சென்னை:"இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பெற, அறவழியில் எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது தான், "டெசோ' மாநாட்டின் திட்டமாகவும், தீர்மானமாகவும் இருக்கும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பெற வேண்டும். ஆயுதப் போராட்டத்திற்குப் பின், எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்த வேண்டும். அவர்களுக்கு போரினால் ஏற்பட்ட இன்னல்களைக் களைந்திட, அறவழியில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தான், சென்னையில் நடத்தப்போகும் மாநாட்டின் திட்டமாகவும், தீர்மானமாகவும் இருக்கும்.தனித் தமிழ் ஈழம் வேண்டும்; அதுவும் இன்றைக்கே வேண்டும். அதற்கு ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்று சொன்னால், உடனே, இவர் இப்படிச் சொன்னதால் தான், இலங்கைத் தமிழர்கள் அடிபட்டு சாக வேண்டி இருக்கிறது. அவர்களின் அழிவுக்கு இவர் தான் காரணம் என்பர்.
முதலில் இலங்கைத் தமிழர்களின் தற்போதைய துன்பங்கள் தீர வேண்டுமென்றும், மற்றவற்றைப் பற்றி நேரம் பார்த்து சிந்தித்துச் செயல்படலாம் என்றும் சொன்னால், பார்த்தீர்களா, தமிழ் ஈழம் கொள்கையையே விட்டு விட்டார் என்பர்.தமிழ் ஈழத்தைக் கருணாநிதி விட்டு விட்டார் என்றெல்லாம் கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பார்களானால், அவர்கள் அப்படியே சஞ்சரிக்கட்டும். நாம் நம் வழியிலே நடப்போம். இதிலே ஒன்றும் குழப்பம் இல்லை.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.