பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டர் நாளை பதவியேற்கிறார். இன்று நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் அவர் சட்டசபை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக முதல்வர் பதவியிலிருந்து விலக சதானந்தா 3 நிபந்தனைகளை விதித்தார். அவரை பா.ஜ., மேலிடம் சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே துணை முதல்வர் பதவி குறித்து இதுவரை பரிசீலனை செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநில புதிய முதல்வராக, ஜெகதீஷ் ஷெட்டர் நாளை பதவியேற்கிறார். இதையொட்டி, சட்டசபை கட்சி தலைவராக அவரை தேர்வு செய்வதற்கு, பெங்களூருவில், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க, பா.ஜ., மேலிடத் தலைவர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், மேலிடப் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் ஆகியோர், பெங்களூரு வந்துள்ளனர்.
"மாஜி'க்கள் முகாம்:இதற்கிடையில், புதிய அமைச்சரவையில் இடம்பிடிப்பதற்காக, சதானந்த கவுடா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களும், சில முன்னாள் அமைச்சர்களும், பெங்களூருவில் முகாமிட்டு, தங்களின், "காட்பாதர்' வழியாக முயற்சித்து வருகின்றனர். சிலர், ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொண்டு, அமைச்சர் பதவியைப் பெற விரும்புகின்றனர்.சதானந்த கவுடாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அனைத்து மூத்த அமைச்சர்களும், ஷெட்டர் அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்புள்ளது. இது தவிர, புதியவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் திட்டம் உள்ளதால், இதுவரை அமைச்சர் பதவி பெறாதவர்களும், தங்கள் ஆதரவாளர்களுடன் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
ஜாதிவாரியாக பதவி:இதற்கிடையில், தற்போதைய அமைச்சரவையில் செயல்படாத சிலரும் நீக்கப்படுவர் என்ற கருத்தும் நிலவுகிறது. அவ்வாறு நீக்கினால், மீண்டும் குழப்பம் ஏற்படும் என்ற காரணத்தால், அமைச்சரவை பட்டியல் தயாரிப்பவர்களுக்கு தலைவலி ஏற்பட்டது.புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள ஜெகதீஷ் ஷெட்டர், மேலிடப் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதானை, மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகத்தில் சந்தித்து, ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், ஜாதிவாரியாகவும், மாவட்டம் வாரியாகவும் அமைச்சர் பதவி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
போர்க்கொடி :இதன் பின், எடியூரப்பாவின் தீவிர எதிர்ப்பாளரான எம்.பி., அனந்தகுமார், வீட்டுக்குச் சென்று ஆலோசனை நடத்தினார். இதனால், கர்நாடக அரசியலில் பரபரப்பு தலை தூக்கியது.கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராவதால், அந்த பதவியை பெறுவதற்கு, சில மூத்த அமைச்சர்கள் ஆர்வம்
காட்டியுள்ளனர். எடியூரப்பா, தன் ஆதரவாளர்கள் பலருக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று, ஜெகதீஷ் ஷெட்டரிடம் நிர்பந்தித்துள்ளார். இதே வேளையில், சதானந்த கவுடாவுக்கு மாநிலத் தலைவர் பதவி அளிக்கக் கூடாது என, எடியூரப்பா ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் பசவராஜ் பொம்மை, முருகேஷ் நிரானி, உதாசி, ரேவுநாயக் பெலமகி, ராஜுகவுடா, ரேணுகாச்சார்யா, உமேஷ் கட்டி, சோமண்ணா உட்பட, சில அமைச்சர்கள், தனியாக ஆலோசனை நடத்தினர்.பிரதானுடன், சதானந்த கவுடா ஆதரவாளரான அமைச்சர் ஜார்கிஹோலி தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார். முதல்வர் பதவியிலிருந்து விலகும் சதானந்த கவுடாவுடன், ஈஸ்வரப்பா ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார்.
துணை முதல்வர்:ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்த சதானந்த கவுடா பதவி இறக்கப்பட்டதால், பா.ஜ., தலைவர்கள் மீது கோபம் கொண்டுள்ள அந்த சமுதாயத்தினரை சமாதானப்படுத்துவதற்காக, துணை முதல்வர் பதவியை அளிக்க வேண்டும் என்ற கருத்தும், தலைவர்களிடம் விவாதிக்கப்பட்டு வருகிறது.அமைச்சர்கள் அசோக், கோவிந்த் கார்ஜோல் மற்றும் பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா ஆகியோர், துணை முதல்வர் பதவிக்கு, "அடி' போட்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.