சென்னை: தமிழக அரசில் அமைச்சர்கள் மட்டுமில்லாமல், பல வித காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டு வருவதால், அதிகாரிகள் மத்தியில், ஒரு வித அச்சம் நிலவி வருகிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்து விட்டாலே, அதிரடிக்கு பஞ்சம் இருக்காது. கடந்தாண்டு மே மாதம் முதல் இதுவரை, ஆறு முறை அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், வருவாய்த்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனை நீக்கிவிட்டு, தோப்பு வெங்கடாசலம் புதிய அமைச்சராக மாற்றப்பட்டார்.
அதிரடி மாற்றம்: ஒரு புறம் அமைச்சர்கள் என்றால், மற்றொரு புறம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். ஆட்சி அமைந்ததில் இருந்து, இதுவரை ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம் என்பது 100க்கும் மேற்பட்ட முறை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த மே மாதத்தில் இருந்து, 18ம் தேதி வரை, ஒன்பது முறை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, துறையின் செயலர்கள், மாவட்டக் கலெக்டர்கள் மாற்றம், அனைத்து அதிகாரிகளுக்கும் மனதளவில் கிலியை உண்டாக்கியுள்ளது. மதுரையில் கலெக்டராக இருந்த சகாயம், விருதுநகர் கலெக்டராக இருந்த பாலாஜி ஆகியோர் மாற்றப்பட்டனர். இதில், சகாயம் கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டார். பாலாஜிக்கு இதுவரை எந்த பதவியும் வழங்காமல், காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதில், பாலாஜி மாற்றத்திற்கான காரணம், ஆளுங்கட்சி பிரமுகரின் பரிந்துரையை ஏற்காததா அல்லது மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் பேச்சை கேட்க மறுத்ததா? என்ற விவாதம் கோட்டையில் எதிரொலித்து வருகிறது.
அதிகாரிகள் அதிர்ச்சி: இதற்கிடையில், கடந்த வாரத்தில் திடீரென ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். வருவாய்த்துறைச் செயலராக இருந்த ரமேஷ்ராம் மிஸ்ரா, சுற்றுலாத் துறைக்கு மாற்றப்பட்டார். வருவாய் நிர்வாகத் துறை கமிஷனராக இருந்த ஞானதேசிகன், வருவாய்த் துறைச் செயலராக நியமிக்கப்பட்டார். சுற்றுலாத் துறைச் செயலர் ஜெயக்கொடி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை கமிஷனராகவும், சுற்றுலாத் துறை கமிஷனர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குனராகவும், அண்ணா மேலாண்மை நிறுவன இயக்குனர் ஹேமந்த் குமார் சின்கா, சுற்றுலாத் துறை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டனர். திடீரென யாரும் எதிர்பார்க்காமல் நடந்த இந்த அதிரடி மாற்றம், பின்னணியில் இருந்தவர்களைத் தவிர, மற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையான அதிகாரிகள் என்று பெயர் எடுத்தவர்கள் அடிக்கடி பந்தாடப்படுகின்றனர். ஒரு ஆண்டில் பல பொறுப்புகளில் முக்கிய அதிகாரிகள் இவ்வாறு நியமிக்கப்பட்டால், நிர்வாகம் எப்படி சிறப்பாக அமையும் என்பது அதிகாரிகளின் கேள்வியாக உள்ளது.
நிர்வாகத்தில் பாதிப்பு: "நிர்வாக வசதிக்காக அதிகாரிகளை மாற்றுவதை குறை கூற முடியாது' என்று அரசின் முடிவுகளுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் கூட, தற்போது மானம் மாறி, அடிக்கடி அதிகாரிகள் மாற்றுவதால் நிர்வாகத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற கூறத் துவங்கியுள்ளனர். "நேர்மையாக செயல்படும் அதிகாரிகள், எந்த பணி கொடுத்தாலும் அதனை தங்கள் பாணியில் செய்வதற்கு தயாராக உள்ளனர். இன்னும் சொல்லப் போனால், அத்தகைய அதிகாரிகள் பல்வேறு துறைகளுக்கு மாறுதலாவதன் மூலம், அந்தந்த துறைகள் சுத்தமடையும். ஆனால், அவர்களின் அதிரடி இட மாறுதல்களுக்கு பின்னணியில் அரசியல் இருக்கிறது என்பது வருத்தமளிப்பதாக உள்ளது' என்றார் மூத்த அதிகாரி ஒருவர். காரணம் அறியாமல், அதிகாரிகள் பந்தாடப்படுதவால், அவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. உத்வேகத்துடன் பணிகளை மேற்கொண்டவர்கள், தங்களது வேகத்தை குறைத்துக் கொண்டு, எப்போது, எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எண்ணத்தோடு பணி செய்யத் துவங்கியுள்ளனர். இதற்கிடையில், இன்னும் சில அமைச்சர்கள், அதிகாரிகள் மாறுதல் பட்டியல், முதல்வர் கையில் இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம் என்கிறது கோட்டை வட்டாரம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஐ ஏ எஸ் அதிகாரிகளை பொருத்தமட்டில் பதவி மாற்றம் முக்கியமான இடம் இல்லை முக்கியத்துவம் இல்லாத இடம் என்ற அளவில் போய்விடும். ஆனால் தலைநகரில் தான் இருப்பார்கள். இதே மாற்றங்கள் ஆசிரியர்களை எந்த அளவிற்கு பந்தாடுகிறது தெரியுமா ? சென்னை பள்ளி ஆசிரியர்களை நகரத்திற்கு வெளியே எந்த காரணம் இன்றி மாற்றி விட்டு ஆவர்களுக்கு பதிலாக புதிதாக வெளியில் இருந்து நியமிக்க பட்டனர்.இந்த இடங்கள் கலந்தாய்வு கூடத்தில் கூட காண்பிக்கப்படவில்லை .முந்தய ஆட்சிக்கும் இன்றைய ஆட்சிக்கும் எந்த மாற்றமும் இல்லை. சொல்லப்போனால் இன்னும் மோசமாய் போகிறது
என்ன மாற்றம் வந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது எவருக்கும் அறியுமோ ...? எந்த ஆட்சி வந்தாலும் தமிழகம் முன்னேறுகிறதோ இல்லையோ .....மக்கள் பிரதி நிதிகளின் வீட்டு வளர்ச்சியும் ,,பேங்க் சேமிப்பு வளர்ச்சியும் ,,,அவர்கள் சொந்தபந்தங்கள் வளர்கிறார்களே தவிர ,,,,தமிழகம் என்றுமே வளர்ச்சி அடைந்ததாக யாராவது அருதியிட்டி கூறமுடியுமா ?....மானம் கேட்ட ஆட்சியாளர்கள் (கட்சி பேதம் இல்லை )
மாற்றப்பட்டவர்கள் தவறு செய்தார்கள் என்பதற்காக மாற்றப்பட்டார்களா ?? இல்லை ஆளும் கட்சிகாரனை பற்றி கவலைப்படாமல், பேச்சைக் கேட்காமல் மக்களுக்கு நல்லது செய்வதால் மாற்றப்படுகிரார்களா ?? இல்லை வசூலுக்கு இடைஞ்சலாக இருப்பதால் மாற்றப்படுகிறார்களா ?? நமக்கே தெரியும், சகாயமும், மற்ற நல்லவர்களும் தாராந்து போன கதை தான் எல்லாருக்கும் தெரியுமே..
தினமலருக்கு ஒரு ஷொட்டு. தன் பத்திரிகை கடைமையை செவ்வனே ஆற்ற நினைப்பது, தமிழக மக்களுக்கு நல்லது. தவறுகள் ஏற்படும் பட்சத்தில் எத்தரப்பினராயிருந்தாலும் இடித்து காட்டி சம்பந்தப்பட்டவர்களை சரியான திசையில் செயல்பட வைப்பதை வரவேற்போம். பொதுவாகவே ஆளுங்கட்சி தலைமைக்கு குறை சொல்பவர்களை பிடிப்பதில்லை. குறையை நிவர்த்தி செய்பவர்களாக இருந்தால் தமிழகத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் மாற்றுக்கட்சி ஆட்சிய பிடிக்க வழி ஏற்பட்டிருக்காது .
யாருதாயா இந்த அதிரடிகளுக்கு தப்புனாங்க ...எம் எல் எ , கவுன்சிலர் , நல்ல அதிகாரிகள் யாரு தப்புனா... இல்ல கடவுள் தூணிலும் இருப்பார் என்பது போல இவுங்க அடவாடிதனமும் சட்டசபை கட்டிடம் , நூலக கட்டிடம் என்று எல்லாத்திலேயும் வியாபித்துல்ல இருக்கு , அது போல துரும்பிலும் இருப்போம்னு துரும்பு போன்ற அப்பாவி மக்களின் கட்டண உயர்விலும்ல இருக்கு ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.