நாகர்கோவில்: நாகர்கோவில் ஸ்டேஷனில், கோவை பயணிகள் ரயிலின் இன்ஜின் தடம் புரண்டு வயலுக்குள் பாய்ந்தது.நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு, தினமும் காலை 7.20 மணிக்கு, பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. நேற்று காலை 6.30 மணிக்கு யார்டில் இருந்து, ரயில் ஸ்டேஷனுக்கு கொண்டுவரப்பட்டது. தண்டவாளத்தின் "என்ட்லைனை' இடித்து விட்டு இன்ஜின் தடம் புரண்டது.
இதில் இன்ஜினும், ஒரு பெட்டியும் வயலுக்குள் கவிழ்ந்தன.பிற பெட்டிகள் தனியாகக் கழற்றப்பட்டு, மாற்று இன்ஜின் மூலம் ஒரு மணி நேரம் தாமதமாக, கோவைக்கு புறப்பட்டு சென்றது. திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷனில் நெருக்கடியை குறைக்க, நாகர்கோவிலுக்கு பல ரயில்கள் நீட்டிக்கப்படுகின்றன. இதனால், நாகர்கோவிலில் இட நெருக்கடியும், ஊழியர் பற்றாக்குறையும் ஏற்பட்டு, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக, ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர். கடந்த ஆறு மாதங்களில் நடந்த மூன்றாவது விபத்து என்பதால், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.