துணை ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு, அவ்வளவு எளிதாக வெற்றி வாய்ப்பை தந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியும் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. பா.ஜ., மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங், களம் இறக்கப்பட்டுள்ளதால், இவருக்கும் அன்சாரிக்கும் இடையே நேரடிப் போட்டி உருவாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிராக லோக்சபா முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார். சங்மாவை, பாரதிய ஜனதா, பிஜு ஜனதா தளம் மற்றும் அ.தி.மு.க., உட்பட சில கட்சிகள் ஆதரிக்கின்றன.
பங்கேற்றது யார் யார்?இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணியின் வேட்பாளராக, தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்காக, நேற்று அந்தக் கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் டில்லியில் நடந்தது. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியின் வீட்டில், கூட்டணியின் அமைப்பாளர் சரத் யாதவ் தலைமையில் நடந்த கூட்டத்தில், பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி, லோக் சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், சிவசேனா சார்பில் முரளி மனோகர் ஜோஷி, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி மற்றும் அகாலிதளம் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
சரத் யாதவ் மறுப்பு:காலை 11 மணிக்கு கூடிய கூட்டம் இரண்டு மணி நேரம் நீடித்தது. துணை ஜனாதிபதி தேர்தலில், யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று ஆலோசித்தபோது, முதலில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரான சரத் யாதவ் பெயர் பரிசீலிக்கப்பட்டது. அவரிடம் பேசியபோது, "வாய்ப்புக்கு நன்றி. ஆனால், நான் தீவிர அரசியலில் உள்ளேன். எனவே, இப்போது துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது சாத்தியமில்லை' என்று கூறி விட்டார்.இதையடுத்து, பா.ஜ., மூத்த தலைவரான ஜஸ்வந்த்சிங் பெயரை பரிசீலித்து, அவரை துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக நிறுத்துவது என, முடிவெடுக்கப்பட்டது.
வெற்றி எளிதல்ல :ஆலோசனை கூட்டம் முடிந்ததும், நிருபர்களிடம் பேசிய அத்வானி கூறியதாவது:தே.ஜ. கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி தேர்தலில் ஜஸ்வந்த்சிங் போட்டியிடுவார். ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு, வெற்றி வாய்ப்பை அவ்வளவு எளிதாக கிடைக்கவிட மாட்டோம். எனவே, போட்டியிட்டே தீருவது என, முடிவெடுத்து ஜஸ்வந்த்சிங்கை நிறுத்தியுள்ளோம். ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளர் யார் என்பதை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி முடிவு செய்து அறிவித்து விட்டு, அதன்பிறகே எங்களுக்கு தெரிவித்தது. துணை ஜனாதிபதி தேர்தலிலோ முடிவெடுத்துவிட்டு, அறிவிக்கப் போவதற்கு ஐந்து நிமிடம் முன்பாக, எங்களுக்கு தெரிவித்தது. எதிர்க்கட்சிகளை நடத்தும் போக்கை இதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.போட்டியா அல்லது காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதா என்ற ஆலோசனையின் இறுதியில், அனைத்து தலைவர்களுமே போட்டியிட்டே ஆக வேண்டுமென்ற நிலைக்கு வந்தனர்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு, அவ்வளவு எளிதில் வெற்றி வாய்ப்பை கைகளில் தூக்கி தந்துவிட முடியாது. இதுதான் போட்டிக்கு காரணம் என்றாலும்கூட, இன்னும் சில காரணங்களும் உள்ளன. ஆளும் தரப்பு நிறுத்தியுள்ள வேட்பாளரான அமீத் அன்சாரி, கடந்த 5 ஆண்டுகளாக ராஜ்ய சபாவை நடத்தி வந்துள்ளார். அவர் தன் பதவியில், நேர்மையுடன் செயல்படவில்லை. அவரது நடுநிலைமை சந்தேகம் கொள்வதாக உள்ளது. அவர் மீது நிறைய வருத்தங்கள் எதிர்க்கட்சிகளுக்கு உள்ளன. குறிப்பாக லோக்பால் மசோதா விவகாரம்.
லோக்பால் மசோதா மீதான விவாதம் நடந்து, இறுதியில் ஓட்டெடுப்பு நடத்துவதற்கு பதிலாக, நேரமில்லை என்று காரணம் காட்டி, நள்ளிரவில் அவர் திடீரென சபையை ஒத்திவைத்தார். எதிர்க்கட்சிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டார். அன்றைக்கு ஆளும் தரப்புக்கு, முழுக்க முழுக்க சாதகமாக அன்சாரியின் நடவடிக்கைகள் இருந்ததை, எங்களால் இன்னமும் மறக்க முடியாது.ஜஸ்வந்த்சிங்தான் எங்களது கூட்டணியின் வேட்பாளர். அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம் ஆகிய கட்சிகளிடம் உரிய முறையில் பேசி, அவர்களுடைய ஆதரவையும் பெறுவோம். மம்தா பானர்ஜியிடமும் ஆதரவு கேட்போம். இப்போதுதான் வேட்பாளரை முடிவு செய்துள்ளாம். விரைவில் இந்தத் தலைவர்களிடம் ஆதரவு கேட்போம்.இவ்வாறு அத்வானி கூறினார்.
அத்துமீறிய செயல்:உடனிருந்த சரத் யாதவ் பேசும்போது, ""மகளிர் இடஒதுக்கீடு மசோதா அறிமுகத்தின்போது, அன்சாரி நடந்து கொண்ட விதம் ஆட்சேபணைக்குரியது. பார்லிமென்ட் வரலாற்றில் இல்லாத வகையில், சபைக்குள் மார்ஷல்களை நூற்றுக்கணக்கில் அழைத்து வந்து, மசோதாவை எதிர்க்கும் எம்.பி.,க்களை அடக்கப் பார்த்தார். சபைக்குள் இவ்வாறு மார்ஷல்கள் நுழைந்து அத்துமீறியது அதுவே முதல்முறை. ஜனநாயக நடவடிக்கைகளுக்கு மிகவும் விரோதமான நடவடிக்கை அது. அதை செய்தவர் அன்சாரி என்பதை நாங்கள் மறக்கவில்லை,'' என்றார்.
"ஜெயலலிதாவிடம் பேசுவேன்':துணை ஜனாதிபதி வேட்பாளராக தன் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட ஜஸ்வந்த் சிங், பின்னர் கூறியதாவது:தே.ஜ., கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக என் பெயரை அறிவித்திருப்பது பெருமையளிப்பதாக உள்ளது. கூட்டணி கட்சிகள் என்னை ஒருமனதாக தேர்வு செய்து அறிவித்துள்ளன. தேர்தலில் என்னை ஆதரிக்கும்படி, தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரிடம் கேட்கவுள்ளேன். வெகுவிரைவில் இவர்களை தொடர்பு கொண்டு பேசுவேன். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சங்மாவையும், என்னையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அது வேறு, இது வேறு. இரண்டுக்கும், முடிச்சுப் போடுவது சரியல்ல.தவிர நான், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து பார்லிமென்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எம்.பி., . எனவே, என்னை ஆதரிக்கும்படி அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கேட்பதற்கு அதிக உரிமை உள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் அடையாளத்திற்காக போட்டியிடுகிறேன் என்று கூறப்படுவதும் தவறு. அரசியல் நிலைமைகள் எவ்வளவோ மாறிவிட்டன. எனவே, போட்டி என்று வந்து விட்டால், வெற்றி பெறுவதற்காகவே. நானும் வெற்றியை நோக்கியே களம் இறங்கியுள்ளேன்.இவ்வாறு ஜஸ்வந்த் சிங் கூறினார்.
ஜஸ்வந்த் சிங் வெற்றி பெறுவாரா?துணை ஜனாதிபதி தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பா.ஜ., மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் அறிவிக்கப்பட்டாலும், பார்லிமென்டில் கட்சிகளுக்கு உள்ள எம்.பி.,க்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், அவர் வெற்றி பெறுவது கடினமே எனக் கூறப்படுகிறது.
துணை ஜனாதிபதியை, லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும். இரு சபைகளிலும் சேர்த்து (லோக்சபா 545 + ராஜ்யசபா 245) மொத்த எம்.பி.,க்களின் எண்ணிக்கை 790. தேர்தலில் வெற்றி பெற, 790 ஓட்டுகளில் குறைந்தபட்சம் 396 ஓட்டுகளைப் பெற வேண்டும். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான, தற்போதைய துணை ஜனாதிபதிக்கு குறைந்தபட்சம் 438 ஓட்டுகள் கிடைக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஜஸ்வந்த் சிங் இந்த அளவுக்கு ஓட்டுகளைப் பெற முடியுமா என்பது சந்தேகமே.
ஆதரவு எப்படி? ஐ.மு., கூட்டணியில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியைத் தவிர, மற்ற அனைத்து கட்சிகளும் ஹமீது அன்சாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இது தவிர சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளும் அவருக்கு ஆதரவு தருவதாக உறுதி அளித்துள்ளன. இந்தக் கட்சிகளில் காங்கிரசுக்கு (278), பகுஜன் சமாஜ் (36), சமாஜ்வாதி (31), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (27), தி.மு.க., (25), தேசியவாத காங்கிரஸ் (16), ராஷ்டிரிய லோக்தளம் (5), ராஷ்டிரிய ஜனதா தளம் (5), தேசிய மாநாட்டு கட்சி (5) என்ற அளவில் எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்கள் தவிர, பார்வர்டு பிளாக், முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ், வேறு பல சிறிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களின் ஆதரவு அன்சாரிக்கு உண்டு.
அ.தி.மு.க., முடிவு என்ன?ஜஸ்வந்த் சிங்கிற்கு பா.ஜ., (163), ஐக்கிய ஜனதள தளம் (29), சிவசேனா (15), அகாலிதளம் (7), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (3) அரியானா ஜன்ஹித் கட்சி (1) ஆகியவற்றின் ஓட்டுகள் நிச்சயம் உண்டு. மேலும், 21 எம்.பி.,க்களைக் கொண்ட பிஜு ஜனதா தளம் மற்றும் 14 எம்.பி.,க்களைக் கொண்ட அ.தி.மு.க., போன்றவை இன்னும் தங்கள் நிலை என்ன என்பதை வெளிப்படுத்தவில்லை. அதேபோல், ஐ.மு., கூட்டணியில் உள்ள 28 எம்.பி.,க்களைக் கொண்ட திரிணமுல் காங்கிரஸ் கட்சியும் தன் முடிவை தெரிவிக்கவில்லை. அதுமட்டுமின்றி, நியமன எம்.பி.,க்கள் 10 பேர் உட்பட, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 125 எம்.பி.,க்கள், யாரை ஆதரிப்பது என்ற தங்களின் முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த எம்.பி.,க்கள் எல்லாம் ஜஸ்வந்த் சிங்கிற்கு ஆதரவு அளித்தால் கூட, அவர் 300 ஓட்டுகளைத் தான் பெற முடியும் என்று கூறப்படுகிறது. அதனால், துணை ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றி பெறுவது கடினமே.
யார் இவர்?தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜஸ்வந்த் சிங், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவர். 1938, ஜன., 3ம் தேதி, ராஜஸ்தானில் ராஜ்புதானா என்ற இடத்தில் பிறந்தார். மயோ கல்லூரி, தேசிய பாதுகாப்பு பயிற்சி மையம் ஆகியவற்றில் படிப்பை முடித்தார். இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். இவருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர்.ராஜ்யசபா எம்.பி.,யாக 1980ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990ல் லோக்சபா எம்.பி., ஆனார். வாஜ்பாய் தலைமையிலான குறுகிய கால ஆட்சியில் (1996 மே 16 முதல் 1996 ஜூன் 1 வரை) நிதியமைச்சராக பதவி வகித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அமைந்த வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில், வெளியுறவுத் துறை அமைச்சராக (1998 - 2002) பதவி வகித்தார். இடையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த யஸ்வந்த் சின்கா மீது தெகல்கா ஊழல் பிரச்னை எழுந்ததால், பாதுகாப்பு அமைச்சர் பதவியை கூடுதல் பொறுப்பாக கவனித்தார். 2009 - 2010ல் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகித்தார்.
சிறந்த எம்.பி.,:கடந்த 2001ம் ஆண்டு, "சிறந்த லோக்சபா எம்.பி.,' என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது. 2009 ஆக., 19ம் தேதி இவர் எழுதி வெளியிட்ட, "ஜின்னா - இந்தியா, பிரிவினை, விடுதலை' என்ற புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜ., கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்தது. இவரது புத்தகம், குஜராத்தில் தடை செய்யப்பட்டது. இதையடுத்து, பா.ஜ.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின், மீண்டும் பா.ஜ.,வில் சேர்ந்தார்.
- நமது டில்லி நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.