கூடலூர்: உச்ச நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்ட, முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவேட்டை, மரக்கடத்தல் குற்றங்களைத் தடுக்க, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வனத்துக்குள் சுற்றுலா பயணிகள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆண்டுதோறும் சராசரியாக கிடைத்துவந்த 1.5 கோடி ரூபாய் வருவாயை இழந்துள்ளது, வனத்துறை.
நீலகிரி மாவட்டத்தில் 321 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட முதுமலை சரணாலயம், புலிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு, கடந்த 2007, டிசம்பர் முதல் புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டது. தொடர்ந்து, வனப் பகுதியில் வசித்து வந்த மக்களை வெளியேற்றி மாற்று இடம் வழங்கும் நடவடிக்கையும் துவங்கியது.
கூட்டு ரோந்து: இந்நிலையில், "புலிகள் வசிக்கும் பகுதிகள் மற்றும் காப்பகங்களில் சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது' என, கடந்த 24ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, 25ம் தேதி முதல் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டது. காப்பகம் மூடப்பட்டுள்ளதால், விலங்கு வேட்டை மற்றும் மரம் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்கள் அரங்கேற வாய்ப்புள்ளது.இதனைத் தடுக்கவும், புலி வேட்டைக்காரர்களை கண்காணிக்கவும் தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களின் வனத்துறையினர் இணைந்து கூட்டு ரோந்து பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பதிவு ரத்து: இதுகுறித்து, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் அமீர் ஹாஜா கூறியதாவது: கோர்ட் உத்தரவுப்படி முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டு, வாகன சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா விடுதிகளும் மூடப்பட்டுள்ளன. விடுதி கேட்டு சுற்றுலா பயணிகளால் ஏற்கனவே செய்யப்பட்டிருந்த, முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன. சுற்றுலா பயணிகள் வனப் பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இல்லாத காரணத்தால், வேட்டை மற்றும் மரம் கடத்தல் கும்பல் நுழையாமல் இருக்க தேவையான கூடுதல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தவிர, புலி வேட்டைக்காரர்களை கண்காணிக்க மூன்று மாநில கூட்டு ரோந்துப் படையினர், அடிக்கடி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
கடும் நடவடிக்கை: அனுமதியின்றி முதுமலை பகுதிகளில் நடமாடும் நபர்கள் மீது வனச்சட்டத்தின்படி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். காப்பகம் மூடப்பட்டதால், சுற்றுலா வருமானம் இருக்காது; எனினும், சுப்ரீம் கோர்ட் உத்தரவை எல்லோரும் மதிக்க வேண்டும். இவ்வாறு, அமீர்ஹாஜா தெரிவித்தார். முதுமலை போன்று பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் சுற்றுப்பகுதிகளிலும் வனத்துறையினர் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
வருவாய் இழப்பு: சுற்றுலா பயணிகள் நுழைவுக் கட்டணம், வாகன சவாரி மற்றும் யானை சவாரி கட்டணம் என, பல வகைகளிலும் ஆண்டுதோறும் சராசரியாக 1.5 கோடி ரூபாய் வரை வனத்துறைக்கு கிடைத்தது. அதே போன்று, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமும்,"காட்டேஜ்' களை வனப்பகுதிகளுக்குள் கட்டி சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டு வந்தது; இதன் மூலம், கழகத்துக்கும் நல்ல வருவாய் கிடைத்தது. தற்போது, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டதால், இவ்விரு துறைகளும் கணிசமான வருவாயை இழந்துள்ளன. இருப்பினும், புலிகளை பாதுகாப்பதே தற்போதைய அவசியம் என்கின்றனர், வனத்துறையினர்.
நெல்லையிலும் தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, நெல்லை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. நெல்லை களக்காட்டில் துவங்கி மேற்குத் தொடர்ச்சி மலையில் முண்டந்துறை வரை புலிகள் காப்பகம் உள்ளது. கோர்ட் தடையால், இங்கும், பாபநாசம் அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவி, செங்கல்தேரி அருவிகளுக்கும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
பசுமை இயக்கம் வரவேற்பு: தமிழக பசுமை இயக்க மாநில இணைச் செயலர் ஜெயச்சந்திரன் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு, புலிகளின் பாதுகாப்பில் மேலும் ஒரு மைல்கல். சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், புலிகளின் வாழ்க்கை; இனப்பெருக்க காலம் ஆகியவற்றுக்கு பாதிப்பு இருக்காது. அதேவேளையில், முதுமலை போன்ற வனப் பகுதிகளில், வேட்டைகாரர்கள், மரம் கடத்துபவர்களின் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவற்றை கண்காணிக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடைவிதித்துள்ளதால், குறிப்பாக, வனப் பகுதிகளில் "பிளாஸ்டிக்', பாட்டில்கள் வீசப்படுவது குறையும். இதனாலும், வன உயிரினங்கள் பாதுகாக்கப்படும். இவ்வாறு, ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சுற்றுலா பயணிகள் தடை வரவேற்கப்பட கூடிய ஒன்று... மனிதர்கள் மட்டும் தங்கள் வாழிடங்களில் எவரும் வர கூடாதபடி மதில் சுவர் எழுப்பி உட்காருகிறான்... பழைய காட்டுபகுதிகளை ஆக்கிரமித்த இடத்தில் மின்வேலி வைத்து வன விலங்குகளை தடுக்கிறான். மீறி வழி தவறி வந்தவற்றை வெடி வைத்தும் வனத்துறையை விட்டும் துரத்துகிறான். அதே போன்று இந்த மனிதர்களை, விலங்குகள் வாழும் காட்டுக்குள் விடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதானே நியாயம்?
Atleast before court came into aaction Govt took some action. Well. Why everytime when something explode action on the spot taken by some one. WHY DONT A LAW UNAPEALABLE PASSED THAT WHEREVER THERE ARE LACK OF ACTION WHICH RESULTED LATER ON "NO TIGER". "SAND SMUGGLING".SANITATION VIOLATION WENT UNCHECKED&39 " WASTE OF COURT TIME BY GOVT ETC ETC, WHY NOT THE CONCERENED BEAURACRACY DIVISIONS CONCERENED FOR 25 YERS BACK, SENT TO JAIL FOR 25 YEARS PUNISHMENT WITH THE CONFISCATION OF THE FAMILY ASSET?
இதில் என்ன வருவாய் இழப்பு? காட்டை, காட்டிலுள்ள ஜீவன்களை மனித மிருகங்கள் அழித்துவிட்டன. வனத்துறை என்பது காட்டைக்காக்கத்தானே தவிர காட்டை பயன்படுத்தி வருமானம் பெருக்கவும் லஞ்சம் வாங்கவும் அல்ல. இதை பத்திரிகைகளே புரிந்துகொள்ளாதபோது சாதாரண மக்கள் எப்படி புரிந்துகொள்வார்கள்? தினமலர் போன்ற பத்திரிகைகளே செய்திகளை எவ்வாறு வெளியிடவேண்டுமென்று தெரியாமல் செய்கிறார்கள்.
சுற்றுல பயணிகள் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பேப்பர், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் கெட்டு போன உணவு வகைகளால் வனத்தில் உள்ள ஊயிரினங்கலக்கு ஆபத்து நிறைந்து இருந்தது.... இப்போது அது முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது.... அது மட்டும் இல்லாமல் வேட்டையாடுபவர்கள் காட்டுக்குள் ஊடுரவலை பார்க்க ஹாய் டெக் பலூனில் காமெராவை பொருத்தி கண்காணிக்க செயலாம்....
வரவேற்க்கப்பட வேண்டிய விஷயம். வனவிலங்குகளின் நலனுக்காக எந்த ஒரு நல்ல விஷயம் செய்தாலும் அதை மனதார வரவேற்கலாம். ஆனால் சுற்றுலா பயணிகளை அனுமதிக்காமல் மற்றும் அங்கு உள்ள பழங்குடியினரையும் வெளியேற்றிவிட்டால் காடுகள் காலியாக இருக்கும். இது வன வேட்டைகாரர்களுக்கு வசதியாக போய் விடக்கூடும். காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் தான் காடுகளின் மற்றும் விலங்குகளின் காவலர்கள். அவர்களால் காடுகளுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்து இருக்காது. ஆனால் அவர்களை வெளியேற்றி விட்டு வனத்தையும் விலங்குகளையும் வெறும் வன துறை அதிகாரிகளை நம்பி ஒப்படைத்தால் ஆபத்து தான். அவர்கள் பணத்திற்கு மற்றும் இதர விஷயங்களுக்கும் விலை போய் விடுவார்கள். மக்களின் போக்குவரத்து இல்லாததினால் இனி வனங்களில் பல்வேறு காரணங்களுக்காக உயிரிழக்கும் அரிய மிருகங்கள் பற்றிய விஷயம் வெளியே வராமலும் போகலாம். வன கொள்ளையர்களுக்கு சாதகமாகவும் போய் விடலாம். இதை எல்லாம் வன ஆர்வலர்களும் விலங்கு ஆர்வலர்களும் தான் பார்த்து கொள்ள வேண்டும். வனவிலங்குகளுக்காக எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகளும் செய்யப்படும் ""தியாகங்களும்"" உண்மையிலேயே வனவிலங்குகளுக்கும் வானத்திற்கும் பயனுள்ளதாக இருந்தால் அது வரவேற்க்கப்பட வேண்டியது தான். புலிகளின் எண்ணிக்கையும் மற்ற வனவிலங்குகளின் எண்ணிகையும் பாதுகாப்பும் கூட வாழ்த்துக்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.