சென்னை:மாநகராட்சி பதிவேடுகளில், இந்தாண்டு மட்டும், 29 பேர் காலராவுக்கு பலியானதாக, பதிவான தகவல் உண்மையா என்பது குறித்து, மாநகராட்சி விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணையை துவங்கி உள்ளனர்.
கடந்த நான்கு வாரங்களாக, சென்னையில், வாந்தி, பேதி பாதிப்பு தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை கிட்டத்தட்ட, 300 பேர் பாதிக்கப் பட்டு உள்ளனர். இவர்களில், நான்கு பேருக்கு காலரா என, உறுதி செய்யப் பட்டது.
வரிசையாய் மரணம்:
வாந்தி, பேதியால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குள்ளம்மாள் என்ற பெண், கடந்த 21ம் தேதி இறந்தார். அவர், காலராவால் இறக்கவில்லை, சிறுநீரக பாதிப்பால் இறந்தார் என, மருத்துவமனை நிர்வாகம் மறுத்து உள்ளது. அதே மருத்துவமனையில் வாந்தி, பேதியால் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற பாஞ்சாலி என்ற பெண் சிகிச்சை முடிந்து, கடந்த 21 ம் தேதி வீடு திரும்பினார். அவர், 24 ம் தேதி மாலை மரணம் அடைந்தார். அவரும் சிறுநீரகக் கோளாறால் இறந்ததாக மாநகராட்சி தெரிவித்தது.
சர்ச்சை என்ன?
இந்த சூழலில், யாரும் அதிகம் கவனிக்காத மாநகராட்சி மரண பதிவேட்டில் உள்ள விவரங்கள் மீது, தற்போது கவனம் திரும்பி உள்ளது. அதன் படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் இறுதி வரை, 29 பேர் காலராவால் பலியானதாக பதிவு செய்யப் பட்டு உள்ளது. இதே விவரம் மாநகராட்சி இணையதளத்திலும் வெளியிடப் பட்டு இருந்தது.இந்த தகவலை மேயர் சைதை துரைசாமி, கடந்த 25ம் தேதி நடந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மறுத்தார். கூட்டத்தில், இது குறித்து, மேயர் கூறும்போது, ""புதிதாக இணைந்த மண்டலங்களிருந்து, மூன்று மாதங்களில் பிறப்பு, இறப்பு பதிவேடுகள் மாநகராட்சி இணைய தளத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. புது மண்டலங்களில் தனியார் டாக்டர்கள் அளித்த இறப்பு சான்றிதழில்,"ஞிச்ணூஞீடிச்ஞி ச்ணூணூஞுண்t' (கார்டியாக் அரெஸ்ட்) என்று இருந்ததை, கம்ப்யூட்டர் இயக்குனர்கள் தவறுதலாக, "ஞிடணிடூஞுணூச்' (காலரா) என, பதிவு செய்து விட்டனர். கவன குறைவால் பதிவில் குளறுபடி நடந்து விட்டது.காலராவால் யாரும் இறக்கவில்லை,'' என்றார். மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளும் இதையே கூறினர்.
ஆய்வு கூட்டங்கள் எதற்கு?
"ஆவணங்கள் பதிவு பணியில், ஒப்பந்த ஊழியர்களே பணியில் உள்ளனர், அவர்கள்தான் தவறு செய்துவிட்டனர்' என, மாநகராட்சி தெரிவித்து வருகிறது.ஆனால், மூன்று மாதங்களில், 15 நாட்களுக்கு ஒரு முறை, ஆறு ஆய்வு கூட்டங்களை மேயர் நடத்தியுள்ளார். அப்போது, ஆவணங்களில் காலரா இறப்பு பதிவாகி உள்ளதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட கவனிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூட்டங்கள் ஒப்புக்கு நடந்ததா என்ற கேள்வியும் எழுகிறது. இதனால், மாநகராட்சி செயல்பாட்டை, மக்கள் கிண்டலடிக்கும் அளவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. மேயர் சைதை துரைசாமி, தன் பங்கிற்கு, "இதில் சதித்திட்டம் இருக்கலாம்' என்று கூறி வருகிறார்.
விசாரணை எதற்கு?
தன் நிலையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக, மாநகராட்சி தற்போது, "விஜிலென்ஸ்' பிரிவு விசாரணையை துவங்கி உள்ளது. அதன்படி, ஆவணப் பதிவுகளில் மாற்றி பதிவு செய்ததற்கு ஊழியர்கள் கவனக்குறை காரணமா? சதி செயல் ஏதும் நடந்ததா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடப் படும்.ஆணவங்கள் பதிவு அறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் விசாரிக்கப் பட்டு உள்ளனர். தொடர்ந்து, பதிவகத்தின் பொறுப்பாளர், மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப் படும். ஓரிரு நாட்களில், இந்த விசாரணை முடிவடையும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சென்னையில் காலரா இப்போது சிலபகுதிகளில் மட்டுமே உள்ளது, ஆனால் மிக விரைவில் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடிய அபாயம் உள்ளது, காரணம் இப்போது புது முறையாக, பலதெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை தெருக்களின் ஓரம் ஆங்காங்கே ஒரு தடுப்பு ஏற்பாடு செய்து அதில் குப்பை வண்டிகளோடு குப்பைகளையும் அதில் வைக்கிறார்கள், இது பின்னர் குப்பை வண்டிவந்து அந்த குப்பைகளை எடுத்து செல்வதாக ஏற்பாடு, இவ்விடம் சரிவர சுத்தன் செய்யபடாததால், இப்படி சேகரித்து வைக்கப்படும் குப்பைகள் அந்த இடத்திலும் , சுற்று வட்டாரத்திலும் பெரும்பாலும் சிந்தி அசுத்தத்தை ஏற்படுத்துகிறது , இதை சுற்றி எலி, நாய், கொசு, ஈ போன்றவை பெரியஅளவில் காணபடுகிறது. இவைகள் இந்த பகுதியை கடப்போருக்கும், குடியிருப்போருக்கும் பெரும் அஷௌகரியத்தை ஏற்படுத்துகிறது, இது மாற்றப்படவேண்டும். இல்லையெனில் சென்னை முழுக்க காலரா பாதிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
நயவஞ்சகர் ஆட்சியில் ஏறினால் நாடு நாறிப்போவது இயற்கைதானே... எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் முந்தைய ஆட்சியை காரணம் காட்டி... அதற்காகத்தான் மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களித்தனர்...இப்போது உள்ளவர்கள் யோக்கியர்கள் என்றால் எல்லா குறைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டியதுதானே....அதை விட்டு ஆடத்தெரியாதவன் தெரு கோணல் என்று சொன்ன கதையாக முந்தைய ஆட்சி ..முந்தைய ஆட்சி...என்று கூவினால் போதுமா? பார்ப்போமே இந்த யோக்கியர்கள் என்ன கிழிக்கிறார்கள் என்று..இப்போதே கவுன்சிலர்கள் அராஜகம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது...இனி 4 ஆண்டுகளில் என்ன ஆகுமோ...
தாத்தா , என்னை கடலில் தூக்கி போடுங்கள் , கட்டுமரமாகி உங்களை மூழ்காமல் பார்ப்பேன் என்கிறார் ... அம்மா , என்னை வானத்தில் வீசி எறியுங்கள் , ஹெலிகாப்டராக மாறி உங்களை விழாமல் தாங்கி பிடிப்பேன் என்கிறார்.. அனால் இவர்கள் எங்களை கூவத்தில் எறியுங்கள் , சுத்தமாக்கி வருவோம் என்று சொல்ல மாட்டேன் என்கிறார்களே ...
நான் சிறுவயதிலிருந்தே சென்னைவாசிசொந்த வீடு, தொழில் எல்லாம் சென்னையில்தான். எங்கள் பகுதியில் குப்பைக் கூளம் அவ்வளவாக சேருவதில்லை. ஏனெனில் மக்கள் நெருக்கம் குறைவு,சுகாதார விழிப்புணர்வு அதிகம் (முன்பு மாநகராட்சியை நம்பாமல் நாங்களே எக்ச்னோரா மூலம் சுயமாக சுற்றுப்புற தூய்மை, சுகாதாரம் வளர்த்தோம்) சாக்கடை அடைப்பும் அபூர்வம்.ஆனால் நெருக்கமாக மக்கள் குடியிருக்கும் வட சென்னைப் பகுதிகளைப் போய்ப் பாருங்கள் குடிநீர், கழிவு நீர் குழாய் அமைக்கவே இயலாது.இட நெருக்கடி. குறுகிய தெருக்கள்,சாலைகள் .திட்டமிடப்படாத வளர்ச்சி.பிளாட்பாரம் முழுவதும் சுகாதாரமற்ற தள்ளுவண்டி உணவகங்கள் . அவர்கள் அந்த இடத்திலேயே உணவுக் குப்பைகளை வீசிப் போகும் காட்சி. கொடுங்கையூர், பள்ளிக்கரணையில் குப்பை கொட்ட இடமேயில்லாமல் மாநகராட்சி தவிக்கும் நிலைமை பல் இடங்களில் அவசரத்துக்கு ஒரு ஆம்புலன்ஸ் கூட புக முடியாது அவர்கள் நிலைமை பரிதாபமாக உள்ளது.இப்போது விரிவடைந்து கொண்டிருக்கும் சென்னைப்புறநகர் பகுதிகள் எல்லாம் சில ஆண்டுகளுக்கும் முன் பிரமாண்ட ஏரிகள், முப்போகம் விளையும் வயல்களாக இருந்தது தெரியுமா.இப்போதோ அவை கான்கிரீட் காடுகள் .நமக்குத் தேவை Sustainable Growth .முழு மாநிலமும் சரி சமமாக வளர்ந்தால் ஒரே நகரத்தில் மக்கள் நெருக்கமும், போக்குவரத்து நெரிசலும், சுகாதாரக் கேடுகளும் அதிகரிக்குமா? அதிக நகரமயமாக்குதலும், நரகமயமாக்குதலும் ஒன்றே...
ஆரூரார் சொல்வது உண்மை தான் மக்கள் நெருக்கம் அதிகமாகிக் கொண்டே போவது நல்லதல்ல. கடந்த 50 வருடங்களின் ஆட்சியாளர்களும் சென்னையை மையமாக வைத்தே அனைத்து திட்டங்களையும் தீட்டியதால் மற்ற மாவட்டங்களில் வேலைவாய்ப்பு குறைந்து விட்டது. இயற்கையாக சென்னையில் மக்கள் குடியேற்றத்தைக் குறைக்கலாம். மற்ற மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் இது சாத்தியப்படும். நான் இப்போது சென்னையில் இல்லை, ஆனால் இயற்கையான மாசுபடாத ஒரு சூழலில் வாழவே மனம் விரும்புகிறது....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.