Pranab Mukherjee sworn-in as 13th President of India | வறுமை என்ற வார்த்தை, இந்திய அகராதியில் இருந்து அகற்றப்பட வேண்டும்: பிரணாப்| Dinamalar

வறுமை என்ற வார்த்தை, இந்திய அகராதியில் இருந்து அகற்றப்பட வேண்டும்: பிரணாப்

Updated : ஜூலை 26, 2012 | Added : ஜூலை 25, 2012 | கருத்துகள் (126)
Advertisement

""வெறும் வார்த்தைகள் அடங்கிய வாய்ஜால சமாளிப்பு வாக்குறுதிகளால், ஏழை மக்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. வறுமையை ஒழிக்க உருப்படியான திட்டங்கள் தீட்டப்பட்டு "வறுமை' என்ற வார்த்தை, இந்தியாவின் அகராதியில் இருந்தே அகற்றப்பட வேண்டும். நாடு வளம் பெறுவதில் விவசாயிகளும், தொழிலாளர்களும் முக்கிய பங்காற்றுகின்றனர் என்பதை மறந்து விடக்கூடாது,'' என்று புதிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.

நாட்டின் 13வது ஜனாதிபதியாக, பிரணாப் முகர்ஜி பதவியேற்கும் விழா, நேற்று டில்லியில் நடைபெற்றது. தல்கோத்ரா சாலையில் உள்ள தன் இல்லத்தில் இருந்து, காலை 8.30 மணிக்கு கிளம்பிய பிரணாப், நேராக ராஜ்காட் சென்றார். அங்கு காந்தி, நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா, ராஜிவ் ஆகியோரது சமாதிகளுக்கு சென்று மலர் தூவி வணங்கினார். பின்னர் அங்கிருந்து கிளம்பி, ஜனாதிபதி மாளிகைக்கு விரைந்தார்.


காரில் வந்தனர்: அங்கிருந்து சரியாக 10.30 மணியளவில், பிரணாப் முகர்ஜியும், பிரதீபா பாட்டீலும், ஒரே காரில் ஏறி பார்லிமென்ட்டிற்கு கிளம்பினர். முன்பெல்லாம் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்பவர், குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில், பார்லிமென்ட்டிற்கு ஊர்வலமாக அழைத்து வரப்படுவார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த நடைமுறை நேற்று மாறியிருந்தது. சாரட் வண்டிக்கு பதிலாக, கருப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் காரில், பிரணாப் முகர்ஜியும், பிரதீபா பாட்டீலும் வந்து இறங்கினர்.


அனுமதி கேட்ட செயலர்: பார்லிமென்ட் வாயிலில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் மீராகுமார், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கபாடியா ஆகியோர் அவர்களை வரவேற்றனர். அனைவரும் மைய மண்டபத்திற்கு சென்று அமர்ந்தவுடன், பதவியேற்பு விழா துவங்கியது. "விழாவை துவக்கலாமா' என, உள்துறை செயலர் கேட்க, பிரதீபா பாட்டீல் அனுமதி வழங்கினார். இதையடுத்து, பிரணாப் முகர்ஜிக்கு, நீதிபதி கபாடியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடவுளின் பேரால் பிரணாப் பதவியேற்றார். பின்னர் ஜனாதிபதி இருக்கையில் இருந்து பிரதீபா எழுந்து கொள்ள, பிரணாப் அதில் அமர்ந்தார். ஏற்கனவே, பிரணாப் அமர்ந்திருந்த இருக்கையில், பிரதீபா பாட்டீல் அமர்ந்தார். இருவரும் இருக்கைகளை மாற்றிக் கொண்டவுடன், புதிய ஜனாதிபதி பதவியேற்றுக் கொண்டதை அடுத்து, வெளியில், ராணுவத்தினரால் 21 குண்டுகள் முழங்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதி பதிவேட்டில் பிரணாப்பிடம் கையெழுத்து வாங்கப்பட்டதும், நாட்டு மக்களுக்கு அவர் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:


பஞ்சம்: அரசியல் சட்டத்தின் காப்பாளனாக, இங்கே சில நிமிடங்களுக்கு முன் உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். அந்த உறுதிமொழி வெறும் வார்த்தைகளாக மட்டும் இருந்து விடாமல், உண்மையில் உளப்பூர்வமாக நடந்து கொள்வேன். மேற்கு வங்கத்தில், எங்கோ உள்ள ஒரு சிறு கிராமத்திலிருந்து நாட்டின் தலைநகரான டில்லிக்கு வந்து, இத்தனை பெரிய பதவியில் அமர்ந்துள்ளேன். சிறுவனாக இருந்தபோது பஞ்சம் வந்து, அதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததை, இன்னும் நான் மறக்கவில்லை.


இழிவான வறுமை: காந்தி, நேரு, படேல், அம்பேத்கர், ராஜேந்திரபிரசாத், ஆசாத் ஆகிய தலைவர்கள் கொண்டிருந்த தேச நலனும், குறிக்கோளும் தொடர வேண்டும். வறுமை ஒழிக்கப்பட வேண்டும். வறுமையைப் போல இழிவான ஒன்று எதுவும் இல்லை. வெறும் வார்த்தைகள் அடங்கிய, வாய்ஜால சமாளிப்பு வாக்குறுதிகளால், ஏழை மக்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. வறுமையை ஒழிக்க, உருப்படியான திட்டங்கள் தீட்டப்பட்டு, வறுமை என்ற வார்த்தையையே இந்தியாவின் அகராதியில் இருந்து அகற்ற வேண்டும்.


நான்காவது உலகப்போர்: நாடு வளர்ச்சி அடைவதில், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர் என்பதை மறந்து விடக்கூடாது. நான்காவது உலகப் போர் என்பது பயங்கரவாதத்துக்கு எதிரானது. இந்த போரில் இந்தியா உறுதியுடனும், முனைப்புடனும் தனது பங்களிப்பை செய்யும். வன்முறையால் முன்னேற்றம் அடைந்து விட முடியாது. இந்தியாவைப் பொறுத்தவரை அமைதியையே விரும்புகிறது. பல ஆண்டுகள் நடக்கும் போரை காட்டிலும், சில நிமிட அமைதியே பெரியது. கல்விதான் இந்தியாவின் அடுத்த பொற்காலத்தை நிர்ணயிக்கப் போகும் கருவியாக இருக்கப் போகிறது என்பதே எனது கருத்து. இவ்வாறு பிரணாப் உரை நிகழ்த்தினார்.


இறுதியாக, பிரணாப்பின் உரையை, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி இந்தியில் மொழி பெயர்த்து பேசினார். மொத்தம் 15 நிமிடங்களில் பதவியேற்பு விழா நடைபெற்று முடிந்ததும், அனைவரும் விடைபெற்றனர். பிறகு, ஜனாதிபதி மாளிகைக்கு ஒரே காரில் பிரணாப் முகர்ஜியும், பிரதீபா பாட்டீலும் சென்றனர். அங்கு போனவுடன், புதிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, ராணுவத்தின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அங்கு போடப்பட்டிருந்த சிறிய பந்தலில் பிரதமர், சோனியா உள்ளிட்ட பலரும் இருந்தனர். பிரதீபா பாட்டீலுக்கு பிரியாவிடை கொடுக்கும் வகையில், அனைவரும் அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். விடைபெற்றுக் கொண்ட பிரதீபா பாட்டீலுக்கு, ராணுவ முப்படை வீரர்கள் இறுதியாக அணிவகுப்பு மரியாதை செய்ய, அனைவரிடமும் விடை பெற்று ஜனாதிபதி மாளிகையை விட்டு கிளம்பிச் சென்றார்.


மரபை உடைத்தார்: எப்போதுமே பதவியில் இருந்து விடை பெற்றுச் செல்லும் ஜனாதிபதியை, மூத்த மத்திய அமைச்சர் ஒருவர் தான் அழைத்துச் சென்று, வீட்டில் விட்டு வருவது வழக்கம். நேற்று இந்த மரபை, புதிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடைத்தார். பிரதீபா பாட்டீலை, அவரே அழைத்துச் சென்று, துக்ளக் சாலையில் உள்ள வீட்டில் போய் விட்டு விட்டு திரும்பினார்.


பிரதமரும், கலாமும்: மைய மண்டப பதவியேற்பு விழாவில், முன் வரிசையில் இடப்புறமாக பிரதமர் மன்மோகன் சிங்கும், அவரின் அருகே அப்துல் கலாமும் அமர்ந்திருந்தனர். இதையடுத்து, அந்தோணி, சரத்பவார், சிதம்பரம், கிருஷ்ணா, அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் அடுத்தடுத்து அமர்ந்திருந்தனர். வலப்புறமாக சோனியா, பிரதீபாவின் கணவர், பிரதமரின் மனைவி குர்சரண் கவுர், சதீஷ்சந்திர மிஸ்ரா, முலாயம் ஆகியோர் அடுத்தடுத்து அமர்ந்திருந்தனர்.


சக்கர நாற்காலியில் முதல் குடிமகள்: உடல் நலக்குறைவு காரணமாக நடந்து வருவதில், சிரமம் இருந்ததால், பிரணாப் முகர்ஜியின் மனைவி சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். சோனியா அமர்ந்திருந்த முன் வரிசையின் ஓரமாக, கடைசி மூன்று இருக்கைகளில் பிரணாப் முகர்ஜியின் மனைவியும், மகள்களும் அமர்ந்திருந்து நிகழ்ச்சிகளை பார்த்தனர்.


மாயமான மம்தா: திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வந்தவுடன், அரங்கம் பரபரப்பானது. முலாயம் சிங் எழுந்து போய், மம்தாவிடம் வலிய பேசினார். சம்பிரதாய புன்னகையையும், வணக்கத்தையும் மட்டுமே பதிலுக்கு சொன்ன மம்தா, அவரை கண்டுகொள்ளவே இல்லை. ஐ.மு., கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தும் கூட, அவர் அங்கே அமராமல், பின்னால் சென்று விட்டார். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், அவர் எங்கு போனார் என்பதும் தெரியாத வகையில், மாயமாய் மறைந்து விட்டார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை பதவியேற்பு நிகழ்ச்சியில் காணமுடியவில்லை.


தி.மு.க., "அப்செட்': வெளியில் இருந்து ஆதரிக்கும் சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கட்சிகளுக்கு முன் வரிசை அளிக்கப்பட்டிருந்தது. முலாயம், சதீஷ்சந்திர மிஸ்ரா ஆகியோர் முன்வரிசையில் அமர்ந்திருக்க, கூட்டணியின் மிக முக்கிய கட்சியான தி.மு.க.,வுக்கு முதல் வரிசையில் இடம் அளிக்கப்படவில்லை. டி.ஆர்.பாலும், சிவாவும் வந்து தங்களுக்கு முன் வரிசையில், இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதா என, பார்த்தனர். ஆனால், இரண்டாம் வரிசையில் தங்களது பெயர்கள் இருக்கவே, அங்கு போய் அமர்ந்தார் பாலு. அவருடன் வந்த சிவாவும், அருகில் இருந்த இருக்கையில் ஒட்டியிருந்த சீட்டை கிழித்து, அடுத்த இருக்கையில் ஒட்டிவிட்டு, பாலுவுக்கு அருகிலேயே உட்கார்ந்து நிகழ்ச்சிகளை கவனித்தார்.


ரோசையாவும், ஆல்வாவும்: மூன்றாவது வரிசையில் கவர்னர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழக கவர்னர் ரோசையா, சிவராஜ் பாட்டீல், எம்.கே.நாராயணன், மார்க்ரெட் ஆல்வா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். முதல்வர்களுக்கு, 5வது வரிசை ஒதுக்கப்பட்டிருந்தது. நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ், ஷீலா தீட்சித், அசோக்கெலாட், பூபீந்தர் சிங் ஹூடா, ஒமர் அப்துல்லா என, முதல்வர்கள் பட்டாளமும் வந்திருந்தனர். பத்திரிகையாளர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் ஆகியோர் மண்டபத்தின் மாடங்களில் இருந்து நிகழ்ச்சிகளை கவனித்தனர்.


மறக்காத சிதம்பரம்: நிகழ்ச்சிக்கு வந்திருந்த முதல்வர்கள், கவர்னர்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் நீதிபதிகள் என, எல்லாரையும், அவரவர் இடத்திற்கே சென்று உள்துறை அமைச்சர் வணக்கம் தெரிவித்து, கை குலுக்கி வரவேற்றார்.


அடுத்து கமல்நாத்? காலையில் பிரணாப் முகர்ஜியை, அவரது தல்கோத்ரா இல்லத்தில் இருந்து ராஜ்காட்டிற்கு அழைத்துச் சென்றவர் மூத்த அமைச்சர் கமல்நாத். பொதுவாக இந்தப் பணியை, அமைச்சரவையின் மிக மூத்த அமைச்சரிடம்தான் ஒப்படைப்பதே வழக்கம். அதனால், அவை முன்னவர் பதவி, கமல்நாத்திற்கு வந்து சேருமோ என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.


- நமது டில்லி நிருபர் -


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (126)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramalakshmi Srinivasan - chennai ,இந்தியா
26-ஜூலை-201223:16:47 IST Report Abuse
Ramalakshmi Srinivasan நேரு காலத்திலிருந்து வறுமையை ஒழிப்போம், வறுமையை ஒழிப்போம், வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழிப்போம் என்று காங்கிரஸ் கூறி வருகிறது. இதுவரை உருப்படியாக எதையும் செய்யவில்லை, நாட்டு மக்கள் பணத்தை சுரண்டியதை தவிர. பிரணாப் மந்திரியாய் இருந்து செய்யாதை ஜனாதிபதியாகிவிட்டபின் யாரிடம் சொல்லி வறுமையை ஒழிக்கப் போகிறார்.நேர்மையான அரசியல்வாதிகள் எல்லா கட்சிகளிலும் 90% உருவானால் தான் இது சாத்தியம். வரும் ஜந்தாண்டு காலத்திற்கு ஜனாதிபதி பதவியை அனுபவித்து விட்டு செல்லவும். அந்த பதவியில் உட்கார்ந்து கொண்டு வறுமையை ஒழிக்கமுடியாது
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
26-ஜூலை-201222:20:49 IST Report Abuse
Pugazh V இந்திய நாட்டின் ஜனாதிபதியை இங்கே ஒருவர் "திருடன்" என்கிறார் அநியாயம்- மரியாதை கெட்ட, கலாச்சாரமற்ற வார்த்தைகளுக்கு அளவே இல்லையா? அத்தனை வயதில் மூத்தவரை, பலப்பல புத்தகங்கள் படித்த அறிவாளி ஒருவரை, யாரோ ஒருவர், காரணமே இல்லாமல் இப்படியெல்லாம் பேசலாமா? கேவலமாக இல்லை??
Rate this:
Share this comment
Dhandapani Shanmugam - riyadh,சவுதி அரேபியா
27-ஜூலை-201202:55:23 IST Report Abuse
Dhandapani Shanmugamஇல்லவே இல்லை காரணம் அவர்கள் அந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் இல்லை....
Rate this:
Share this comment
Cancel
Vish - CA,யூ.எஸ்.ஏ
26-ஜூலை-201221:54:28 IST Report Abuse
Vish படித்த முட்டாள்கள் இவர்கள். வறுமை என்பது ஊழலின் நிழல். ஊழலை விரட்டினால் வறுமை மறைந்துவிடும். இந்நாள் அரசியல் தலைவர்கள் இந்நாட்டுக்கு சாபக்கேடு. அறிந்த எதிரியை அழிப்பது எளிது. ஆனால் இவர்களோ நம் வீட்டு பூஜை அறையில் அமர்ந்து கொண்டு நமக்கே சூனியம் வைப்பவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
suresh.s - doha,கத்தார்
26-ஜூலை-201221:45:15 IST Report Abuse
suresh.s காங்கிரெஸ் என்ற வார்த்தையை இந்திய அகராதியில் இருந்து எடுத்தால் நாடு சுபிக்ஷம் அடையும்.நாட்டின் 65 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் 55 வருடத்திற்கு மேல் ஆண்டு உலகிற்கே வறுமையின் நிறம் சிகப்பு என்று தெரிய வைத்ததுதான் காங்கிரஸின் சாதனை.
Rate this:
Share this comment
Cancel
tamizagadhi - Madras,இந்தியா
26-ஜூலை-201221:22:20 IST Report Abuse
tamizagadhi வறுமையை ஒழிக்கும் கதையெல்லாம் பிறகு.முதலில் இந்த ஜனாதிபதி பதவியை ஒழிக்கவேண்டும்.மக்களுக்கு எந்தப்பயனும் இல்லாத இந்தப்பதவியும் இந்த ஆடம்பரமும் மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் இதை முதலில் ஒழிக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
சாமி - மதுரை,இந்தியா
26-ஜூலை-201219:05:39 IST Report Abuse
சாமி சார் வறுமைய ஒழிக்கிரமோ இல்லையோ உங்கள் தலைமுறைக்கு வருமை ஒலிந்துவிட்டது .....
Rate this:
Share this comment
Cancel
Naga - Chennai,இந்தியா
26-ஜூலை-201218:51:17 IST Report Abuse
Naga ஜனாதிபதி ஆனோமா, ஊர் சுற்றி பார்த்தோமா அப்படின்னு இல்லாம , தேவை இல்லாம வறுமை , கருப்பு , சுவிஸ் , லஞ்சம் அப்படின்னு பேசகூடாது. ரப்பர் ஸ்டாம்ப் எல்லாம் பேசக்கூடாது .... சொல்ற இடத்துல கைநாட்டு போடணும்..
Rate this:
Share this comment
Cancel
Thiru - Chennai,இந்தியா
26-ஜூலை-201217:22:13 IST Report Abuse
Thiru புதிய ஜனாதிபதி பழைய ஞாபகத்தில் பேசுகிறார் போலும். ரூ.32 பட்டணத்திலும் ரூ. 28 பட்டிகாட்டிலும் சம்பாதிக்கும் குடும்பம் வறுமையில் இல்லை என்று அறிவித்தானர், அடுத்து என்ன ரூ.௦0.50 (ஏன்னா 50 பைசா விற்கு கீழ் வுள்ள பைசா செல்லாது) சம்பாதித்தால் வறுமையில் இல்லை என்று அறிவித்து விட்டால் போதும் என்று நினைத்து சொல்லியிருப்பார். அரசியல்ல இதெல்லாம் சகஜம்மப்பா
Rate this:
Share this comment
Cancel
Vaithiyanathan Natarajan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஜூலை-201217:15:51 IST Report Abuse
Vaithiyanathan Natarajan He did not do anything when he was a finance minister. Now he no need to do anything except signing some papers submitted by the parliament. Too much buildup is not good for health. Take rest in Rashtrapathi bhavan for next 5 years. Congress may need your little support after 2014 elections.
Rate this:
Share this comment
Cancel
R. Jagannathan - Chennai,இந்தியா
26-ஜூலை-201217:14:29 IST Report Abuse
R. Jagannathan அட, வறுமை இன்னும் ஒழியவில்லையா 25 வருஷங்களுக்கு முன்னால் இந்திரா காந்தி ‘கரீபி ஹடாவ்’ என்று சூ..மந்திரக்காளி போட்டு இன்று நாட்டில் வறுமையே இல்லை என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறேன் ப. சி. வேறு, மக்கள் எல்லோரும் பாட்டில் குடி தண்ணீரும், ஐஸ் க்ரீமும் தினமும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகத் தானே சொன்னார் ப்ரணாப்டாவை பேசாமல் ௫ வருஷம் எங்காவது வெளிநாடுகளைச் சுற்றி வரச் சொல்லுங்கள், ஏதாவது அவசரச் சட்டம் வந்தால் இருந்த இடத்திலிருந்தே கையெழுத்துப் போடச் சொல்லுங்கள் ஹூம்ம்ம்.. - ஜெகன்னாதன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை