புதுடில்லி: முல்லைப் பெரியாறில், புதிய அணை கட்டுவதற்கு முன்னதாக, சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு நடத்த அனுமதி கோரி, கேரள அரசு சமர்ப்பித்த மனுவை, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்து விட்டது.
தமிழக-கேரள எல்லையை ஒட்டி, கேரளா இடுக்கி மாவட்டத்தில் உள்ளது, முல்லைப் பெரியாறு அணை. "116 ஆண்டு பழமையான இந்த அணை, நிலநடுக்கங்களால் பாதிக்கப் பட்டுள்ளது. எந்த நேரத்திலும் அணை உடையலாம். எனவே, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட வேண்டும்' எனக் கூறி, கேரள அரசு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
பாதுகாப்பாக உள்ளது: கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணையை ஆய்வு செய்ய உயர்மட்டக்குழுவை நியமித்தது. இந்தக் குழு, கடந்த ஏப்ரல் 25ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது. இருந்தாலும், புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளில், கேரள அரசு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, புதிய அணை கட்டுவதற்காக, அப்பகுதியில் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு நடத்த, கேரள அரசு முடிவு செய்தது. இதற்காக, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பித்தது. ஆனால், விண்ணப்பிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை, கேரள அரசு பின்பற்றவில்லை என்ற காரணத்தை கூறி, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், கேரள அரசின் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது. இதையடுத்து, புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, கேரள நீர் வளத்துறை அமைச்சகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
போட்டி அறிக்கை: இந்நிலையில், புதிய அணை கட்டுவது தொடர்பான தங்களின் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் அறிக்கைக்கு போட்டியாக, தங்களுக்கு சாதகமான தகவல்களை தெரிவிக்கும் மற்றொரு அறிக்கையை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, கேரள அரசு முடிவு செய்துள்ளது. மேலும், உயர்மட்டக் குழுவில், கேரள அரசு சார்பில் இடம் பெற்ற நீதிபதி கே.டி.தாமசின் அறிக்கையை, கேரள அரசு ஏற்கவில்லை என்றும் தெரிவிக்கப் படவுள்ளது. முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கு, வரும் 23ம் தேதி விசாரணைக்கு வரும்போது, இந்த விவரம் தெரிவிக்கப் படும் என, கேரள அரசு உயர் அதிகாரிகள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.