியம் காட்டுகிறது. இதனால், கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா நீர், சென்னைக்கு முழுமையாகக் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை நகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய, கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம், தமிழக - ஆந்திர மாநிலங்கள் இடையே, 1983ல் ஏற்பட்டது. இதன்படி, ஜூலை - அக்டோபர் மாதங்களில், 8 டி.எம்.சி., நீரும், ஜனவரி - ஏப்ரல் மாதங்களில், 4 டி.எம்.சி.,யும் தர வேண்டும்.இத்திட்டத்திற்காக, கண்டலேறு அணையில் இருந்து வெங்கடகிரி, காளஹஸ்தி, வரதய்யபாளையம், சத்தியவேடு வழியாக, 152 கிலோ மீட்டர் தூரம் உள்ள, தமிழக எல்லையான, ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் வரை கால்வாய் அமைக்கப்பட்டது. அங்கிருந்து, 25 கிலோ மீட்டர் தூரம், பூண்டி ஏரிக்கு கால்வாய் அமைக்கப்பட்டது.
உப்பலமடுகு மதகு : கண்டலேறு அணையில் இருந்து, 117வது கிலோ மீட்டர் தூரத்தில், உப்பலமடுகு என்ற இடத்தில், 1996ம் ஆண்டு, 60 லட்சம் ரூபாய் செலவில், மதகு கட்டப்பட்டது. இது, வரதய்யபாளையம் மலைப் பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் இருந்து வெளியேறும் தண்ணீர், தெலுங்கு கங்கை கால்வாயின் கீழே செல்லும் வகையிலும் கட்டப்பட்டது. இதனால், கிருஷ்ணா நீர், உப்பலமடுகு மதகில், எவ்வித இடையூறும் இல்லாமல், சென்னைக்கு வந்து கொண்டிருந்தது.
வெள்ளத்தால் சேதம்:கடந்த நவம்பர் மாதம், ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாக, வரதய்யபாளையம் நீர்வீழ்ச்சியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரும் வெள்ளம் காரணமாக, உப்பலமடுகு மதகு அப்படியே பெயர்ந்து, தெலுங்கு கங்கை கால்வாய் நடுவில் விழுந்தது. சேதமடைந்த கால்வாய், இதுவரை சீரமைக்கப்படவில்லை.மேலும், மதகு அருகில், கால்வாய் கரை பெயர்ந்து, மணல் குவியல், கால்வாயின் நடுவில் மலைபோல் குவிந்துள்ளது. இதனால், கண்டலேறு அணையில் இருந்து, தெலுங்கு கங்கை கால்வாயில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டால், பெருமளவு தண்ணீர் சேதமாகி விடும். இதற்காகத் தான், ஒப்பந்தப்படி, ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையான காலத்திற்கான, கிருஷ்ணா நீர் திறக்கப்படவில்லை. சேதமடைந்த கால்வாயை சீரமைத்தால் தான், கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு முழுவதும் கிடைக்கும்.
தமிழக அதிகாரிகள் ஆய்வு:சேதமடைந்த மதகை, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், இது குறித்து, ஆந்திர மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அவர்களிடம், "ஒப்பந்த காலத்திற்குள், சேதமடைந்த கால்வாய் சீரமைக்கப்படும். இல்லாவிட்டால், சென்னைக்கு திறக்கப்படும் தண்ணீர், சேதமில்லாமல் கிடைக்க, சேதமடைந்த உப்பலமடுகு அருகில், பூமிக்கடியில் குழாய் அமைத்து, தண்ணீர் கொண்டு செல்லப்படும்' என தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை, சேதமடைந்த பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை.இதுகுறித்து, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, "வரதய்யபாளையம் அருகே, சேதமடைந்த கால்வாயைச் சீரமைக்க, மதிப்பீடுகள் தயார் செய்து அனுப்பப்பட்டு உள்ளதாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகள் முடியாவிட்டால், சேதமடைந்த கால்வாய் அருகில், மாற்று ஏற்பாடுகள் செய்து, தமிழகத்திற்கு உரிய நேரத்தில் கிருஷ்ணாநீர் தரப்படும் என ஆந்திர அதிகாரிகள் உறுதியாக தெரிவித்தனர்' என்றார்.
முதல்வர் கையில்...:இந்த உறுதியை அம்மாநில பொதுப்பணித் துறையினர் நிறைவேற்ற, தமிழக முதல்வர், ஆந்திர முதல்வருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். அப்படி நெருக்கடி கொடுக்காவிட்டால், தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் கிடைப்பதில், சிக்கல் ஏற்படும். இதன் காரணமாக சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
சீரமைப்பு பணியில் தாமதம் :வரதய்யபாளையம் நீர்வீழ்ச்சி அருகில், உப்பலமடுகு மதகு 80 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர், தெலுங்கு கங்கை கால்வாயின் அடியில் செல்லும் வகையில், 8 தூண்கள் அமைக்கப்பட்டு, அதில், சிமென்டால் ஆன தடுப்புச் சுவர், கட்டப்பட்டிருந்தது.தற்போது இந்தச் சுவர் முழுவதும் பெயர்ந்து விட்டது. இதைச் சீரமைக்க, 10 கோடி ரூபாய் ஆகும் என, ஆந்திர மாநில பொதுப்பணித் துறையினர் மதிப்பிட்டுள்ளனர். திட்டப்பணியை நிறைவேற்ற, ஒரு ஆண்டு ஆகும். இதனால், தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.இதையடுத்து, தற்காலிக ஏற்பாடாக 60 லட்சம் ரூபாய் செலவில், தெலுங்கு கங்கை கால்வாயில் இருந்து வரும் தண்ணீர், உப்பலமடுகு அருகில் பூமிக்கடியில் குழாய் பதித்து, கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், இப்பணிக்கு டெண்டர் இதுவரை வழங்கப்படவில்லை.
- என்.சரவணன் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழ் நாடு அரசு நீர் மேலாண்மையில் முழு கவனம் செலுத்தவேண்டிய நேரமிது. இந்த நிலை நீடித்தால், தமிழ் நாட்டில் பெரும் தண்ணீர் தட்டுபாடு வரும். அன்று தி மு க தமிழ் நாட்டை தனி நாடாக பிரிக்க போராடிய பொது மத்திய அரசு மொழி வாரி மாநிலங்களை அமைத்தது. அப்போது தமிழ் நாட்டுக்கு முடிந்தவரை குறைவான நிலப்பகுதி வருமாறு பார்த்துக்கொண்டது. இப்படி செய்ததினால், ஆறுகள் உற்பத்தியாகும் பகுதிகள் அனைத்தும் மற்ற மாநில எல்லைக்குள் சென்றுவிட்டது.
தண்ணீர் பிரட்சினை தமிழகத்தில் தாண்டவமாடும் முன்பாகவே அதுகுறித்த விழிப்புணர்வு, அரசு மற்றும் மக்களுக்கு வந்தாக வேண்டும். சென்னை மட்டுமல்ல, நம் மாநிலத்தின் இன்ன பிற பகுதிகளிலும் இப்பிரட்சினை தலை தூக்கக்கூடும். நகர்புற மக்கள் மழை நீரின் சேமிப்பை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். நகர்ப்புற வீடுகளில் மரம் வளர்ப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும். கிராமங்களில் உள்ள ஊருணி, குளம், கிணறு, ஏரி, ஆறு போன்றவை உடனுக்குடன் தூர்வாரப்பட வேண்டும். அரசானது, நாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும், அதிக மழை பொழியும் இடங்களை தெரிவு செய்து, புதிய நீர் ஆதாரங்களை உருவாக்க வேண்டும். விவசாயிகளுக்கான நீர் பயன்பாட்டின் புதிய உத்திகளை வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு எடுத்து கூறவேண்டும். அதிக நீர் தேவைப்படுகின்ற விவசாயப்பயிர்களை உற்பத்தி செய்வதை கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு லாபமளிக்கும் வகையில் உள்ள குறைந்த நீர் பயன்பாட்டில் உள்ள பயிர்களை அறிமுகப்படுத்த வேண்டும். இதன் மூலம் நீர் பயன்பாட்டினை கட்டுப்படுத்த முடியும். நமது தமிழகம் நீருக்காக அண்டை மாநிலங்களை நம்பி வாழ்வாதாரப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்நிலை மாற வேண்டுமானால், நம் மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். ஒரு தேசத்தில் வாழும் மக்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வெளிமாநிலங்களிலிருந்து அரசு எளிதில் தருவித்து மக்களை வாழ்விக்க முடியும். ஆனால், குடிக்கும் தண்ணீரை தனது இடத்தில்தான் எடுத்தாக வேண்டும். இல்லையென்றால், எதிர்காலத்தில் நாம் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். ஆகவே, நாம் தண்ணீரை, அதன் அருமையை உணரவேண்டும். மழை பொழிவிக்கு ஆதாரமான காடுகளை வளர்ப்பதிலும், கால்நடைகளை பராமரிப்பதிலும், இயற்கை விவசாயத்தை நவீன தொழில் நுட்பம் கொண்டு அணுகுவதனாலும், நீரைச் சேமித்தலிலும், அதை முறையாக சூழலுக்கேற்ப விவசாய பயன்பாட்டிற்கு உட்படுத்துதலிலும் தமிழக மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அரசு, மக்களுக்கான அதற்குரிய முன்னேர்ப்பாட்டு வழிமுறைகளை ஆராய்ந்து இப்போதே விரைந்து நடைமுறைப்படுத்த துவங்க வேண்டும்.
என்னது???? தமிழக முதல்வர், ஆந்திர முதல்வருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமா?????? இப்பத்தான் நடராஜனுக்கு, மகாதேவனுக்கு, ராவணனுக்கு நெருக்கடி கொடுத்து, சசியோடு உள்ளே.....வெளியே நெருக்கடி கொடுத்து பெங்களூர் பிரச்சனைய முடிச்சிருக்காங்க........ ஆந்திரா முதல்வருக்கு நெருக்கமானவங்க யாராவது சென்னையில இருந்தா சொல்லுங்க........ நெருக்கடி கொடுத்திடலாம்...........
சென்னையில் குடிநீர் பஞ்சம் ....... தென் தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் அணு உலைகளால் கதிர்வீச்சு ஆபத்து ....... அதற்கும் தெற்க்கே இலங்கையில் பாதி அழிந்துவிட்டது ... மீதி மக்கள் துன்பத்தில் .....மத்திய தமிழ்நாட்டில் முல்லை பெரியார் அணையிலிருந்து தண்ணீர் கிடைப்பதில் பிரச்சனை ........ காவேரி தண்ணீர் பிரச்சனை ..... எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்க்கும்போது என்னால் ஊகிக்க முடிகிறது .......... நூறு வருடங்களுக்கு பிறகு நம் தமிழ்நாடு எப்படி இருக்கும் என்று ....... தமிழ் மக்கள் மேல் தமிழ்நாட்டின் மேல் அக்கறை உள்ள சரியான தலைமை இல்லை என்றால் என் ஊகம் சரியானதாகவே இருக்க வாய்ப்பு இருக்கிறது ....
எங்கள் பிரபஞ்ச பேரழகி தமன்னா ரசிகர் மன்ற தலைவர் ரேஷன் கடைக்கு சென்று கெரோசின் வாங்கி வந்து கொண்டு இருக்கும் பொழுது போலீஸ் அதை புடுங்கி கொண்டார்களாம். அவர் நடு ரோட்டில் நின்று கொண்டு சாபம் விட்டாராம் தமிழ்நாட்டு மக்கள் நீரின்றி சாக வேண்டும் அல்லது தமன்னா கட் out க்கு பால் அபிஷேகம் செய்தால் மழை பெய்யும் என்று வள்ளு ஜோசியன் கூறியுள்ளார். நானும் குஞ்சுமணி போல் comedyaga எழுத வேண்டும் என்று பார்கிறேன் முடியவில்லை sami

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.