தி.மு.க., அறிவித்துள்ள சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் அனுமதி பெற முடிவு செய்துள்ளார். வரும் 2ம் தேதி கோர்ட் திறப்பதால், 4ம் தேதி பங்கேற்கும் கூட்டத்திற்கு உடனடியாக அனுமதி கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அ.தி.மு.க., அரசின் கைது நடவடிக்கையை கண்டித்து, வரும் 4ம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தை, தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது. மாவட்டத்திற்கு, 10 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்றும், சிறைக்குச் சென்று, ஜாமினில் வெளியே வர விரும்பாமல் அரசே விடுதலை செய்யும் வரை உள்ளே இருக்கும் கட்சியினருக்கு பதவி வழங்கப்படும் என, தி.மு.க., செயற்குழுவில் பொருளாளர் ஸ்டாலின் அறிவித்தார்.
10 ஆயிரம் : தென்சென்னை, வட சென்னை, காஞ்சிபுரம் போன்ற, சில மாவட்டங்களில் தலா, 10 ஆயிரம் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும். வட்டத்திற்கு 100, ஒன்றியத்திற்கு 100 என்ற எண்ணிக்கையில் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என, தொண்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைதாக வேண்டும் என, கட்சித் தலைமை விருப்பம் தெரிவித்துள்ளது.
ஸ்டாலின், கனிமொழி அழைப்பு:மாவட்ட வாரியாக அவசர செயல்வீரர்கள் கூட்டத்தை, தி.மு.க.,வினர் மிக வேகமாக நடத்தி வருகின்றனர். மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் முடிந்த கையோடு, நகர, பகுதி, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் வரை கூட்டம் சங்கிலி தொடராக நடந்து வருகிறது. இந்நிலையில், ஒன்றிய செயலர்களிடம் தனிப்பட்ட முறையில், ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கிறார்.
இன்னொரு பக்கம் கனிமொழியும், தன் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்த வண்ணம் இருக்கிறார். சிறை நிரப்பும் மறியல் போராட்டம் குறித்து, விளக்கப் பொதுக்கூட்டங்கள் வரும், 28ம் தேதி முதல், 1ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடக்கிறது. வரும் 1ம் தேதி, தாம்பரத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசுகிறார். வரும் 1ம் தேதி, குடந்தையிலும், 2ம் தேதி மயிலாடுதுறையிலும் பொருளாளர் ஸ்டாலின் பேசுகிறார்.
வரவேற்பு:வரும் 28ம் தேதி, சிதம்பரத்தில் கனிமொழி பேசுகிறார். இவர், சிதம்பரம் நகரில் முதன்முறையாக பேசுவதால், அக்கூட்டத்திற்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. கனிமொழி ஆதரவாளர்கள் அவருக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். வரும் 4ம் தேதி, சிதம்பரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவும், கனிமொழி விருப்பம் தெரிவித்துள்ளார்.
கோர்ட்டில் மனு:இதற்கான அனுமதியை, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் பெறுவதற்காக, அவர் சிறப்பு மனுவையும் தாக்கல் செய்கிறார் என கூறப்படுகிறது. கோடை விடுமுறைக்கு பின், வரும் 2ம் தேதி, கோர்ட் திறக்கப்படுகிறது. கோர்ட் திறந்த இரண்டு நாட்களுக்குள், வரும் 4ம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க, கனிமொழிக்கு கோர்ட் அனுமதி அளிக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தி.மு.க.,வினர் வேகமாக உள்ளனர்: கருணாநிதி:"சிறை நிரப்பும் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு, சிறைக்குப் போயே தீர வேண்டும் என்பதில், கட்சியினர் வேகமாக இருக்கின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:போராட்டத்தில் கலந்து கொண்டு, எப்படியும் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதிலும், சிறைக்குப் போயே தீர வேண்டும் என்பதிலும், கட்சியினர் வேகமாக இருக்கின்றனர். தொண்டர்களை விட, கட்சி முன்னணியிலே இருப்பவர்களே சிறைக்குச் செல்லத் தயாராகி விட்டோம் என்பதையும், என்னைச் சந்திக்கும் போதெல்லாம் ஆர்வத்தோடு சொல்லி வருகின்றனர்.இவ்வறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எல்லா இந்திய குடி மக்களும் புரிஞ்சுக்கோங்க கனி மொழிக்கு இந்த சுதந்திர வாழ்க்கை புடிக்கல அப்படின்னா , இப்போ இருக்க ஜெயிலுல எல்லாம் அந்த அளவுக்கு வசதிகள் இருக்கு நம் சுதந்திர தியாகிகள் அந்தமான் சிறையிலும் செக்கிழுத்த செம்மல் வா . வூ . சி. பட்ட கஷ்டங்கள் ஒன்றும் இப்போ இல்லைங்குறது நல்லா புரியுது ஜெயிலுல இப்போ சிக்கன் , T . V , மற்றும் எல்லா வசதியும் கிடைக்குதே போங்கடா நீங்களும் , உங்க போராட்டமும்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.