Athipurisvarar temple sets example in maintenance of deities vahanas | வாகன பராமரிப்பில் வழிகாட்டுகிறது ஆதிபுரீஸ்வரர் கோவில் : 100 ஆண்டுகளை கடந்த மிகப்பெரிய அதிகார நந்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாகன பராமரிப்பில் வழிகாட்டுகிறது ஆதிபுரீஸ்வரர் கோவில் : 100 ஆண்டுகளை கடந்த மிகப்பெரிய அதிகார நந்தி

Added : மே 01, 2012 | கருத்துகள் (5)
Advertisement

சென்னை:சிற்பங்கள், உலோகத் திருமேனிகள், தேர் போன்றவை நூற்றாண்டுகளைக் கடந்து நிற்பதைக் கண்டிருக்கிறோம். சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவிலில் இரு வாகனங்கள் நூற்றாண்டைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன; ஒரு வாகனம் 200 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.


துபாஷி புதுப்பித்தது:சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஆதிபுரீஸ்வரர் கோவில்களில் உள்ள மூல மூர்த்திகள் 500 ஆண்டுகள் தொன்மை உடையவை. 1,787ல் கிழக்கிந்திய கம்பெனி சார்பில் சென்னை கவர்னராக இருந்த சர் ஆர்ச் கேம்பெல்லிடம், துபாஷியாக பணியாற்றிய ஆதியப்ப நாயக்கர், இந்த இரு கோவில்களையும் புதுப்பித்துள்ளார்.அதனால், அவரது வம்சாவளியினரே இரு கோவில்களையும் நிர்வகித்து வருகின்றனர். ஆதிபுரீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பெருவிழா நடக்கும். இதில் மூன்றாம் நாள் பகலில் வீதியுலா வரும் பூத வாகனம், இரவில் வரும் அதிகார நந்தி வாகனம், காமதேனு வாகனம் ஆகியவை தான் அந்தப் பெருமைக்குரிய வாகனங்கள்.இவற்றில், அதிகார நந்தி வாகனம் தனிச் சிறப்புடையது. நந்தி மட்டும் 6 அடி உயரம், நந்தியின் பாதத்தின் கீழ் இருக்கும் கயிலாய மலை 3 அடி உயரம், அதன் கீழ் இருக்கும் சட்டம் 3 அடி உயரம் என, மொத்தம் 12 அடி உயரம் உள்ளது இந்த வாகனம்.கீழ் சட்டத்திற்கும் கீழே வைப்பதற்கு, 3 அடி உயரமுள்ள மற்றொரு சட்டம் இருந்ததாகவும், அதையும் சேர்த்தால் மிக அதிக உயரமாக வாகனம் இருக்கும் எனவும் தெரிவித்த, கோவில் அர்ச்சகர் பொன். சரவணன், அந்த உயரத்திற்கு இப்போது வீதியில் வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளதால், அது பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிக்கப்பட்டு, உயரம் குறைக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.


63 வகையான பொம்மைகள்:வாகனத்தின் உச்சி முதல் பாதம் வரை ஆங்காங்கே உள்ள கம்பிகளில், மொத்தம் 63 வகையான பொம்மைகள் பொருத்தப்படுகின்றன. அதிகார நந்தி இசைக்கு தலைவர் என்பதால், அவரைச் சுற்றி இசையில் மூழ்கியிருக்கும் கந்தர்வ பொம்மைகள் உள்ளன. கீழே முதல் வரிசையில் எட்டுத் திசை பாதுகாவலர்களான இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரது பொம்மைகள் வைக்கப்படுகின்றன.


பிருங்கி, சுக முனிவர்கள்: இசைக்கு இலக்கணம் வகுத்த நாரத முனிவர், தும்புரு முனிவர் பொம்மைகளும், பதஞ்சலி, புலிக்கால் முனிவர், பிருங்கி முனிவர், சுக முனிவர் பொம்மைகளும் உள்ளன. கயிலாய மலையில் ஒரு காலில் நின்றபடி, யோக பட்டம் காட்டியபடி என, பல்வேறு நிலைகளில் தவம் புரியும் முனிவர்கள் பொம்மைகளும் உள்ளன.அதிகார நந்தியின் மேற்பகுதியில் சுவாமியும் அம்மனும் அமரும் பீடத்தின் அடிப் பகுதியின் இரு பக்கத்திலும் பறக்கும் கந்தர்வ பொம்மைகள் வைக்கப்படுகின்றன. இவை அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், இசைக் கடலில் மூழ்கியபடி, அந்தப் பேரானந்தத்தில் திளைத்தபடி இறைவனைச் சுமக்கத் தயார் என, நந்தி தேவர் வீறார்ந்த காட்சி அளிப்பது போலவே தோன்றும்.


வேலைப்பாடு மிளிரும் நந்தி:நந்தி தேவரின் ஒவ்வொரு அங்கமும் பார்த்து பார்த்து செய்யப்பட்டிருக்கிறது. அவரது கைகளும், தொடைகளும், கால்களும் கட்டுமஸ்தாக உருவாக்கப்பட்டுள்ளன. இடை சுருங்கி, அடிவயிறு குவிந்திருப்பது ஒரு யோகியின் நிலையைக் காட்டுகிறது.முன்னிரு கரங்களும் இறைவனின் பாதங்களைத் தாங்கும் நிலையில் இருக்க, பின்னிரு கரங்களில், மானும், மழுவும் ஏந்தியுள்ளார்.அவரது மார்பில் வரிசையாக ஆபரணங்கள் தனித் தனியாக தெரியும் படி செதுக்கப்பட்டுள்ளன. அதிகார நந்தி வாகனத்திலும் இதில் பொருத்தப்படும் பொம்மைகளும், காமதேனு வாகனமும் தங்க ரேக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, முலாம் பூசப்பட்டது போல் காட்சியளிக்கின்றன.


தெ.பொ.மீ.,யின் தந்தை:அதிகார நந்தி, காமதேனு வாகனங்களை ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்குச் செய்தளித்தவர் பொன்னுசாமி கிராமணி என்பவர். இவர் தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் தந்தை.கடந்த, 1901ல் அதிகார நந்தியையும், 1929ல் காமதேனுவையும் பொன்னுசாமி செய்தளித்துள்ளார். இந்த இரு வாகனங்களுடன் பூத
வாகனமும் சேர்த்து, ஆதிகேசவப் பெருமாள் கோவில் வாசல் அருகில் உள்ள, மிகப் பெரிய அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பொன்னுசாமி கிராமணிக்கு, சதாவதானி கிருஷ்ணசாமிப் பாவலர், தெ.பொ.மீ., முத்துக்குமாரசாமி என மூன்று மகன்கள். முத்துக்குமாரசாமி வழி வந்த நமசிவாயம் என்பவர் தற்போது இந்த வாகனங்களைப் பராமரித்து வருகிறார். அவற்றின் மீது பூசப்பட்ட தங்க ரேக்குகள் இன்று உதிர்ந்து வாகனங்கள் களையிழந்து காட்சியளிக்கின்றன.


மயிலாப்பூரில் கேட்டார்கள்?ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்கு, ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் செலவழித்து, ராவணேஸ்வரன் வாகனம் செய்த கோவில் அர்ச்சகர் குடும்பத்தைச் சேர்ந்த பொன்.சரவணன் கூறுகையில், "எப்படியாவது இந்த இரண்டு வாகனங்களையும் புதுப்பிக்க வேண்டும். குறைந்தது, 10 லட்ச ரூபாயாவது வேண்டும்' என்றார். சென்னையின் சுற்றுவட்டாரத்தையே தனது பேரழகில் மயக்கி வைத்திருக்கிறார் இந்த அதிகார நந்தி.200வது ஆண்டில் பூத வாகனம்அதிகார நந்தி வாகனத்தின் புகழுக்குச் சற்றும் குறையாதது பூத வாகனம். சிவாலயங்களில் உள்ள முக்கியமான வாகனங்களில் இதுவும் ஒன்று.பொன்னுசாமி கிராமணியின் முன்னோர் சுப்பராய கிராமணி என்பவர், 1812ம் ஆண்டில் இந்த வாகனத்தைச் செய்து கொடுத்துள்ளார். இதுவரை இரண்டு முறை மட்டுமே இந்த வாகனம் வண்ணப்பூச்சு கண்டிருக்கிறது. சமீபத்தில் தான் இரண்டாவது முறையாக வண்ணம் பூசப்பட்டுள்ளது.பூத வாகனத்தின் முன்னிரு கைகளும் இறைவனின் திருவடிகளை ஏந்துவது போல் அமைக்கப்பட்டிருக்க, பின்னிரு கரங்களில் கத்தியும், கேடயமும் உள்ளன. மொத்தம், ஏழு அடி உயரம் உள்ள இந்த வாகனத்தின் ஒவ்வொரு பாகத்திலும் ஸ்தபதி புகுந்து விளையாடியிருக்கிறார்.


கலை நுணுக்கம்:உருட்டும் விழிகளுடனும், மிரட்டும் வெட்டரிவாள் மீசையுடனும், கட்டுமஸ்தான தேகத்துடனும், ஒரு காலை மடித்து ஒரு காலை நீட்டி எழுந்திருக்கத் தயார் நிலையில் உள்ளது இந்த பூதம். பல கோவில்களில், வாகனங்களின் கலை நுட்பத்தை உணராமல் கைக்கெட்டிய வர்ணத்தைத் தெளித்து, கலவையாக அடித்து விடும் அவலம் தான் நடக்கிறது. இங்கு அதுபோல் அல்லாமல், பூத வாகனத்தின் கலை நுணுக்கத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், வண்ணம் பூசப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது.வழிகாட்டுகிறதுகடந்த, 200 ஆண்டுகளாக இந்தப் பூத வாகனம் தொடர்ந்து, வீதியுலா வந்து கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது, நமக்கு புளகாங்கிதம் ஏற்படுகிறது. கோவில்களில் உள்ள வாகனங்களை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதில், சிந்தாதிரிப் பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவில் வழிகாட்டியாகத் திகழ்கிறது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poornima - Singapore,சிங்கப்பூர்
04-மே-201218:24:04 IST Report Abuse
Poornima முந்தைய காலங்களில், செய்யும் எந்த தொழிலும் நேர்மையாகவும் சிரத்தையுடன் செய்யப்பட்டதால் காலத்தை விஞ்சி நிற்கின்றன.. இப்போ எல்லாம் யாரு தரத்தோட செய்யறாங்க. சீக்கிரம் உடைஞ்சால்தானே மறுபடியும் அவங்களுக்கு வாங்க ஆள் இருப்பாங்க.. திரும்ப டெண்டர் விடலாம். பணம் அடிக்கலாம்..
Rate this:
Share this comment
Cancel
Karthick Prabu - Chennai,இந்தியா
02-மே-201212:43:21 IST Report Abuse
Karthick Prabu இவ்வளவு சிறப்பு வாய்ந்த சிலைகளை முழுவதுமாக படம் பிடித்து வெளியிட்டால் நேரில் பார்க்க முடியாதவர்களுக்கு பெரும் பாக்கியமாக இருக்கும். சிற்பங்கள் போற்றி வணங்கி பராமரிக்கப்படவேண்டியவை,
Rate this:
Share this comment
Cancel
sadhagan - chennai,இந்தியா
02-மே-201210:50:33 IST Report Abuse
sadhagan மிகவும் மகிழ்ச்சியான செய்தி. ஆனால்,எங்கள் ஊர் கோயிலில் இருந்த கலை நுட்பம் வாய்ந்த வாகனங்கள் மற்றும் தேர் விலை மதிப்பற்றபொம்மைகள் பல( தேர் குதிரைகள், பிரம்மா, கந்தர்வ பொம்மைகள் மற்றும் பழைய தேரில் இருந்த சிற்பங்கள் போன்றவை) காணாமல் போய்விட்டது. தற்போது கோயிலை ஆக்கிரமித்துள்ள ஒரு கும்பல் அவற்றை இந்து அறநிலைய ஆட்சித் துறை அதிகாரிளுக்குத் தெரியாமல் விற்றுவிட்டனரா அல்லது அறநிலைய ஆட்சித்துறையே விற்று விட்டதா என தெரியவில்லை. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க யாருக்கு புகார் செய்யவேண்டும் போன்ற தகவல்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.இந்த பதிவின் மூலம் என்போன்றோரது மனக்குறை வெளிப்படும். தீர்வு கிடைக்குமா ?
Rate this:
Share this comment
Cancel
Katpadi Arul - Katpadi, Vellore,இந்தியா
02-மே-201207:29:59 IST Report Abuse
Katpadi Arul முதலில் இதை எழுதிய நிருபருக்கு நன்றி. இவ்வளவு பழமையான ஆனால் அதிகம் வெளியில் தெரியாத கலை நுணுக்கம் கொண்ட சிலைகள், கோவில் பற்றி எழுதியதற்கு நன்றி. தினமலரின் சிறப்பே சாதாரண மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் செய்திகளை அளிப்பதும், மூலை முடுக்கெல்லாம் சென்று அறிய செய்திகளை கண்டு பிடித்து வாசகர்களுக்கு அளிப்பதாகும். நன்றி நிருபர், நன்றி தினமலர்.
Rate this:
Share this comment
Cancel
Isai Mazai - Melbourne,ஆஸ்திரேலியா
02-மே-201205:37:34 IST Report Abuse
Isai Mazai இவ்வளவு சிறப்பு வாய்ந்த சிலைகளை இன்னும் தெளிவாக , முழுவதுமாக படம் பிடித்து வெளியிட்டால் நேரில் பார்க்க முடியாதவர்களுக்கு பெரும் பாக்கியமாக இருக்கும். உலகில் இந்து மத சிற்பங்கள் போற்றி வணங்கி பராமரிக்கப்படவேண்டியவை,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை