கருத்துகள் (6)
கருத்தை பதிவு செய்ய
4 வது நாளிலும் ( இன்று ) விலைவாசி உயர்வு பிரச்னையால் பார்லிமென்ட் முடங்கியது. எடுத்துவிட்டது. ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தை நடத்தியே ஆக வேண்டுமென எதிர்க்கட்சிகளும், ஓட்டெடுப்பு இல்லாத விவாதத்தை ஏற்றுக் கொள்ள தயாரென ஆளும் தரப்பும் உறுதியாக நிற்கின்றன. இதனால், பார்லிமென்டின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் முற்றிலுமாக முடங்கிப்போய் கிடக்கின்றன.
நேற்று காலை பார்லிமென்ட் கூடுவதற்கு முன்பாக, 10 மணியளவில் இடதுசாரிகள், அ.தி.மு.க., தெலுங்கு தேசம், பிஜுஜனதா தளம் கட்சிகள் ஓரணியாக திரண்டன. இந்த கட்சிகளின் எம்.பி.,க்கள் அவைக்குள் நுழையும் பிரதான வாயில் அருகே அமர்ந்து, அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். விலைவாசி உயர்வை கண்டித்தும் இப்பிரச்னை குறித்து ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தை வலியுறுத்தியும் இவர்கள் கோஷங்கள் இருந்தன. பின்னர், 11 மணிக்கு அவைக்குள் நடவடிக்கைகள் ஆரம்பமாகத் துவங்கியபோது இடதுசாரிகளும், அ.தி.மு.க.,வும் மட்டும் அவைக்குள் வந்து அமரவில்லை.
அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜை பேச சபாநாயகர் மீரா குமார் அழைத்தார். அப்போது சுஷ்மா, "எங்களது ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தது மிகவும் வருத்தமளிக்கிறது. சபாநாயகர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். ஆனாலும் நீங்கள் மக்களின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் அளித்த தீர்ப்பாகவே எங்களுக்கு படுகிறது. இருப்பினும் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தை நடத்த வேண்டும்' என்றார்.
சரத் யாதவ் பேசும்போது, "ஆளுங்கட்சியையும், அரசையும் மட்டுமே பாதுகாக்க வேண்டிய கடமை இருப்பதாக சபாநாயகர் கருதக் கூடாது. எதிர்க்கட்சிகளின் உணர்வுகளையும் மதிக்க முன்வர வேண்டும். மக்களின் மனநிலை எரிமலையாய் உள்ளது. 184வது பிரிவின் கீழ் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் தான் வேண்டும்' என்றார். முலாயம், லாலு ஆகியோரும் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தை வலியுறுத்தினர். பகுஜன் சமாஜ் கட்சியும் ஓட்டெடுப்பு வேண்டுமென கேட்டது. இருப்பினும் அரசு தரப்பில் இதற்கு தயாராக இல்லை. விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்த தயார். ஆனால், 193வது பிரிவின் கீழ் வேண்டுமானால் விவாதம் நடத்திக் கொள்ளலாம்' என்றதால், அவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் அவை மீண்டும் கூடியபோது, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் எழுந்து நின்றன. மீண்டும் கோஷங்கள் கிளம்பவே அவையில் கூச்சல் குழப்பமாக இருந்தது. அப்போது, இடதுசாரி உறுப்பினர்களும் எழுந்து நின்றனர். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த எம்.பி.,யான குருதாஸ்தாஸ் குப்தா போய் அவர்களை அமரும்படி கூறினார். பா.ஜ.,வோடு இணைந்து செயலாற்றக் கூடாது என்று அவர் கூறவே இடதுசாரி கட்சி எம்.பி.,க்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்துவிட்டனர். பின்னர் தொடர்ந்து கூச்சல் குழப்பமாகவே இருந்ததால் அவை நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாமல், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபாவிலும் நேற்று காலையில் கூடியதும், கேள்வி நேரத்தை எடுத்துக் கொள்ள எதிர்க்கட்சிகள் அனுமதிக்கவில்லை. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மதியம் 12 மணிக்கு திரும்பவும் கூடியபோது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கூச்சல் குழப்பத்தால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் ஆதரிப்பதில் போட்டி: காலையில் அவைக்கு வெளியே அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிவிட்டு 11 மணிக்கு அ.தி.மு.க., எம்.பி.,க்கள் அவைக்குள்ளேயே வரவில்லை. பின்னர் 12 மணிக்கு அவைக்குள் வந்தனர். அப்போது மற்ற எதிர்க்கட்சிகளைப் போல விவாதத்துடன் ஓட்டெடுப்புடன் கூடிய 184வது பிரிவை வலியுறுத்தி அவர்கள் பேசவும் இல்லை. தங்களது இருக்கையை விட்டும் எழவில்லை. மறைமுகமாக அ.தி.மு.க., அளித்த இந்த ஆதரவு, ஆளும் தரப்பில் உள்ள காங்கிரசுக்கு பெரிய நிம்மதியை அளித்ததுபோல தெரிந்தது.
நேற்று முன்தினம் திரிணமுல் காங்கிரஸ் கூட விவாதத்தை ஏற்பதாக கூறிய நிலையில், தி.மு.க., மட்டும் ஒத்திவைப்பு தீர்மானத்தை எதிர்ப்பதாக அவையில் வெளிப்படையாகவே தெரிவித்தது. இந்நிலையில், நேற்று அ.தி.மு.க., அவையில் எடுத்த நிலை, காங்கிரஸ் வருத்தப்பட்டுவிட கூடாது என்பதை காட்டியது. விலைவாசி பிரச்னைக்காக பிற எதிர்க்கட்சிகள் அனைத்துமே ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தை வலியுறுத்திய போதிலும், தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் மட்டுமே ஆளும் காங்கிரசுக்கு போட்டி போட்டுக் கொண்டு ஆதரவு காட்டுவது போல தெரிகிறது.
- நமது டில்லி நிருபர் -