கருத்துகள் (3)
கருத்தை பதிவு செய்ய
மதுரை : மதுரை மத்திய சிறையில் டி.ஐ.ஜி., கண்காணிப்பாளர், ஜெயிலர் பதவிகள் தொடர்ந்து காலியாக இருப்பதால், வெளிமாவட்ட அதிகாரிகள் கூடுதல் பொறுப்பாக கவனிக்கின்றனர். நேரடி கண்காணிப்பு இல்லாததால் காவலர்களும், தடைசெய்ய பட்ட பொருட்கள் சிறைக்குள் தாராளமாக ஊடுருவதால் கைதிகளும் "ஜாலியாக' உள்ளனர்.
மதுரை, பாளையங்கோட்டை மற்றும் தென்மாவட்ட சிறைகள் உட்பட கிளை சிறைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களை கண்காணிக்கவும், சிறை நிர்வாகத்தை கவனிக்கவும் மதுரையை தலைமையிடமாக கொண்டு டி.ஐ.ஜி., பதவி உருவாக்கப் பட்டது. இப்பதவியை வகித்த கண்ணன், 2009 டிச.,31ல் ஓய்வு பெற்ற பின், யாரும் நியமிக்கப்பட வில்லை. கோவை சிறை டி.ஐ.ஜி.,யாக இருக்கும் கோவிந்த ராஜன் கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார். இரு வாரங்களுக்கு ஒருமுறை மதுரை மண்டலத்திற்கு ட்பட்ட சிறைகளுக்கு வருகிறார். கண்காணிப்பாளர் பதவி முக்கியமானது. இதுவும் காலியாகவே உள்ளது. கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த முனியசாமி, பதவி உயர்வு பெற்று சேலத்திற்கு இடமாற, இதுவரை இந்த பதவி "காத்திருப்போர் பட்டியலில்' வைக்கப் பட்டுள்ளது.
திருச்சி ஆண்கள் சிறை கண்காணிப்பாளர் முருகேசன், மதுரை சிறையை கூடுதலாக கவனித்தார். ஒரே நேரத்தில் இரு சிறைகளையும் கண்காணிப்பது சிரமம் என்பதால், திருச்சி பெண்கள் சிறை கண்காணிப் பாளர் ஜெயபாரதிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரும் அவ்வப்போது வந்து செல்கிறார். கண்காணிப்பாளர் இல்லாத சமயத்தில் ஜெயிலர்தான் சிறை நிர்வாகத்தை கவனிக்க முடியும். இந்த பதவியும் காலியாகவே உள்ளது. ஜெயிலராக இருந்த குமரேசன் பதவி உயர்வு பெற்று, இடமாறிச் செல்ல, இணை ஜெயிலர் தமிழ்ச்செல்வன் அந்த பொறுப்பை கவனித்து வந்தார். இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இவர் இடமாற்றப்பட, ஆறுமுகம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறை நிர்வாகத்தை கவனிக்கும் முக்கிய அதிகாரிகளின் பணியிடங்கள் தொடர்ந்து காலியாக உள்ளதால், நேரடி கண்காணிப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இது காவலர்களுக் கும், கைதிகளுக்கும் வசதியாக உள்ளது. கூடுதல் பொறுப்பு அதிகாரிகள் பணிச்சுமை காரணமாக, நிர்வாகத்தை திறம்பட நடத்துவார்களா என்பது சந்தேகம். இதனால் சில காவலர்களின் துணையோடு, தடைசெய்யப்பட்ட பொருட்கள் கைதிகளுக்கு தாராளமாக "உள்ளே' அனுப்பப் படுகிறது. "கணக்கு" காண்பிப்பதற்காக அவ்வப்போது கஞ்சா, மொபைல்போன், சிம்கார்டு கண்டுபிடிக்கப்படுவதுண்டு. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், நேர்மையான நிர்வாகம் நடக்கவும், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப சிறை ஐ.ஜி., திரிபாதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.