புதுடில்லி : தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை, மீண்டும் அந்தப் பதவிக்கு தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி ஆர்வமாக உள்ளது.
தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி, துணை ஜனாதிபதி பதவிக்கு இதுவரை யாருடைய பெயரையும் பரிசீலிக்கவில்லை. மேலும், அப்படியே வேட்பாளரை நிறுத்தினாலும், அவரை வெற்றி பெற வைக்க தேவையான பலம் தங்களிடம் இல்லாததால், இந்த விவகாரத்தில் முயற்சி எடுக்க அந்தக் கட்சி விரும்பவில்லை.
முடிவில் மாற்றம்: அதேநேரத்தில், தற் போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை மீண்டும் அந்தப் பதவிக்கு தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ளது. ஜனாதிபதி பதவிக்கே, அன்சாரியின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில், காங்கிரஸ் தன் முடிவை மாற்றிக் கொண்டது. பிரணாப் முகர்ஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அதனால், ஜனாதிபதி பதவி விவகாரத்தில், அன்சாரிக்கு ஏற்பட்ட அதிருப்தியைப் போக்க அவரை மீண்டும் துணை ஜனாதிபதியாக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங், கடந்த சனிக்கிழமை இதுதொடர்பாக முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான தேவகவுடாவுடன் பேசி உள்ளார். அப்போது, அன்சாரிக்கு ஆதரவு தருவதாக தேவகவுடா கூறி உள்ளார். இத்தகவலை மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தகவல் தொடர்பாளர் டேனிஷ் அலி கூறியுள்ளார். அன்சாரியின் பெயரைத் தவிர வேறு யாருடைய பெயர் பற்றியும் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
அன்சாரியை, துணை ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் தேர்வு செய்வதன் மூலம், சிறுபான்மை இனத்தவரை திருப்திப்படுத்த முடியும் என, காங்கிரஸ் நம்புகிறது.
கராத்துடன் ஆலோசனை : தேவகவுடாவுடன் விவாதித்ததைப் போல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் கராத்தையும், பிரதமர் மன்மோகன் சிங் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தொலைபேசியில் நடந்த இந்த உரையாடலின் போது, துணை ஜனாதிபதி பதவிக்கு யாரை தேர்வு செய்யலாம் என, அவர்கள் விவாதித்ததாகத் தெரிகிறது. "மூன்று நாட்களுக்கு முன், பிரதமர் மன்மோகன் சிங் என்னுடன் பேசினார். துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான என் கருத்தை கேட்டார். நானும் என் கருத்தைத் தெரிவித்தேன்' என, கராத் கூறினார்.
"ஒன்றிணைந்து வேட்பாளரை நிறுத்த வேண்டும்':புதுடில்லி: "துணை ஜனாதிபதி தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளருக்கு போட்டியாக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும்' என, ஐக்கிய ஜனதா தள கட்சி கூறியுள்ளது.
இதுதொடர்பாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத்யாதவ் கூறியதாவது:ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில், எதிர்க்கட்சி கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மையே. ஜனாதிபதி தேர்தல் என்பது மாறுபட்ட ஒன்று. அரசியலில் மிகுந்த அனுபவம் கொண்டவர் பிரணாப் முகர்ஜி. அவர் நாட்டைப் புரிந்து கொண்டவர். அதனால், ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவு அளித்தோம். ஆனால், துணை ஜனாதிபதி தேர்தல் அப்படியல்ல. எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து, ஒருமித்த கருத்தின் அடிப்படையில், ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும். துணை ஜனாதிபதி பதவியை அலங்கரிப்பவர் நடுநிலைவாதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து கட்சிகளும், பார்லிமென்டில் பிரச்னைகளை எழுப்ப முடியும். துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, எங்களுடன் யாரும் ஆலோசிக்கவில்லை.இவ்வாறு சரத்யாதவ் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.