புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக துணைஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான முடிவு ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை சோனியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதனையடுத்து ஆகஸ்ட் 7ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சிகள் தீவிரமாக ஆலோசனை செய்ய தொடங்கின. ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீத் அன்சாரியே மீண்டும் நிறுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகி வந்தன. துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தது. ஹமீத் அன்சாரியை தி.மு.க., ஆதரிக்கும் என அக்கட்சி தலைவர் கருணாநிதி சென்னையில் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று டில்லியில் பிரதமர் இல்லத்தில் துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஹமீத் அன்சாரியை நிறுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் ஹமீத் அன்சாரியை மீண்டும் துணை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது என்ற முடிவை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். துணை ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது முறையாக ஹமீத் அன்சாரியை நிறுத்துவதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெருமையடைவதாக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா கூறினார்.
இந்த தேர்தலில் ஹமீத் அன்சாரிக்கு பெரும்பான்மையான எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் ஹமீத் அன்சாரி வெற்றி பெறும் நிலையில், டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன் இரண்டு முறை (1652 முதல் 1962 வரை) பதவி வகித்த சாதனையை சமன் செய்வார் .
டில்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் துணை ஜனாதிபதி தேர்தலில் ஹமீத் அன்சாரியை நிறுத்துவதற்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்து கொண்ட மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் முகுல் ராய் எதிர்ப்பு தெரிவித்தார். ஹமீத் அன்சாரி குறித்து மம்தா முடிவு செய்வார் என அவர் கூறினார். துணை ஜனாதிபதி தேர்தலில் கோபால கிருஷ்ண காந்தி மற்றும் கிருஷ்ண போஸ் ஆகியோரது பெயரை திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பரிந்துரை செய்தார்.
பா.ஜ., நிராகரிப்பு!துணை ஜனாதிபதி வேட்பாளர் ஹமீத் அன்சாரிக்கு ஆதரவு கேட்டு பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.,வின் மூத்த தலைவர் அத்வானி, லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரிடம் ஆலோசனை செய்தததாக டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஹமீத் அன்சாரியை ஏற்றுக்கொள்ள முடியாது என சுஷ்மா கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லோக்பால் மசோதா மீதான விவாதத்தின்போது அவையை ஒத்திவைத்த காரணத்தினால் பா.ஜ., அன்சாரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
முலாயம், மாயாவதி ஆதரவு: ஹமீத் அன்சாரிக்கு முலாயமின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. அன்சாரியின் பெயர் அறிவிக்கப்பட்டஉடன் பிரதமர், மாயாவதி மற்றும் முலாயம் சிங்குடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். ஹமீத் அன்சாரியை தொடர்பு கொண்ட மாயாவதி, அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
மம்தாவிடம் அன்சாரிக்கு ஆதரவு கோரினார் பிரதமர்: துணை ஜனாதிபதி தேர்தலில் ஹமீத் அன்சாரிக்கு ஆதரவு கேட்டு பிரதமர் மன்மோகன் சிங், மேற்கு வங்க மாநிலமுதல்வர் மம்தா பானர்ஜியடம் ஆதரவு கேட்டதாக திரிணமுல் எம்.பி., குணால் கோஷ் கூறினார். இதனிடையே ஹமீத் அன்சாரிக்க ஆதரவு குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என திரிணமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு இடதுசாரிகளின் பரிந்துரை பேரில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஹமீத் அன்சாரியை துணை ஜனாதிபதிவேட்பாளராக அறிவித்தது. அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.,வின் நஜ்மா ஹெப்துல்லாவை 455 ஓட்டுக்கள் பெற்று தோற்கடித்தார். ஜனாதிபதி தேர்தலில் ஹமீத் அன்சாரியின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் பிரணாப் முகர்ஜி பெயர் அறிவிக்கப்பட்டதால் அந்த வாய்ப்பை இழந்த அன்சாரி, தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.