கோவையில், ஆட்டோ மீட்டர் கட்டண முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, ஆட்டோ டிரைவர்களில் ஒரு தரப்பினர், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மீட்டர் கட்டணத்தில் ஆட்டோக்களை இயக்க, அரசுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள, இதுவே சரியான தருணம் என்ற கருத்து வலுத்துள்ளது.
கோவையில், ஆட்டோவில் ஒரு கி.மீ., தூரம் பயணம் செய்தாலும், குறைந்தபட்சம் 40 ரூபாய் வாடகை கொடுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஆட்டோ டிரைவர்கள் காரணம் கூறினாலும், அதிகபட்ச வாடகை வசூலிப்பதால் மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது. கேரளா மாநிலம் மற்றும் பெங்களூருவில் உள்ளதை போன்று கோவையிலும் ஆட்டோ மீட்டர் கட்டண முறையை அமல்
படுத்த வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கை.
கோவை மாநகரில் 12 ஆயிரத்து 500 ஆட்டோக்கள் இயங்குகின்றன. மக்கள் அதிகளவில் திரளும் முக்கிய இடங்களில் 1018 ஆட்டோ ஸ்டாண்ட்கள் உள்ளன. கோவையில் அரசியல் கட்சிகள் சார்பில் ஒன்பது ஆட்டோ தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன.
ஆட்டோ தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தால் மட்டுமே ஸ்டாண்ட்களில் நிறுத்தி ஆட்டோ ஓட்ட முடியும் என்ற நிலையுள்ளது. உறுப்பினர் சேர்க்கையில் அந்தந்த ஸ்டாண்ட்களில் ஆட்டோ ஓட்டுபவர்கள் வாரிசுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். உறுப்பினர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்டோ வைத்திருந்தால், அந்த ஆட்டோக்களை "ஆக்டிங்' டிரைவர் வைத்து இயக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
மேலும், சங்கத்திற்கு ஆண்டு சந்தா செலுத்த வேண்டும், ஸ்டாண்டிற்கு மாத சந்தா செலுத்த வேண்டும், சங்கம் சார்பில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நன்கொடை தர வேண்டும் என்று நிபந்தனைகளும் உள்ளன. எந்த சங்கத்திலும், எந்த ஆட்டோ ஸ்டாண்டிலும் உறுப்பினராக இல்லாத ஆட்டோ டிரைவர்கள் கோவையில் 220 பேர் உள்ளனர். போன் மூலம் வாடகை வாய்ப்பு பெற்று, பயணிகளை அழைத்து செல்ல பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனுக்கு அவர்கள் வரும்போது மற்ற ஆட்டோ டிரைவர்கள் பிரச்னை செய்வதாக கூறப்படுகிறது.
உறுப்பினர் அல்லாதவர்கள் ஸ்டாண்டில் ஆட்டோ நிறுத்த முடியாது. ஆட்டோக்களை ஸ்டாண்ட் இல்லாத இடங்களில் நிறுத்தினால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கின்றனர். இதனால், விரக்தி அடைந்த ஆட்டோ டிரைவர்கள் "நண்பர்கள் குழு' என்ற பெயரில் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டண முறையை அமல்படுத்த வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்யும் போது, ஸ்டாண்ட் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மாநகரில் எங்கு வேண்டுமானாலும் ஆட்டோ ஓட்டிக்கொள்ளலாம். குறைந்த பட்ச கட்டணமும், கிலோமீட்டர் கட்டணமும் நடைமுறைக்கு வரும்.
அதனால், ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த அதிகாரிகள் பேச்சு நடத்த வேண்டும் என்பதே பல தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து, வட்டார போக்கு
வரத்து துணைக்கமிஷனர் உதயணன் கூறுகையில், ""ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணத்தை அதிகாரிகள் தன்னிச்சையாக நிர்ணயம் செய்ய முடியாது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் புதிதாக ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து சென்னையில் ஆய்வு நடக்கிறது. கட்டண விபரம் குறித்து அரசாணை வெளியிட்ட பிறகு, மண்டல போக்குவரத்து பொறுப்பாளராக விளங்கும் கலெக்டர், கட்டண விபரத்தை உறுதி செய்து அறிவிப்பார். வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அதை அமல்
படுத்த வேண்டும்,'' என்றார்.
கலெக்டர் கருணாகரன் கூறுகையில், ""இது மாநில அளவிலான பிரச்னை. இந்த பிரச்னையில் அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால், புதிய கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஆட்டோ டிரைவர்கள் மீட்டர் பொருத்த முன்வந்தால், அதை அமல்படுத்துவது பற்றியும், கட்டணம் நிர்ணயம் செய்வது பற்றியும் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். குறைந்தபட்ச கட்டணம், மீட்டர் கட்டணத்தை அரசு அறிவித்த பிறகே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முடியும்,'' என்றார்.
ஆட்டோ கட்டணம் அதிகம் வசூலிப்பதை தடுக்கவும், மீட்டர் கட்டண முறையை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மேலோங்கியுள்ளது. "மீட்டர் கட்டணப்படி ஆட்டோக்களை இயக்க நாங்கள் தயார்' என, ஆட்டோ டிரைவர்களில் சிலர் அறிவித்துள்ளனர்; இதுதொடர்பான கோரிக்கை மனுவை கோவை கலெக்டரிடமும் அளித்துள்ளனர்.
இவர்களுக்கு தேவையான தொழில் பாதுகாப்பை அளித்து, ஆட்டோ மீட்டர் கட்டண முறையை அமல்படுத்த வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு. இதை அமல்படுத்துவாரா கலெக்டர்?
"சாதாரண மக்களின் பாக்கெட் காலியாகாது'
ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிப்பது பற்றி பொதுமக்கள் கருத்து:கண்ணன், திருப்பூர்: தொழில் விஷயமாக கோவைக்கு தினமும் வருகிறேன். பஸ் ஸ்டாண்ட் அருகே ஆட்டோ டிரைவர்கள் கேட்கும் கட்டணத்தால், ஆட்டோவில் செல்லவே பயமாக இருக்கிறது. ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் கொண்டு வந்தால், சாதாரண மக்களின் பாக்கெட் காலியாகாது. இந்த திட்டத்திற்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.ராஜா, கடைவீதி, கோவை: கோவையில் மாவுமில் வைத்துள்ளேன். தொழில்ரீதியாக ஆட்டோக்களை அழைக்க பயமாக உள்ளது. கேரளா, பெங்களூரு பகுதிகளில் மீட்டர் கட்டண முறையுள்ளது. அதேபோன்று கோவையிலும் மீட்டர் கட்டணம் வந்தால், ஆட்டோக்களில் மக்கள் அதிகம் பயணம் செய்வார்கள். அலுவலக வேலை, வீட்டு வேலைகளுக்கு கார் எடுத்து செல்வது குறையும். இதனால், போக்குவரத்து பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.காயத்திரி, சரவணம்பட்டி: ஆட்டோவில் 2 கி.மீ., செல்ல 80 ரூபாய் கூட கட்டணம் கேட்கிறார்கள். இதனால் ஆட்டோ பயணத்தை முழுமையாக தவிர்த்து விட்டோம். பாசஞ்சர் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து, மீட்டர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் நிம்மதியாக ஆட்டோவில் செல்ல முடியும்.தேவதாஸ், சின்னவேடம்பட்டி: ஆட்டோக்களுக்கு மீட்டர் வைத்தால், அதிக கட்டணம் வசூலிப்பது குறையும். இதனால் ஆட்டோ டிரைவர்களை வெறுத்த மக்கள், நண்பர்களாக பழகுவார்கள். பயணிக்கும், ஆட்டோ டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்படாது. மீட்டரை பார்த்து பணத்தை கொடுத்து செல்வார்கள். அதனால், மீட்டர் கட்டண முறையை தாமதமின்றி அமல்படுத்த வேண்டும்.ரகுராமன், ராமநாதபுரம்: கோவையில் ஆட்டோ கட்டணமும், டாக்சி கட்டணமும் ஒரே அளவில் உள்ளது. அதனால், மக்கள் ஆட்டோக்களை தவிர்த்து டாக்சியில் பயணம் செய்கின்றனர். ஆட்டோ கட்டணத்தை குறைத்து, மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்தால், அதிக வாடகை கிடைக்கும். டிரைவர்களுக்கும் கட்டுபடியான வருவாய் கிடைக்கும்.
"மக்களை ஏமாற்றாமல் தொழில் செய்யலாம்'கோவையில் மீட்டர் கட்டணத்தை அமல்
படுத்த வலியுறுத்தி போராடும் ஆட்டோ டிரைவர்கள் கூறியதாவது:
ஆனந்தன்: ஆட்டோவுக்கு குறைந்தபட்ச கட்டணமாக 30 ரூபாயும், கிலோமீட்டருக்கு 12 ரூபாயும் தற்போது நடைமுறையில் உள்ளது; இதை யாரும் கடைபிடிப்பதில்லை. தற்போதைய டீசல் விலைக்கு ஏற்ப மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்தால், அந்த கட்டணத்தில் ஆட்டோ ஓட்ட தயாராக இருக்கிறோம், இதனால் யாருக்கும் பாதிப்பு இருக்காது. மீட்டர் கட்டண முறை வரும் போது, தொழிற்சங்கம் இருக்காது, ஆட்டோ ஸ்டாண்டும் இருக்காது. ஆட்டோ கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பணம் பறிக்கும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.பக்ருதீன்: மக்களில் 95 சதவீதம் பேர் மீட்டர் கட்டணத்தை விரும்புகின்றனர். முக்கிய இடங்களில் ஆட்டோ ஓட்டுபவர்கள் அதிக கட்டணம் கேட்பதால், மக்கள் சபித்துக்கொண்டே பணம் கொடுக்கின்றனர். இதனால், அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. மீட்டர் பொருத்தினால், மக்கள் ஏமாற்றப்படுவது தவிர்க்கப்படும். அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் வருவாய் கிடைக்கும்.
சாதிக்பாட்சா: மாநகர எல்லை, புறநகர் பகுதி என பிரித்து ஆட்டோ கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விலைவாசி மற்றும் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப அரசு நியாயமான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். சென்னையில் குறிப்பிட்ட பகுதியில் மீட்டர் கட்டண முறை உள்ளது. அதேபோன்று கோவையிலும், மீட்டர் கட்டண முறை வரவேண்டும்.ரசூல்: ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் ஆட்டோக்களில் மக்களை ஏமாற்றி அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். சங்கத்தில் இல்லாத ஆட்டோ டிரைவர்கள் அங்கு குறைந்த கட்டணத்திற்கு ஆட்டோ ஓட்டினால் பிரச்னை செய்கின்றனர். மக்கள் ஏமாற்றி அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து, குறைந்த கட்டணத்தில் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.வெள்ளியங்கிரி: சங்கங்கள் அமைத்து, அதிக வாடகை வசூலிப்பதால், ஆட்டோ டிரைவர்களை பற்றி தவறான கருத்து மக்களிடம் ஏற்பட்டுள்ளது. மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்து அனைத்து
டிரைவர்களுக்கும் வாடகை கிடைக்கவும், வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அரசு முன்வர வேண்டும்.முகமது இப்ராகீம்: உறுப்பினர் அல்லாதவர்கள் ஆட்டோக்களை ஸ்டாண்டில் நிறுத்த விடாமல் பிரச்னை செய்கின்றனர். இதனால் ரோட்டோரத்தில் நிறுத்தும் போது, போக்குவரத்து போலீசார் குறைந்தபட்சம் 300 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர்; இரண்டு நாட்கள் கழித்து ஆட்டோவை ஒப்படைக்கின்றனர். மீட்டர் கட்டண முறை வந்து விட்டால், இந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
சேகர்: கோவையில் 18 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுகிறேன், 12 ஆண்டுக்கு முன், மீட்டர் கட்டண முறைக்காக போராட்டம் நடந்தது.
அரசியல் தலையீட்டால், தொழிற்சங்கத்தில் இருந்தால் தான் ஆட்டோ ஓட்ட முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. மீட்டர் கட்டணம் வந்தால்தான் மக்கள் மனம் கோணாமல் மீட்டரை பார்த்து பணம் கொடுப்பார்கள். ஆட்டோ டிரைவர்கள் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
rajadurai, இத்தன வருசமா இந்த விசயத்துல நம்ம தமிழ்நாடு அரசுகள் என்ன பண்ணிட்டிருந்ததோ, அதையே தான் இப்பவும் பண்ணும். இதுல எந்த மாற்றமும் இருக்காது. ஓடுற வண்டியில முக்காவாசி வண்டி போலீஸ்காரனோடதோ, அரசியல் வாதியோடதாவோ இருக்கும், ஒரே ஊர்ல ஒரே நம்பர்ல ரெண்டு வண்டி ஓடிட்டிருக்கும். அந்த ரெண்டு வண்டிக்கரங்களும் குறிப்பிட்ட ஏரியாவ தாண்ட மாட்டங்க. இது லோக்கல் போலீசுக்கும் தெரிஞ்சிருக்கும். இந்த தில்லாலங்கடி விசயத்துல ஆட்டோவுக்கு மீட்டர் போட முடியும்ன்னு நெனக்குரீங்களா? வாய்ப்பே இல்ல. தமிழ் நாடு அரசுக்கு இதெல்லாம் &39சப்பை&39 விஷயம். கண்டுக்காது. "நீ கெட்ட வார்த்தையில திட்டினாலும் நான் உள்ள வரமாட்டேன்" அப்பிடின்னு காமடி வசனம் பேசும், அவ்வளவுதான்.
கலெக்டர் கருணாகரன் கூறுகையில்.. "மீட்டர் கட்டணத்தை அரசு அறிவித்த பிறகே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முடியும்" என்றார். சரி இதுக்கு என்னும் எத்தனை வருசமாகும் சார்?_____ வட்டார போக்கு
வரத்து துணைக்கமிஷனர் உதயணன் கூறுகையில்.. "டீசல் விலை உயர்ந்துள்ளதால் புதிதாக ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து சென்னையில் ஆய்வு நடக்கிறது". இதுக்கு என்னும் எத்தனை வருசமாகும் சார்? பெங்களூர்ல பல வருசத்துக்கு முன்னாடி ஆய்வு முடிஞ்சு, பல வருசமா மீட்டர் போட்ட ஆட்டோ ஓடிட்டிருக்கு.உண்மைய்லேயே தமிழ் நாடு அரசு கையாலாகாத அரசு இல்லன்னா, தமிழ் நாட்டு ஆட்டோக்களுக்கு மீட்டர் போட்டு ஓட வைக்கட்டும் பாக்கலாம். இதுவர எந்த தமிழ்நாடு அரசும் செய்யாத, ஆனா மக்கள் பல காலமா எதிர்ப்பாத்துட்டிருக்குற முக்கியமான விஷயம் இது. பாக்கலாம் இந்த விசயத்துல நம்ம தமிழ் நாடு அரசு என்ன பண்ணுதுன்னு?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.