உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் கட்சி அடியோடு வழித்தெறியப்பட்டு, படுதோல்வியை சந்தித்துள்ளது. இத்தனைக்கும், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள், களத்திலேயே இல்லாது இருந்தும் கூட, சின்னதொரு வெற்றியைக் கூட, காங்கிரசால் ஈட்ட முடியவில்லை. இந்தத் தோல்வி, எதிர்வரும், 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம், காங்கிரஸ் மேலிடத்தை, கலக்கம் அடையச் செய்துள்ளது.
உ.பி., மாநிலத்தில், கடந்த சட்டசபைத் தேர்தலில், மிகப்பெரிய தோரணையுடன் காங்கிரஸ் போட்டியிட்டும், பரிதாபமாக தோற்றது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அங்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலின் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. அதில், காங்கிரஸ் கட்சிக்கு, மரண அடியை அம்மாநில மக்கள் தந்துள்ளது, அரசியல் அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் உள்ள 12 மாநகராட்சிகளில், அனைத்திலும் காங்கிரஸ் போட்டியிட்டும், ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. மாறாக, 10 மாநகராட்சிகளில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள இரண்டில், சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்பு:இந்த உள்ளாட்சித் தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் போட்டியிடவில்லை. மாநிலத்தின் பிரதான கட்சிகளான இவை இரண்டுமே, களத்தை விட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்ததால், இந்த உள்ளாட்சித் தேர்தல், மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது. மதசார்பற்ற ஓட்டுக்கள் எல்லாம், யாருக்கு கிடைக்கப்போகிறது என்ற பரபரப்பும், கேள்வியும் எழுந்தது.களத்தில் உள்ளது, காங்கிரசும், பா.ஜ.,வும் மட்டுமே. எனவே, பா.ஜ.,வுக்கு எதிரான மதசார்பற்ற ஓட்டுக்கள் எல்லாம், காங்கிரசுக்குத் தான் கிடைக்கும், மிகப்பெரிய திருப்புமுனை, இந்தத் தேர்தலில் உருவாகும் என, பரவலாக பேசப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள், இவை அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டன. காங்கிரஸ் கட்சி, படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
போட்டியிடவில்லை:ஆளும் கட்சியாக இருந்தும் கூட, சமாஜ்வாதி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. மாயாவதி ஆட்சியை வீழ்த்தி, சில மாதங்களுக்கு முன்னர் தான், இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தது. மாநிலம் எங்கும், சட்டம்-ஒழுங்கு சரியில்லாமல் இருந்து வருகிறது. மக்களின் எதிர்பார்ப்பு எப்படியிருக்குமோ என்ற பயமும், அந்த கட்சிக்கு இருந்து வருகிறது. இப்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளோம். உடனடியாக, இன்னொரு தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போனால், ஆட்சிக்கு கெட்டபெயர் வருமே என்ற எண்ணத்தில், இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
பிரதமர் பதவி மீது ஆசை:தவிர, சமாஜ்வாதி கட்சி, எப்போதுமே பா.ஜ.,வை எதிர்த்தே அரசியல் செய்தால் தான் நல்லது என்று நினைக்கிறது. மதவாத பூதத்தை காட்டினால் தான், முஸ்லிம்களின் ஓட்டுக்களை வாங்கலாம் என்றும், அந்த கட்சி கருதுகிறது. தவிர, முலாயம் சிங்கிற்கு, எப்போதுமே பிரதமர் பதவியின் மீது, ஒரு கண் உள்ளது. உ.பி., மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான், நாட்டின் பிரதமர் பதவியை அலங்கரிக்க வேண்டுமென்ற ஆசையே, இதற்கு காரணம். இப்போது, உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளதால், அதைக் காட்டியே, அடுத்த தேர்தலில் முஸ்லிம்களின் ஓட்டுக்களை அள்ளலாம் என்று போட்ட கணக்கு நிறைவேறியிருப்பதாக, அந்த கட்சி நினைக்கிறது.
பகுஜன் விலகியது ஏன்?பகுஜன் சமாஜ் கட்சியைப் பொறுத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஆட்சியில் இருந்து விட்டோம். பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்தும் உள்ளோம். தவிர, இப்போது தான் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இப்போது, மீண்டும் தேர்தலில் உடனடியாக இறங்கினால், ஆளுங்கட்சியினர் அராஜகத்தோடு ஈடுகொடுக்க வேண்டும். தவிர, தொண்டர்களும் சற்று சோர்வடைந்துள்ளனர். எனவே, முழு பலத்தையும், பார்லிமென்ட் தேர்தலில் காட்டி, வெற்றியைப் பெற்றுவிட வேண்டும் என நினைத்து, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை.
ஓட்டு போட மறுப்பு:ஆக, மதசார்பற்ற ஓட்டுக்களை, எப்போதுமே பிரித்துக் கொள்ளும் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதியும், இந்த தேர்தலில் பங்கு பெறாமல் புறக்கணித்து விட்டும் கூட, காங்கிரசால் அதை அறுவடை செய்ய முடியவில்லை. மக்கள் மத்தியில், காங்கிரஸ் மீதான ஊழல் மற்றும் விலைவாசி ஏற்றம் ஆகிய பிரச்னைகள், பெரிதும் பாதித்துக் கொண்டிருப்பது, இந்த தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள படித்த வாக்காளர்கள் அனைவருமே, காங்கிரசை வெறுத்து, அந்த கட்சிக்கு ஓட்டுப் போட மறுத்திருப்பதும், தெளிவாக தெரிகிறது.நேரு குடும்பத்தின் சொந்த ஊர்களாக கருதப்படும், அமேதி, ரேபரேலி ஆகிய இடங்களில் கூட, காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் கட்சியின் இந்த படுதோல்வி, 2014ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில், நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால், உள்ளாட்சித் தேர்தல் தோல்வி, காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சியை அளித்திருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகராட்சியும் கைவிட்டது:மாநகராட்சிகள் தான் என்றில்லை. நகராட்சிகளிலும் கூட, பெரிய அளவில் காங்கிரஸ் கைப்பற்றாமல் தோல்வியை தழுவியுள்ளது. மொத்தம் உள்ள, 186 நகராட்சிகளில், பா.ஜ., 41 நகராட்சிகளை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 14 இடங்களில் மட்டுமே, வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள, 131 நகராட்சிகளை சுயேச்சைகள் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் அனைவருமே, பகுஜன் சமாஜ் அல்லது சமாஜ்வாதி கட்சிகளின் ஆதரவுடன், இந்த நகராட்சிகளை கைப்பற்றியுள்ளனர்.
- நமது டில்லி நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இமநிலகட்சிகள் இரண்டுமே, மக்களோடு நெருக்கமாக உள்ள கட்சிகளே தேர்தலை சந்திக்க திராணி இல்லாமல் ஒதுங்க, தேசீய கட்சிகளான காங்கிரசும், பிஜேபி யும் நேருக்கு நேர் மோதின. உத்திரபிரதேச மக்கள் காங்கிரசின் மீது
தீராத வெறுப்புடன் இருந்ததால் பிஜேபி சுலபமான வெற்றியை பெறமுடிந்தது. இது அவர்களுக்கு கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பு. கிடைத்த இடங்களில் செம்மையான நிர்வாகத்தை கொடுத்து, அவர்கள் மீது மக்கள் வைத்திருக்கும் அபிமானத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போது தான் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில்
u பி மாநிலத்தில் மிகபெரிய வெற்றியை பெறமுடியும். அதுமட்டுமல்ல வீணான உட்கட்சி பூசல் களை வளர்துகொண்டிராமல், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை
பெற முயற்சி செய்யவேண்டும். அதுமத்துமல்ல ஜனாதிபதி தேர்தலில் முடிவெடுக்கமுடியாமல் காலதாமதம் செய்த்தது போல செய்யாமல் விரைந்து செயல் பட்டு இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். காங்கிரசுக்கு மாற்றாக உள்ள ஒரே தேசீய கட்சி பி ஜே பி தான். மக்களுக்காக பணியாற்றுகிறோம் என்ற நினைப்போடு செயல்படுங்கள். பாரதத்தை காப்பற்றுங்கள்.
மக்களின் வாக்குகளை பெற்று அரசியல் அமைப்பு சட்டப்படி நல்லாட்சி செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்த காங்கிரஸ், சட்டத்தை வளைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை விலை பேசியும் சட்டத்தால் மிரட்டியும், மற்றும் அடிபணியாத மாநில அரசுகளை அதிகாரத்தால் மிரட்டியும் விளையாண்ட சதுரங்க விளையாட்டின் முடிவுரையோ இது ?
உ பி உள்ளாட்சி தேர்தலில் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பகுஜன் சமாஜ் கட்சி போட்டி இடவே இல்லை
ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்து பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து, சமீபத்தில் நடந்த மாநிலத்தேர்தலில் மக்களால் தூக்கி எறியப்பட்ட கட்சி. உள்ளாட்சி தேர்தலில் பங்கு பெற்றால் மக்களின் தீர்ப்பு சாதகமாக இருக்காதுஆளும் கட்சியின் அதிகார பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாது தோல்வி ஏற்பட்டால் தொண்டர்கள் சோர்ந்து விடுவார்கள் என்ற பயத்தின் காரணமாக தேர்தலில் பங்குபெற விரும்பாமல் ஒதுங்கிக்கொண்டது.
a
காங்கிரஸ் கட்சி தன தவறான நடவடிக்கையால் தனக்கு தானே குழி வெட்டிகொண்டது.இந்திய மக்களுக்கு எதிராக ஆட்சி செய்கிறது காங்கிரஸ்.எங்கு நோக்கினும் லஞ்சம்,,பெட்ரோல் விலை தருமாரக ஏற்றம்,பொருளாதார வளர்ச்சி தடை,ரூபாயின் மதிப்பு குறைவு,2G spectrum பெரு ஊழல்,இலங்கையில் படு கொலை,அதற்க்கு ஆயுத பயிற்சி அழிப்பது,என்றும் தொடரும் மீனவர் பிரச்சினை,தீராத நதி நீர் பிரச்சினை,அதர்ஸ் ஊழல் பிரச்சினை,ராணுவ ஊழல் பிரச்சினை,305 கொடிகளை வாரியிறைத்து உலக பயணம்.கர்நாடக சுரங்க ஊழல் ,இதையெல்லாம் நோக்கும் பொது காங்கிரஸ் என்றோ தோற்று விட்டது.இனி நல்ல காங்கிரஸ் ஆட்சி வருமா?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.