டாஸ்மாக் கடைகளில் பார்களுக்கான டெண்டர் நாள் நெருங்கி வருவதால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, பார்களை பெற்றவர்களை ஒதுக்கிவிட்டு, சுழற்சி முறையில் இதர கட்சியினரும் பயனடையும் வகையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, அவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
அரசு திட்டங்கள் மட்டுமின்றி ஆளுங்கட்சியினருக்கு, வசூலை வாரிக்கொடுக்கும் துறையாகவும் இருப்பது டாஸ்மாக். இதற்கான, பார்களை டெண்டர் விடுவதற்கான ஏற்பாடுகள் விரைவில் துவங்க உள்ளது. கடந்த முறை நடந்த டெண்டரின்போது, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, ஆளுங்கட்சி மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் பலர் விருப்பத்திற்கேற்ற
எண்ணிக்கையில் கடைகளை அபகரித்தனர்.
பினாமி: பார் வருமானம் மட்டுமின்றி, மலைப்பகுதி, குக்கிராமங்களில்
"செல்லிங்' நிர்வாகத்தையும் கையில் எடுத்துக் கொண்டனர். இதில்,
பினாமிகளாகப் பலரை நியமித்து, பெருமளவில் கல்லா கட்டினர். இதில் "ருசி' கண்ட முதல் நிலை நிர்வாகிகள், தற்போதைய டெண்டரில் ஒதுக்க வேண்டிய பார்களுக்கான பட்டியலை தயாரித்து விட்டனர். இதனை பெறுவதற்கான கவனிப்புகளுக்கும் ஆயத்தமாகி விட்டனர்.
கடிதம்: பார் ஒதுக்கீட்டுக்கு முன்னதாக, கட்சித் தலைமையின் கவனத்திற்கு தங்களது நிலையை கொண்டு செல்ல வேண்டும் என, அவர்கள் முடிவெடுத்துள்ளனர். மாவட்டச் செயலர்களின் ஆதரவாளர்கள், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களின்
Advertisement
ஆதரவாளர்கள் மட்டுமே, தற்போது பார்களில், "கட்டிங்' வசூலித்து வருவதையும், ஆதாரபூர்வமாகக் குறிப்பிட்டு, கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதத் தயாராகி வருகின்றனர். எனவே, இம்முறை கட்சியின் அடுத்தடுத்த பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு, சுழற்சி முறையில் பார் ஒதுக்கீட்டில், முன்னுரிமை அளிக்க கட்சி மேலிடம் உத்தரவிட வேண்டும் என்று குமுறுகின்றனர் பாதிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள்.
- நமது நிருபர் -