சென்னை: ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று நடந்தது. முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட, 197 எம்.எல்.ஏ.,க்கள், 15 எம்.பி.,க்கள் ஓட்டு போட்டனர். தே.மு.தி.க., இந்திய கம்யூ., கட்சி எம்.எல்.ஏ.,க்கள், தேர்தலை புறக்கணித்தனர்.
தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஐ.மு., கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், தே.ஜ., கூட்டணியின் ஆதரவு பெற்ற சங்மாவும், தேர்தல் களத்தில் நேரடி போட்டியில் உள்ளனர். இதற்கான ஓட்டுப்பதிவு பார்லிமென்ட் மற்றும் மாநில தலைநகர்களில் நடந்தது. தமிழகத்தில், புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தில், தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரான சட்டசபை செயலர் ஜமாலுதீன் ஆகியோர் செய்திருந்தனர். தமிழகத்தில், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள தே.மு.தி.க., மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏற்கனவே தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து, அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க., காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த, 197 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும், 15 தமிழக எம்.பி.,க்கள் ஓட்டுப்பதிவில் கலந்து கொண்டனர்.
ஜெ., ஓட்டு: சட்டசபை கூட்ட அரங்கில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 10 மணிக்கு, முதலாவதாக, முதல்வர் ஜெயலலிதா சென்று ஓட்டளித்தார். அதன்பின், சபாநாயகர் ஜெயகுமார், அமைச்சர்கள், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்தனர். அ.தி.மு.க.,வினர் ஓட்டளித்து முடித்த நிலையில், 11.50 மணிக்கு, முதல்வர் கொடநாடு செல்வதற்காக புறப்பட்டு சென்றார். அப்போதைய நிலவரப்படி, 132 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்திருந்தனர். அவர் சென்ற ஐந்து நிமிடங்களில், முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி வந்தார். அடுத்த ஐந்து நிமிடங்களில், அவரும் ஓட்டளித்து விட்டு சென்றுவிட, தொடர்ந்து, ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்தனர். பகல் 12 மணிக்கு, 170 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட்டிருந்தனர். அதன் பின்பும், தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர். பிற்பகல் 1 மணிக்கு, 15 எம்.பி.,க்களும், 196 எம்.எல்.ஏ.,க்களும் ஓட்டளித்துவிட்ட நிலையில், ஓட்டளிக்காத ஒரே ஒரு எம்.எல்.ஏ., யார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. பகல் 1.30 மணிக்கு, அவரும் வந்து ஓட்டளித்து விட, ஓட்டுப்பதிவு முடிவுக்கு வந்தது.
37 பேர் ஓட்டு போடவில்லை: நேற்று மாலை வரையில், தேர்தலை புறக்கணித்த, தே.மு.தி.க.,வைச் சேர்ந்த 29 பேர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 8 பேர் என, 37 எம்.எல்.ஏ.,க்களை தவிர, மற்றவர்கள் அனைவரும் ஓட்டளித்திருந்தனர். தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுப்பெட்டி சீல் வைக்கப்பட்டு, தலைமைச் செயலக வளாகத்தில், போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்படுகிறது. தொடர்ந்து, இன்று, விமானம் மூலம் அதிகாரிகள் ஓட்டுப் பெட்டியை டில்லி கொண்டு சென்று, பார்லிமென்ட் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர்.
கடிதம் அனுப்பியதால் ஆதரித்தோம்: ஓட்டு போட்டு வெளியில் வந்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ""பிரணாப் முகர்ஜி ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார். தகுதியான நபர் அவர். அ.தி.மு.க., தரப்பில், எவ்வித தகவலும் எங்களுக்கு இல்லை. எனவே, பிரணாப் முகர்ஜியை ஆதரித்தோம்,'' என்றார். அதே போல், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறும்போது, ""ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் ஓட்டளித்தது, பெருமையாக இருக்கிறது,'' என்றார்.
கருணாநிதி வருகையால் பரபரப்பு: ஜனாதிபதி தேர்தலுக்காக, நேற்று கருணாநிதி ஓட்டளிக்க வந்தார். முதல்வர் புறப்பட்டு சென்ற பின், அவர் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 11.40 மணிக்கு, முதல்வர் புறப்படுவதாக தகவல் கூறப்பட்டதை தொடர்ந்து, கருணாநிதி அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டார். ஆனால், முதல்வர் ஜெயலலிதா கான்வாய், 11.50 மணிக்குத் தான் புறப்பட்டது. இதனால், கருணாநிதியின் கார் வந்தால், கோட்டைக்கு வெளியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. போலீசார் மத்தியில், பரபரப்பு தொற்றிக் கொண்டது. அவர்கள், உடனடியாக தகவல் அளித்ததன் பேரில், கருணாநிதியின் கார், சற்று தாமதமாக வந்தது. முதல்வர் கான்வாய் கோட்டையை விட்டு வெளியேறிய அடுத்த ஐந்து நிமிடத்தில், கருணாநிதியின் கார் உள்ளே நுழைந்தது. அமைச்சர்கள் கார் வெளியில் செல்வதில், சிறிது பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து, துரைமுருகன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களின் காரும் வந்துவிட, பரபரப்பு ஏற்பட்டது. பின், போலீசார் விரைவாக செயல்பட்டு, இன்னாள், முன்னாள் அமைச்சர்களின் கார்களை வெளியில் அனுப்பி வைத்து, பரபரப்பை கட்டுப்படுத்தினர்.
எம்.எல்.ஏ.,க்களுடன் செங்கோட்டையன்! சீனியர் அமைச்சராக பதவியில் இருந்து, திடீரென நீக்கப்பட்ட செங்கோட்டையன், புதிய அமைச்சரின் பதவியேற்பு நிகழ்ச்சியில், எந்த சலனமுமின்றி, சந்தோஷமாக பங்கேற்றார். தொடர்ந்து, கோட்டையில் நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பங்கேற்று ஓட்டளித்தார். ஓட்டளித்துவிட்டு வெளியில் வரும் போது, சிரித்த முகத்துடன் எப்போதும் போல் வந்தார். முதல்வர் எப்போதும் கோட்டையை விட்டு புறப்படும் போது, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வழியனுப்புவது வழக்கம். முன்பெல்லாம், முதலில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம், அடுத்ததாக செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி உள்ளிட்டவர்கள் நின்று, முதல்வருக்கு மரியாதை செலுத்தி வழியனுப்புவார்கள். ஆனால், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், நேற்று முதலில் பன்னீர்செல்வம், அடுத்தது நத்தம் விஸ்வநாதன், முனுசாமி என வரிசையாக அமைச்சர்கள், தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள் நின்றனர். எம்.எல்.ஏ.,க் கள் வரிசையில், இடையில் நின்று கொண்டிருந்த செங்கோட்டையன், முதல்வருக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அய்யயோ. இந்த கொசு தொல்லை தாங்க முடியல. கொஞ்ச நாள் மருந்தடிச்சி வச்சிருந்தாங்க போல. கடிக்காம இருந்தது. இப்போ வம்பா வலிய வந்து கடிக்க ஆரம்பிச்சிருக்கு. ஏம்பா மானா மூனா நீ அந்த காணாம போன பானா சுனா தானே. எந்த கட்சி காரனும் தண்ணியடிக்காம கீழே ஓடற புடிச்சு குடிக்கிற மாதிரியும், விஜயகாந்த் மட்டும் தான் தமிழ்நாட்டுல தண்ணி அடிக்கிற மாதிரியும் பேசுறீங்க. தேமுதிக காரங்க எல்லாம் வேற யாரும் இல்ல. அதிமுகவுல இருந்தும், திமுகவுல இருந்து பிரிஞ்சி வந்தவுங்க தான்....
ஓட்டுபோட வக்கில்லாதவங்க, எப்படிங்க வோட்டு கேட்க உரிமை இருக்கு, எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு ஒட்டுகேட்பாங்க, இதுல என்ன கத்திகிடவேண்டியிருக்கு, இவரு பிரணாப்க்கு வோட்டு போட்டால் தி.மு.க ஆதரவுன்னும், சங்கமா என்றால் ஜெயாபக்கம் சாய்கிறார் என்று சொல்லிவிடுவார்கள் என்ற பயத்தால் ஒதுங்கி கொண்டார் என்பதே உண்மை, வேறு ஒரு காரணமும் தெரியவில்லை....
தேமுதிக குடியரசு தலைவர் தேர்தலை புறக்கனிப்பதற்கான காரணத்தை திரு விஜயகாந்த் அவர்கள் என்றோ சொல்லிவிட்டார் அன்றும் பலர் தினமலர் வாயிலாக அதற்கு வாழ்த்தும் தெரிவித்தனர். பிறகு இன்று மாற்றி பேச காரணம் என்ன? அரசியல்வாதிகள் மட்டும் அல்ல மக்களும் தனது வசதிக்கேற்ப தான் பேசியதை மறந்தும், மறுத்தும் வருகிறார்கள் என்பதே உண்மை. நாம் திருந்தாத போது நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி மட்டும் எப்படி நல்லவராக திருந்துவார். தேர்தலை புறக்கணித்தேன் உண்மை காரணத்தை புரிந்து கொண்டு பிறகு பேசவும். நம்மில் எத்தனை பேர் அனைத்து தேர்தலுக்கும் ஓட்டு போட்டு தமது ஜனநாயக கடமையை செய்துள்ளோம்? காரணமே இல்லாமல் நாம் புறக்கணிப்பதை விட காரணத்தோடு தே மு தி க அதுவும் தமிழர் நலனுக்காக புறக்கணித்ததை எப்படி குறை கூற முடியும். அனைவரும் விஜயகாந்தை குறை கூறினார்களே தவிர அவரது கோரிக்கையை ஏன் பரிசீலிக்க வில்லை. பிரணாப்பை ஆதரித்த கருணாநிதி, சக்மாவை ஆதரித்த ஜெயலலிதா ஆனால் தமிழரை ஆதரித்தவர் விஜயகாந்த் தமிழருக்காக குரல் கொடுத்தவர் விஜயகாந்த். இதையே ஜெயலலிதா செய்து இருந்தால் தமிழர் நலனுக்காக ஜெயலலிதா குடியரசு தேர்தலை புறக்கணித்தார் என்று தினமலர் செய்தி போட்டிருக்கும் அதிமுக சொம்புகளும் ஜெயலலிதாவை புகழ்ந்திருக்கும். முதலில் உண்மை நிலையை புரிந்து பிறகு விமர்சனம் செய்யவும்....
தலைவரே, எல்லோரும் பிரனாப்புக்கு தான் ஒட்டு போட்டாங்களான்னு confirm பண்ணிக்குங்க.... ஏன் சொல்றேன்னா, முலாயம் சிங் முதல்ல சங்கமாக்கு தான் மாத்தி ஒட்டு போட்டுட்டாராம்.... அப்புறமா திரும்ப போய் அந்த வோட்டு சீட்ட வாங்கி, மாத்தி பிரனாப்புக்கு போட்டாராம்.... அவருக்கே குழப்பம் வந்து ஏடாகூடமா ஒட்டு போட்டாரு... அந்த மாதிரி நம்ம ஆளுங்களும் போட்டு இருக்க போறாங்க.... எதுக்கும் இப்பவே என்னிடறது நல்லது.... சொல்லிட்டேன் ஆமா......

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.